Home இலங்கை நினைவுகளில் தமிழறிஞர்:   க. உமாமகேசுவரம்பிள்ளை – பா. துவாரகன்!

நினைவுகளில் தமிழறிஞர்:   க. உமாமகேசுவரம்பிள்ளை – பா. துவாரகன்!

தமிழ் கூறும் நல்லுலகில் ஓர் ‘அதிதீரன்’ (1934.05.05 – 2024.04.20) - பகுதி- 1

by admin

 

2005 – 2008 காலப்பகுதியில் நான் கொழும்பில் சுகாதார அமைச்சில் பணியாற்றி வந்தேன். அக்காலப் பகுதியில் பல்துறை ஆளுமைகளை நேர்காணல் செய்து  கனடாவிலிருந்து வெளிவரும் வைகறை என்ற வார இதழில் பிரசுரித்தேன். கலை இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்டவரான திருமதி கோகிலா மகேந்திரன் அவர்களைச் செவ்வி கண்ட போது அவர் எனக்குக் கூறினார், நீங்கள் சந்திக்க வேண்டிய ஒருவர் இருக்கிறார். பண்டிதர் உமாமகேசுவரன்; அவர் தமிழுலகில் ஒரு வைரச் சுரங்கம்; தன்னை வெளிப்படுத்த மாட்டார். அவரிடமுள்ளதை வெளி உலகிற்குக் கொண்டு வரல் வேண்டும் என்று கூறினார்.

உமாமகேசுவரன் அவர்களை தெஹிவளையில் அத்தப்பத்து மாவத்தையில் அமைந்துள்ள ஒரு மாடி வீட்டின் மேல் தளத்தில் முதன்முதலில் சந்தித்தேன். எனது விருப்பத்தைத் வெளிப்படுத்தினேன். “பேட்டி காண்பதை இன்னோர் தடவை பார்ப்போம்; தமிழ் படிப்போம்” என்றார்.  18 வருடங்களாக அவரைச் சந்தித்து உரையாடிய விடயங்கள்; அவர் கற்பித்தவை; தமிழ் இலக்கணம் தொடர்பான சந்தேகங்களுக்கு அவர் அளித்த பதில்கள்; அருகேயிருந்து வாசித்த கதைகள், அவரது கடிதங்கள், செவ்வை பார்த்த கட்டுரைகள், அவரும் நானும் கேட்ட இசை….

இந்தப் பூமிக்கு ஒரே ஒரு சூரியன்!  அந்த சூரியனுக்குக் கீழ் இருந்து அவரும் யானும் உரையாடியவை, நயந்தவை: சமயம், இலக்கியம், இலக்கணம், மொழிபெயர்ப்பு, சங்கீதம், ஒழுக்க நெறிகள், நீதிநூல்கள், சமகால உலகு என்றவாறு விரிந்து செல்லும்.

நான்கு தலைமுறை வழிவந்த தமிழ்மரபை, கல்விப் பாரம்பரியத்தை அவரிடமிருந்து அறிந்து கொண்டேன்; ஆறுமுகநாவலர் – சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர் – பண்டிதர் சி. கதிரிப்பிள்ளை – க. உமாமகேசுவரன்.

கொழும்பிலே வார விடுமுறை நாள்களில் அவரைச் சந்தித்து அவர் கூறும் விடயங்களைக் குறிப்பெடுத்துக் கொள்வேன்; அவ்வப்போது ஒலிப்பதிவு செய்வதும் உண்டு. நான் யாழ்ப்பாணத்துக்கு இடமாற்றலாகி வந்த பின்னர் அவரைச் சந்திப்பதற்காகவும் கொழும்புக்குச் செல்வதுண்டு. பின்னர் யுத்தம் முடிவுக்கு வந்தபின்னர் உமாமகேசரன் அவர்கள் யாழ்ப்பாணம் வந்தனர். அவரும் மனைவியும் கோண்டாவிலில் வாடகை வீடொன்றில் வசித்து வந்தார்கள்.

கோண்டாவிலில் அவர்கள் வசித்த போது சிலவேளை ஒரு மாதம் அவரை சந்திக்காது பின்னர் சந்திக்கச் சென்று திரும்பும்போதெல்லாம் எனக்கு மிகுந்த துயரம் ஏற்படுவதுண்டு. அவர் இன்று கூறிய விடயங்களை இந்த உலகில் வேறு எங்கு நான் கேட்டு அறிந்து கொள்வேன்? ஒரு செவ்வியல் இலக்கிய நூலை வாசித்தும் அறிய முடியாதவற்றை அவரிடமிருந்து கேட்டு அறிந்து கொண்டேன். இவ்வளவு நாள்களும் இவரைச் சந்திக்காது இருந்து விட்டேனே என்ற கவலை ஏற்படும்?

உமாமகேசுவரன் அவர்கள் ஒரு போதும் அறநெறியை விட்டு விலக மாட்டார்கள். ஒரு கடினமான சொல் அவரிடமோ அவரது மனையாளிடமிருந்தோ என்றுமே வந்ததில்லை. அவருக்கு அருகிலே இருப்பது தவப்பொழுது. அவரிலே தழுவி வருகின்ற அந்தத் தென்றல் காற்று இனி எங்கே கிடைக்கும்? சிலவேளைகளில் அவர் ஐபாட்டில்(iPad) ஏதாவது வாசித்துக் கொண்டிருப்பார்; அல்லது ரஞ்சனி-காயத்திரியினதோ அன்றி அபிஷேக் ரகுராமினதோ கச்சேரியைக் கேட்டுக் கொண்டிருப்பார். நான் அவருக்கு அருகில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களில் ஏதாவது ஒன்றை எடுத்து வாசிப்பேன். எனது நேரம் வந்ததும் நான் “சென்று வரப்போகிறேன்” என்பேன். அவர் சொல்வார், “மெத்த நல்லது” என்று. அப்போது அவரது மனையாள் திருமதி சாவித்திரி ஆசிரியை கூறுவார், “துவாரகன் உங்களிடம் படிக்க வந்திருக்கிறார். நீங்கள் ஐபாட்ஐ பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.” அதற்கு அவர் சொல்வார், “துவாரகன் எதுவும் கேட்கவில்லை. அவர் தன்பாட்டில் ஏதோ படிக்கிறார்.”

இறுதிக் காலத்தில் சில வருடங்கள் அவரால் நடமாட முடியாத நிலை ஏற்பட்டது. “நான் எவ்வளவு காலத்துக்கு இருப்பேனோ தெரியாது. நீங்கள் கேட்க வேண்டிய எல்லாவற்றையும் என்னிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்” என்பார்.

உமாமகேசுவரன் அவர்கள் அச்சது பொடிசெய்த “அதிதீரன்” ஆகிய விநாயகப் பெருமான் மீது அளவற்ற பத்தி கொண்டவர். இதனால் தனது மூத்த மகனுக்கு சுமுகன் என்ற பெயரையும் சேக்கிழாரது ஒப்புவமையில்லாப் பெரிய புராணத்தின் பத்திச் சுவை சொட்டும் பாடல்கள் மீது கொண்ட காதலால் இளைய மகனுக்கு சேக்கிழான் என்று பெயரையும்  வழங்கி மகிழ்ந்தார்.

அவர் தெல்லிப்பழையில் விழிசிட்டி என்ற ஊரில் பிறந்ததார். நான் பிறந்து வளர்ந்த ஏழாலைக் கிராமத்திலும் விழிசிட்டி என்ற குறிச்சி உள்ளது. நானும் அண்ணாவும் சிறுவர்களாக இருந்த போது விழிசிட்டியில் எங்களது வீட்டுக்கு அருகே வசித்த சின்னையா உபாத்தியாயர்(சின்னையா மாஸ்ரர்) வீட்டுக்குத் தினமும் மாலை 6.00 மணிக்குப் படிக்கச் செல்வோம். நான் இப்போதும் உறுப்பாகத் தமிழ் எழுதுவேன் என்றால் அதற்கு சின்னையா ஆசிரியர் அவர்களே காரணமாவார். “தி” னாவுக்கு எப்படி விசிறிபோடுவது என்று அவர் சொல்லித்தந்தது இப்போதும் ஞாபகம் இருக்கிறது. நானும் உடன் பிறந்தவர்களும் ஏழாலை தெற்கு அமெரிக்கன் மிசன் தமிழ்க் கலவன் பாடசாலையிலேயே ஆரம்பக் கல்வியைக் கற்றோம். எங்கள் காலத்தில் அதிபராக இருந்த நவரத்தினம் ஆசிரியர், அவரது மனையாள் இராணி ரீச்சர், ஆசிரியை திருமதி இரத்தினம் ஆகியோர் எனது நினைவில் வரும்  ஆரம்ப கால ஆசிரியர்கள்.

தெல்லிநகருக்குத் (தெல்லிப்பழை) திலகம் என்றால் தெல்லிப்பழை துர்க்கா தேவி ஆலயம். இன்று உலகெங்கும் வாழும் சைவத் தமிழர்கள் மத்தியில் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஒரு திலகமாகத் திகழ்கின்றாள். 1986 இல் நான் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் 6 ஆம் ஆண்டில் சேர்கின்றேன். அந்தக் கல்லூரியின் கீதத்தில், “யூனியன் தாயை” வாழ்த்துகின்ற போது “தெல்லி மணிநகர்க்கோர் திலகம் எனத் திகழ்ந்து” என்று ஒருவரி வரும். இதுவும் அமெரிக்கன் மிசனரிகளால் உருவாக்கப்பட்ட பாடசாலை; 1816 இல் தாபிக்கப்பட்டது. இங்கு சாதாரண தரம் வரை தமிழ் படித்தேன். தமிழாசிரியர்களில் இராஜேஸ்வரி, திருமதி. சுப்பிரமணியம் (மகாலட்சுமி) ஆகியோர் என் நினைவுக்கு வருகின்றார்கள். நான் உயர்தரத்தில் கணிதத்துறையிற் சேர்ந்தேன். பல்கலைக்கழகத்திலும் கணிதத்தையே  கற்றேன்.

ஒருநாள் எமது கல்லூரியில் படித்தவரும் 3 வருடங்கள் இளையவனுமான இந்திரமோகனுடன் (மருத்துவர்) அளவெட்டியில் வசித்த ஆங்கில ஆசிரியர் திரு. க. சுப்பிரமணியம் அவர்களைச் சந்திக்கச் சென்றவேளை எமது தமிழ் ஆசிரியர்களில் ஒருவரான மகாலட்சுமி ரீச்சரது கணவர் தான் திரு. க. சுப்பிரமணியம் ஆசிரியர் என்பதை அறிந்தபோது ஆச்சரியமாக இருந்தது. திருமதி. சுப்பிரமணியம் ஆசிரியை அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகக் கலைப் பட்டதாரி. பேராசிரியராக வரவேண்டியவர்; குடும்பச் சூழல் அதற்கு இடம் கொடுக்கவில்லை. சில வருடங்களுக்கு முன்னர் திருமதி சுப்பிரமணியம் ஆசிரியை அவர்கள் காலமாகிய செய்தியை உமாமகேசுவரன் ஆசிரியர் அவர்களிடம் சொன்ன போது நீங்கள் அவரைப் பற்றி ஒரு அஞ்சலிக் குறிப்பு கட்டாயம் எழுத வேண்டும் என்று சொன்னார். இன்னும் எழுதவில்லை.

உமாமகேசுவரன் அவர்கள் பண்டிதராக, நாவலர் பரம்பரையைச்1 சேர்ந்தவராக இருந்தபோதிலும் அவர் பயிற்றப்பட்ட ஒரு ஆங்கில ஆசிரியராகக் கடமையாற்றினார். சோ.ப. என்று குறிப்பிடப்படும் நாடறிந்த கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான சோமசுந்தரம் பத்மநாதன் அவர்கள் உமாமகேசுவரன் அவர்களோடு பலாலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் உடன் பயின்றவர்.

நான் பாடசாலைக் காலத்துக்குப் பின்னர் தமிழ் மொழியை அதன் சிறப்பை, இலக்கியக் கருவூலங்களை, தொல்காப்பியத்தை, நன்னூலை அறிந்து கொண்டதும், நல்ல தமிழை எழுதக் கற்றுக் கொண்டதும் ஆசிரியர் உமாமகேசுவரன் அவர்களிடமிருந்தே.

சிலகாலத்துக்கு முன்னர் வடபுல யாழ்ப்பாணத்தில் ஆங்கில மருத்துவத்தை அறிமுகப்படுத்தியவர்களையும் மருத்துவர் கிறீனையும் பற்றிய மருத்துவ வரலாற்றுத் தொடரை உதயன் ஞாயிறு பதிப்பில் தொடராக எழுதி வந்தேன். அவை 26 வாரங்கள் வெளிவந்தன. வாரந்தோறும் பத்திரிகையில் வெளிவந்த ஆங்கில மருத்துவ வரலாற்றுத் தொடரைப் படித்த பலர் எனது எழுத்துக்களைப் பாராட்டியிருந்தனர். உணர்வழியியல் சிகிச்சை நிபுணரான திருமதி. ஜானகி, இருதய சிகிச்சை நிபுணர் லக்ஷ்மன், சத்திர சிகிச்சைத்துறைப் பேராசிரியரும் சத்திரசிகிச்சை நிபுணருமான ரவிராஜ், சத்திர சிகிச்சை நிபுணர் தயாளன் அம்பலவாணர் முதலானோர் எனது எழுத்துக்கைளைப் பாராட்டி தொடர்ச்சியாக எழுதுவதற்கு ஊக்கம் அளித்தனர்.  இத்தொடரை எப்போது நூலாக்குவீர்கள் என்று மருத்துவர்கள் சிலர் கேட்டனர். இந்தப் பாராட்டுக்களுக்கு எந்தவகையிலும் நான் உரியவன் அல்லேன்.  இந்தப் புகழ் அனைத்துமே எனது தமிழாசிரியர் உமாமகேசுவரம் பிள்ளை அவர்களையே சாரும்.   (தொடரும்)

 

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More