நெஞ்சை உருக்கும் கதை
பண்டிதர் க. உமாமகேசுவரன் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த வியற்நாமியச் சிறுகதையான ‘புதிய வீடு’ வசந்தம் இதழில் 1965 ஆம் ஆண்டு பிரசுரமாகியது. ‘நாம் கோ’ இதனை வியற்நாமிய மொழியில் எழுதினார். இப்படி ஒரு கதையை தான் மொழிபெயர்த்ததை நீண்ட காலமாக உமாமகேசுவரன் மறந்தே போயிருந்தார்!? அல்லது அவர் கூறத் தயங்கியும் இருக்கலாம். பிரசுரமாகி ஏறத்தாழ 55 வருடங்களுக்குப் பிறகு நூலக இணையத்தளத்தில் தேடிக் கண்டெடுத்தேன். அன்று நாம் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தோம். கதையை அவருக்கு வாசித்துக் காண்பித்தேன். இந்தக் கதை பிரசுரமான பின்னணியை அவர் சொன்னார்.
“நான் இந்தக் கதையை மொழிபெயர்த்து தெல்லிப்பழையிலே வீட்டிலே வைத்திருந்தேன். ஒரு நாள் வீட்டுக்கு வந்த எழுத்தாளர் செ. யோகநாதன் கதையைப் படித்துவிட்டு என்னிடம் கூறாமலே அதனை எடுத்துச் சென்று வசந்தம் இதழில் பிரசுரித்தார்”.
“மூலத்தின் சுவை குன்றாது மொழிபெயர்த்தலுக்கு இம் மொழிபெயர்ப்பு சிறந்த உதாரணம்” என்ற வாசகத்தையும் அறிமுகக் குறிப்பிலே செ. யோகநாதன் எழுதியிருந்தார்.
இந்தக்கதையை ஒரு நூலாக வெளியிடல் வேண்டும் என்றும் அதற்கு பொருத்தமான படங்கள் வரைதல் வேண்டும் என்றும் உமாமகேசுவரன் விரும்பினார். அந்த நூலிற்கு ஒரு முகவுரையுடன் அவரது நயப்புரையையும் எழுத எண்ணினேன். அவர் வாழ்ந்த போது அந்தச் சிறுநூலையாவது வெளியிட முடியவில்லையே என்று வருந்தும் – அவரது “காலம் கடந்தேங்கும் இதயம்1” இது.
மூங்கிலால் கட்டிய குடிசை வீட்டிலே படிந்திருந்த வறுமையை வெளிப்படுத்தும் வரிகளையும் பரிவை ஏற்படுத்தும் உருக்கமான விடயங்களையும் பற்றி நாம் உரையாடினோம். திடீரென வீசிய புயலால் அழிந்துபோன வீட்டைப்பற்றி ‘நாம் கோ’ எழுதுவதை உமாமகேசுவரன் பின்வருமாறு தமிழில் தருகின்றார்.
“தங்கள் பிள்ளைகளை அளவுக்கதிகமாகவே நேசிக்கும் சில வயதான பெற்றோர், தங்கள் பிள்ளைகள் மீது ஈமச் சடங்குக்கான செலவை சுமத்தி விடக்கூடாது என்பதற்காகவே தாம் சாக விரும்புவதில்லை. ஏன் இப்படி என்னுடைய வீடும் எண்ணியிருக்கக் கூடாது?”
யாழ்ப்பாணத்தில் இன்று சாதாரண ஒரு அரச ஊழியரால் காணி வாங்கி வீடுகட்டுவதென்பது அரிது; அமைதியான வாழ்வும் கனவே. ஒரு காலத்தில் உலகில் மனிதர்கள் வாழச் சிறந்த இடமாக யாழ்ப்பாணத்தின் அழகிய கிராமங்கள் விளங்கின. 1980 களின் பின்னர் நியூயோர்க் நகரத்தில் சொந்தமாக ஒரு வீடு இருப்பது ஈழத்தமிழர்களின் கனவாகியது.
இணையத்தில் கண்டெடுத்த சிறுகதையை இலண்டனில் வசிக்கும் உமாமகேசுவரனது தம்பிக்கு மின்னஞ்சலில் அனுப்பினேன். ஜெகா கதையைப்படித்துவிட்டு மு. நித்தியானந்தனுக்கு அனுப்பினார். கதையைப் படித்துவிட்டு நித்தியானந்தன் அனுப்பிய சிறுகுறிப்பை “இந்த விவரத்தை அண்ணாவுக்குத் தயவுசெய்து தெரிவிக்கவும்” என்ற செய்தியுடன் ஜெகதீஸ்வரன் எனக்கு மின்னஞ்சலிட்டார்.
“அன்பின் ஜெகதீஸ்வரம்பிள்ளை அவர்களுக்கு,
உமாமகேஸ்வரம்பிள்ளை அவர்களின் அழகிய மொழிபெயர்ப்பில் வெளியான ‘புதிய வீடு’ கதை நெஞ்சை உருக்கும் கதை. நேர்த்தியான கதை அமைப்பு, சுவையான தமிழில் அழகாக வெளிவந்திருக்கிறது. ‘நாம் ஹோ’வின் ஏனைய கதைகளையும் தேடி வாசிக்கத் தூண்டுகிறது. இந்த அழகிய கதையினை மொழிபெயர்ப்புக்குத் தேர்ந்தமை உமாமகேஸ்வரம்பிள்ளையின் இலக்கிய ரசனையை காட்டுகிறது.
………………
அன்புடன்
மு.நித்தியானந்தன் (2020.02.28)”
புதிய வீடு என்னும் வியற்நாமியச் சிறுகதையின் முடிவு பின்வருமாறு,
“இன்பம் என்பது எங்களைப் பொறுத்த வரையில் சிறியதொரு போர்வை. யாராவது ஒருவன் புரண்டு படுக்கையில், போர்வையை இழுத்துக்கொண்டால் மற்றொருவன் தன்னை மூடிக்கொள்வதற்குப் போதியதளவு இல்லாது தவிக்கின்றான். நான் கெடுதி செய்ய விரும்பவில்லை. ஆனால் நான் என்னதான் செய்ய முடியும்? ஏன் வாழ்க்கை இத்தனை துயரம் நிரம்பியதாக இருக்கிறது. பிறிதொருவனுக்குத் துன்பம் தராமலே தன்னைப்பற்றி எண்ணமுடியாதா? ”
ஒரு புத்தகமும் ஒரு மொழிபெயர்ப்புச் சிறுகதையும்
உமாமகேசுவரன் எழுதிய கட்டுரைகள் நூற்றுக்கும் அதிகம்; கடிதங்கள் பல; பதிப்பித்த நூல்கள் சில. அதிதீரன் அவர் எழுதிய ஒரேயொரு நூல்; 13 கட்டுரைகளின் தொகுப்பு. புதிய வீடு, அவர் அதர்ப்படயாத்த(மொழிபெயர்த்த) ஒரேயொரு சிறுகதை. இது தமிழில் வெளியான சிறந்த மொழிபெயர்ப்புக்களில் ஒன்று என்பது மு. நித்தியானந்தனது கணிப்பு.
உமாமகேசுவரன் சில வருடங்கள் நடமாட முடியாத நிலையில் இருந்தார். இருப்பினும் ‘ஐபாட்’டில் தட்டச்சுச் செய்து கடிதங்கள் வரைந்தார். கடந்த ஆண்டு சமசெட் மோம் (Somerset Maugham) எழுதிய ‘Mr. Know All’ சிறுகதையை மொழிபெயர்க்க விரும்பினார்; அது கைகூட வில்லை; அல்லது நான் அவருக்கு மொழிபெயர்க்க உதவவில்லை என்றும் கருதலாம்.
நியூயோர்க் நகரிலிருந்து போருக்குச் சென்று திரும்பிய வீரன் ஒருவன் தன் மனைவியையும் அழைத்துக்கொண்டு கப்பலில் உல்லாசப் பயணம் செல்கின்றான். கதை நிகழ்களம் கப்பல். எல்லாம் தெரிந்த ஒரு மகா கெட்டிக்காரனும்(‘Mr. Know All’) அக் கப்பலில் பயணம் செய்கின்றான். இந்தக் கதை தரும் படிப்பினை: “ஒரு புத்தகத்தை அதன் அட்டையை மட்டும் வைத்து நீங்கள் மதிப்பிடுவீர்களெனில் நீங்கள் ஏமாந்து போவீர்கள்” என்பது ஒரு வாசகனது கருத்து.
மதுரைப் பண்டிதர்கள் மூவரிடம் கற்கும் பேறு
உமாமகேசுவரனது வாழ்க்கைக் குறிப்பைப் பதிவு செய்தவர்களில் ஒருவர் கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரி முன்னாள் விரிவுரையாளர் முருகேசு கௌரிகாந்தன். உமாமகேசுவரன் யாழ்ப்பாணம், தமிழகம் என்ற இருநாட்டு புலமைப் பாரம்பரியத்தினூடாக வந்தவர் என்று கௌரிகாந்தன் கலாசுரபி மலரில் நிறுவியுள்ளார்.
வீட்டிலே தந்தையார் கதிரிப்பிள்ளையிடமும் பரமேஸ்வரக் கல்லூரியில் வியாகரண சிரோமணி பிரம்மஸ்ரீ தி. கி. சீதாராம சாஸ்திரிகளிடமும் கற்று வடமொழியில் வல்லவரானார்.
இங்கிலீசுச் சட்டம்பியார் என அழைக்கப்பட்ட உமாவின் பெரிய தந்தையார் விஸ்வநாதரிடமும் பரமேஸ்வரக் கல்லூரியில் பேரா. வி. செல்வநாயகம், திரு. கனகசிங்கம், சுப்பிரமணிய ஐயர் ஆகியோரிடமும் கற்று ஆங்கில மொழியில் புலமை எய்தினார்.
உமாமகேசுவரன் பரமேஸ்வரக் கல்லூரியில் பயின்றகாலை முதலாம் வருடம் நவநீதகிருஷ்ண பாரதியாரிடம் தமிழ் கற்றார். இங்குதான் வித்துவான் வேந்தனார், பண்டிதர் ஆறுமுகம் கனகசபை ஆகியோரிடமும் தமிழ் படிக்கும் வாய்ப்புக் கிடைக்கின்றது.
“வெள்ளை அண்ணை என்று அழைக்கும் பண்டிதர் ச. இராமச்சந்திரன் அவர்களே பரமேஸ்வரவில் எனக்குத் தமிழுணர்வை ஊட்டியவர். வெள்ளை அண்ணை பரமேஸ்வர விடுதிச்சாலையில் இருந்து மாலைவேளைகளில் கற்பிப்பார். இராமச்சந்திரனே மேடைப்பேச்சுக்கு எவ்வாறு தயார்ப்படுத்துவது என்பதை எனக்குக் கற்றுத் தந்தவர்” என்பார் உமாமகேசுவரன். யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்த இராமச்சந்திரன் பள்ளிக்கூடம் போகாமலே தனது பாட்டனாரிடம் கற்று ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கம் நடத்திய பண்டித பரீட்சையில் தனது 15 ஆவது வயதில் சித்தியெய்தினார். இராமச்சந்திரன் ஆயுள்வேத வைத்திய பரம்பரையைச் சேர்ந்தவர்; வானியலிலும் மருத்துவத்திலும் வடமொழியிலும் வல்லவர். இராமச்சந்திரன் இளவயதில் இறந்தமை துயர் மிக்கது.
மல்லாகத்தில் பண்டித மாணவ கழகத்தில் உமாமகேசுவரன் பயின்றபோது இலக்கண வித்தகர் பண்டிதர் இ. நமசிவாய தேசிகர், பண்டிதர் க. நாகலிங்கம், பண்டிதர் ச. பொன்னுத்துரை, பண்டிதை தங்கம்மா அப்பாக்குட்டி ஆகியோரிடமும் கற்று பிரவேச, பால பண்டித தேர்வுகளில் சித்தியெய்தினார். அறிவை வளர்ப்பதற்காக தேசிகரிடம் வீடுசென்று கற்றதுடன் யாழ். நாவலர் பாடசாலைக்குச் சென்று வித்துவான் சுப்பையா பிள்ளையிடமும் பயின்றார். பலாலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் ஆங்கில ஆசிரியருக்கான விசேட பயிற்சி பெற்றவேளை இரண்டாம் வருடத்தில் பண்டிதர் க. சச்சிதானந்தன் அவர்களிடம் தமிழ் படிக்கும் வாய்ப்புக் கிடைக்கின்றது.
பரமேஸ்வரக் கல்லூரி பண்டிதர் கலாசாலையில் ஒருசாலை மாணவர்களாகக் கற்று மதுரைப் பண்டிதர்களாகிய க. நாகலிங்கம், க. சச்சிதானந்தன், ஆ. கனகசபை ஆகியோரிடம் கற்றதைத் தவப்பயன் என உமாமகேசுவரன் நினைவு கூர்வார்.
தந்தையார் கதிரிப்பிள்ளைக்கு அடுத்துத் தமிழைக் கற்றுத்தந்தவர் என்று இலக்கண வித்தகர் இ. நமசிவாயதேசிகரை நினைக்குந்தோறும் ‘இலக்கண அம்புலி காட்டிச் சிந்தையில் இன்பஞ் செழித்திடச் செய்த தேசிக மாமணிச் செவிலி’ என்று உருகுவார். தேசிகரைச் சிறப்பித்து உமாமகேசுவரன் எழுதிய கவிதை வருமாறு :
தேசிக மாமணி வாழ்க !
செந்தமிழ் மொழியின் செழுமையைச் சுவையை
திரட்டிநற் பாகெனச் செய்தே
என்றெனுக் கன்போ டெடுத்தெடுத் தூட்டி
இலக்கண அம்புலி காட்டிச்
சிந்தையில் இன்பஞ் செழித்திடச் செய்த
தேசிக மாமணிச் செவிலி2
கந்தவேள் அருளால் இசைபட வாழ்க
காலமெ லாந்தமிழ் வளர்த்தே.
1. மங்கை பங்கன் என்ற பெயரில் உமாமகேசுவரன் எழுதிய கட்டுரை, பலாலி அரசினர் ஆசிரிய கலாசாலை மலர் “கலாவதி”யில் (1967) பிரசுரமாகியது. இது பரீட்சை வினாத்தாளுக்கு அவர் எழுதிய கட்டுரை.
2. நற்றாய் உமாவின் தந்தை அமரர் பண்டிதர் சி. கதிரிப்பிள்ளை
(தொடரும்)