Home இலங்கை பாக்குநீரிணையில்லையேல் இலங்கையின் அரசியல் இருப்பு கேள்விக்குரியதே!

பாக்குநீரிணையில்லையேல் இலங்கையின் அரசியல் இருப்பு கேள்விக்குரியதே!

by admin

இலங்கையையும் இந்தியாவையும் பிரிக்கும் பாக்கநீரிணையே இலங்கையை தீவாகவும் ஓரரசாகவும் பேணுவதற்கு வழிவகுத்துள்ளது. பாக்குநீரிணையில்லையேல் இலங்கையின் அரசியல் இருப்பு கேள்விக்குரியதே என அரசறிவியல்துறை பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் கூட்டணியின் தேசிய மாநாடு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற்றது

மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

புவிசார்ந்து எழுச்சியடைந்துள்ள அரசியலையே புவிசார் அரசியல் என இலகுவாக வரையறுத்துக் கொள்ள முடியும். புவியானது இயல்பாகவே தனக்கென தனித்துவமான அரசியல் செல்நெறியைக் கொண்டுள்ளது. அத்தகைய புவிசார் பரப்பை மையப்படுத்தியே இறைமைபடைத்த தேசிய, பல்லினத் தேசிய அரசுகளைக் கொண்டு செயல்படுகின்றன. அத்தகைய புவிசார் கூறுகள் புவிப்பரப்பில் இருப்பைக் கொண்டுள்ள அரசுகளின் இயல்புகளையும், பண்புகளையும்,நடைமுறைகளையும் தீர்மானிக்கின்றன.

அதாவது புவிசார் இருப்பைப் பேணும் மக்கள் கூட்டம் புவிசார் தன்மைக்கு ஏற்ப அரசியல் நியமங்களை வரையறுத்து நடைமுறைப்படுத்துகின்றன. அதனையே புவிசார் அரசியல் எனும் கருத்தியலாக அரசறிவியல் கற்கைநெறி 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலப்பகுதியிலிருந்து கோட்பாட்டுக் கற்கையாக உருவாக்கியுள்ளது.

இத்தகைய புவிசார் இருப்பானது தமிழ் மக்களது அரசியலுக்கான போராட்டத்தை கடந்த வரலாறு முழுவதும் வடிவமைத்துள்ளது. இலங்கைத் தீவு இந்தியாவுக்கு அண்மையிலிருப்பதும், இந்து சமுத்திரத்தின் மையத்தில் அமைந்திருப்பதும் அதன் கேந்திர முக்கியத்துவத்தை வலிமையாக்கியுள்ளது என்பது அதன் புவிசார் அரசியல் புரிதலாகவே உள்ளது.

அதுவே சர்வதேசத்தை ஆளும் சக்திகள் இலங்கைத் தீவை நோக்கி நகர்வதற்கும் தென் இலங்கை ஆட்சியாளர்கள் தமிழருக்கு எதிராக போர் புரிவதற்கும் இந்திய எதிர்ப்புவாதத்தை கொண்டு செயல்படுவதற்கும் காரணமாகிறது.

அத்தகைய இந்திய எதிர்ப்புவாதமே தமிழ் மக்களுக்கு எதிரான அரசியலாக பரிமாணம் எடுத்துள்ளதையும் காணக்கூடியதாக உள்ளது. இலங்கைத் தீவின் அமைவிடம் சார்ந்து தென் இலங்கை ஆட்சியாளரினதும் மக்களதும் நீண்ட அரசியல் வரலாற்றில் இந்தியா மீதான அச்சம்,இந்திய எதிர்ப்புவாதத்தை வளர்த்தெடுத்துள்ளது.

அத்தகைய இந்திய எதிர்ப்புவாதமே இலங்கைத் தீவில் வாழும் தமிழ் மக்கள் மீதான அரசியலாக உள்ளது. இதனை எதிர் கொள்வதற்கான அரசியலே தமிழ் மக்களது அரசியல் போராட்டங்களாக மாறியுள்ளன. அதற்கான அடிப்படையில் எழுச்சிபெற்ற தமிழ் மக்களது போராட்டங்கள் இந்தியா சார்ந்தே உருவானது.

அதற்கு இலங்கை-இந்திய புவிசார் அரசியலே அடிப்படைக் காரணமாகும். இலங்கை இந்தியாவையும் இந்தியா இலங்கைத் தீவையும் மையப்படுத்திய அரசியலானது இலங்கை-இந்திய புவிசார் அரசியலாக உள்ளது.

புவிசார் அரசியல்

சர்வதேச அரசியலில் பிரபலமான கோட்பாடுகளில் ஒன்றாக புவிசார் அரசியல் கோட்பாடு விளங்குகின்றது. புவி அல்லது புவியியல் இயற்கையாகவே ஓர் அரசியல் இருப்பைக் தன்னகத்தே கொண்டுள்ளது. காலநிலையின் கூறுகள், நிலப்பரப்பு, கடல்சார் வளங்கள் மற்றும் புவிப்பரப்பிலுள்ள அனைத்து வளங்களும் அரசியலை தீர்மானிக்கும் வலுவைக் கொண்டவை.

நாடுகளுக்கிடையிலான உறவிலும் சர்வதேச உறவுகளிலும் அதிகாரம் எழுச்சிக்கு புவிசார் மூலக்கூறுகள் ஒவ்வொன்றும் தாக்கத்தை செலுத்துகிறது. அதனை கருப்பொருளாகக் கொண்டு புவிசார் அரசியல் அரசுகளுக்கிடையிலான உறவுகளை ஆராய்கிறது. இச்சொற்றொடரின் உருவாக்கத்தை முதல் முதலில் சுவீடன் நாட்டைச் சேர்ந்த அரசியல் விஞ்ஞானியான Rudolf Kjellén (1864-1922) அறிமுகப்படுத்தினார். geopolitik எனும் சொல்லையே அவர் முதலில் பிரயோகித்தார்.

புவியியல் அம்சங்களிலிருந்து ஒர் அரசுக்கு எழும் பிரச்சினைகளையும் அரசுகளின் அதிகாரத்தில் பாதிப்பினை ஏற்படுத்தும் பொருளாதாரக் காரணிகளையும் இனக்கூறுகளில் காணப்படும் பிரச்சினைகளையுமே முதன்மைப்படுத்தி ஆராய்ந்தார். அவரது சிந்தனை பத்தொன்பதாம் இருபதாம் நூற்றாண்டில் அளப்பரிய கோட்பாடாக மாறியது.

முதலாம்(1914-1919) இரண்டாம் உலக(1939-1945) போர்கள் நிலவிய காலப்பகுதியில் புவிசார் அரசியல் கோட்பாடு வலுவான அதிகார அரசியல் கட்டமைப்புக்கான வாதங்களை உருவாக்கியது.
நவீன புவிசார் அரசியல் கோட்பாட்டை சர்வதேச அரசியலுக்குள் உட்படுத்தியவர்களுள் ஐரோப்பிய புவியியலாளர்களே முதன்மையானவர்கள். அவர்களிலும் ஜேர்மனியர்களும் ஆங்கிலேயர்களும் முன்னணி வகித்தனர்.

Alexander Von uumboidt (1799) Karl Ritter (1804) Arnold Guyot (1849) ஆகியோர் புவிசார் அரசியலுக்குரிய எண்ணக்கருக்களை வெளியிட்டனர். இவர்களின் கருத்துக்களைப் பின்னணியாகக் கொண்டு ஜேர்மனிய புவியியலாளரான Friedrich Ratzel என்பவர் முதன் முதலாக நவீன புவிசார் அரசியலை முறைசார் கற்கைநெறியாக உருவாக்கினார்.

இவரது சிந்தனை 19ஆம் நூற்றாண்டின் சர்வதேச அரசியல் தளத்தில் திருப்புமுனையாக அமைந்தன. உலகளாவிய ரீதியில் அரசுகளின் அதிகாரப் போட்டிக்கு Ratzeld புவிசார் அரசியல் கொள்கைகள் அடிப்படையாக அமைந்தன.

ஓர் அரசின் அமைவிடத்திலும் (Location) அதன் பரந்த விசாலமான இடைவெளியிலும் (Space) அவ் அரசின் அதிகாரப் பிரயோகத்தின் ஆதிக்கம் தங்கியிருந்ததனால் அது, புவிசார் அரசியலை வலுப்படுத்தியது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம் முதல் நடுப்பகுதி வரை புவிசார் அரசியல் கோட்பாடுகளை ualford Mackinder, Nicholas Spykman, Alfred T.Mahan, Alexander de Seversky ஆகியோர் முன்வைத்தனர்.

ஈழத்தமிழரது அரசியல் போராட்டம்

ஈழத்தமிழர் அரசியல் போராட்டமானது தென் இலங்கை ஆட்சியாளரின் ஒடுக்குமுறைக்கு எதிரானதாக அமைந்திருந்த போதும் அதன் அடிப்படையானது தமிழ் மக்களது அமைவிடம் சார்ந்ததாகவே உள்ளது.

சிங்கள தமிழ் அரசியற் பிரச்சினை மட்டுமல்ல. அதற்கும் அப்பால் பிரதானமாக பாக்கு நீரிணையிற் இலங்கை – இந்திய – இந்துமாகடல் தழுவிய வகையில் உலக வல்லரசுகள் வரை நீளும் மிக கச்சிதமான வலைப்பின்னலை கொண்ட ஓர் உள்நாட்டு, அயல் நாட்டு, பிராந்திய, சர்வதேச அரசியற் பிரச்சினைகளின் வினோதமான வடிவங்களாகவே உள்ளன.

இங்கு தென் இலங்கை ஆதிக்கசக்திகளிடம் அரசு உண்டு, மற்றும் இலங்கைத் தீவுடன் தொடர்புபடும் ஏனைய சக்திகளிடமும் அரசுகள் உண்டு; ஆனால் ஈழத் தமிழர் மட்டும் அரசற்ற சமூகம். அரசற்ற ஒரு தேசிய இனம், அரசுகளைக் கொண்ட ஏனைய அனைத்து சக்திகளுடன் முட்டும் போதும், மோதும் போதும், பொருதும் போதும் பெரிதும் பாதிக்கப்படக் கூடியதும், சேதாரப்படக் கூடியதுமான நிலையில் தமிழ் தேசிய இனம் இருக்கும் என்பது ஒரு யதார்த்த நிலையாகும். ஆதலால் ஈழத்தமிழ் தரப்பினர் அதிக புத்திசாலித்தனத்துடனும், அதிக இராஜதந்திர மெருகுடனும், பெரிதும் யதார்த்த பூர்வமாக நடைமுறை சார்ந்தும் சிந்தித்து செயல்பட வேண்டும்.

தமிழ் மக்களது அரசியலில் முதலாவது அடிப்படை பாக்கு நீரிணைரனையிற்தான் இடப்படுகிறது என்பதனை ஈழத்தமிழ் தரப்பினர் கடந்த ஒரு நூற்றாண்டுக்கு மேலாய் புரிந்து கொண்டதாக தெரியவில்லை.

பாக்கு நீரிணை அரசியல்.

மேற்கே அரபிக் கடலையும், கிழக்கே வங்கக் கடலையும் தொடுத்து, இந்தியாவுடன் பிணைந்து காணப்படும் பாக்கு நீரிணை என்னும் ஓர் ஒற்றை இளையில் தொங்கும் ஒரு நாடாகவும், ஓர் அரசாகவும் இலங்கை தீவு உள்ளது.

இந்தப் பாக்கு நீரிணை இல்லையேல் இந்தியாவின் ஒரு நிலத் தொடராய் இலங்கை இருந்திருக்க வாய்ப்புண்டு. அப்படி ஒரு நிலத் தொடராய் இலங்கை இருந்திருந்தால் இந்தியாவின் வடக்கில் இருந்து தெற்கு வரை பௌத்தம் அழிந்தொழிந்தது போல் இலங்கையிலும் பௌத்தம் அழிந்தொழிந்து இருக்கும்.

இலங்கை ஒரு தனி நாடாக இருப்பதும் சாத்தியப்பட்டு இருக்காது. அரசும்-பௌத்தமும் பிணைந்திருப்பதற்கு பாக்குநீரிணையே பிரதான காரணமாகும்.

இலங்கை ஓர் அரசாக இருப்பதற்கு இந்த சிறிய பாக்கு நீரிணை ஒரு முக்கிய காரணமாய் இருப்பது போலவே, இலங்கையில் இனப்பிரச்சனை இரத்தம் தோய்ந்த வடிவில் இருப்பதற்கும் காரணமாக உள்ளது. இந்த வகையில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் நடுவே அரசியல் அர்த்தத்தில் பாக்கு நீரிணை ஒருபுறம் குளிரோடையாகவும் மறுபுறம் நெருப்பாறாகவும் விளங்குகிறது.

“ஆங்கில கால்வாய் 6 மணி நேரம் எமது கையில் இருக்குமிடத்து நாங்கள்தான் உலகின் எஜமானர்களாய் இருப்போம்” (Let us be masters of the English Channel for 6 hours and we are maters of the world ) என்று 1798ஆம் ஆண்டு நெப்போலியன் (Napoleon Bonaparte) கணக்கிட்ட ஆங்கிலக் கால்வாய் பற்றிய கூற்றுடன் இணைத்து நோக்குகையில் பாக்கு நீரிணையும் ஈழத்தமிழரின் அரசியலில் தனித்துவமான அடையாளமாக உள்ளது. பாக்குநிரிணை ஒரு வெளிவல்லரசின் கையில் விழுமிடத்து, இந்தியா மட்டுமல்ல இலங்கைத் தீவும் பல துண்டுகளாய் உடைய கூடும் என்று கூறவும் இடமுண்டு.

இலங்கை – இந்தியா – ஈழத்தமிழர் சார்ந்த அரசியலை முதலாவது அர்த்தத்தில் பாக்கு நீரிணை அரசியல் என்று சொல்வதே மிகப் பொருத்;தாமானது. பௌதீகரீதியான இந்த அடிப்படைக் கட்டமைப்பிலிருந்து விரியும் யதார்த்தமும் அந்த யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்ட நடைமுறையும் தான் இலங்கை – இந்தியா – ஈழத்தமிழர் சார்ந்த தலைவியை; நிர்ணயித்துச் செல்கின்றன.

இலங்கை ஒரு தீவு என்பதால் அங்கு அரசு அமைத்திருக்கும் பெரும்பான்மை மக்களுக்கு அது அடிப்படையில் சாதகமானது. பேரரசு அரசியலில் அண்டை நாட்டை பேரரசு விழுங்குவது இயல்பு. ஆதலினால் அண்டைய இந்திய பேரரசை இலங்கை அரசு தனது முதல் எதிரியாக எடுத்துக்கொள்வது இயல்பு.

அதேவேளை பாக்கு நீரிணையின் இரு மருங்கிலும் ஒருபுறம் இந்திய தமிழரும் மறுபுறம் ஈழத்தமிழரும் வாழ்ந்து வருவதால் அரசியல், பண்பாட்டு, வரலாற்று அர்த்தத்தில் இந்தியாவின் செல்வாக்கு அல்லது ஆதிக்கத்திற்கு ஈழத்தமிழர் ஊடாக இந்திய அரசு மேலெழுவதற்கு ஏற்ற வாய்ப்பு உண்டு என்ற பார்வை நியாயமானது.

1987ஆம் ஆண்டு இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் வாயிலான இந்திய இராணுவத்தின் வருகையை தென் இலங்கை மக்கள் இத்தகைய இந்திய ஆதிக்கப் போக்கின் நீட்சியாகவே பார்க்கின்றனர். இதனால் இயல்பாகவே இந்திய எதிர்ப்புவாதம் பரந்த தென் இலங்கை மக்களின் மனங்களில் உறைந்து கிடக்கிறது.

தென் இலங்கை மக்கள் மத்தியில் உள்ள இத்தகைய இந்திய எதிர்புவாத உணர்வுகளை அரசியல், மதத் தலைவர்கள் தத்தம் தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்த தவறுவதும் இல்லை.
அண்மையில் (16.06.2024) இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாலம் அமைக்கப்பட்டால் அது இலங்கையின் இறைமையையும் சுதந்திரத்தையும் இல்லாமல் செய்துவிடும் எனக்குறிப்பிட்ட தென் இலங்கை மதத்தலைவர்களில் ஒருவரான மல்கம் ரஞ்சித் ஆண்டகை இலங்கைத் தீவின் வரலாறு தென் இந்தியாவிலிருந்து வருகைதரும் படையெடுப்பாளார்களினால் காலத்திற்கு காலம் இலங்கையை கைப்பற்றி ஆட்சி செய்துள்ளதாகவே விளங்கியது என்றார்.

அவர் மேலும் குறிப்பிடும் போது, இலங்கை மன்னர்களும் அதன் படைகளும் அவர்களுடன் போரிட்டு நிலத்தை விடுதலை செய்துள்ளனர். இந்நிலையில் இலங்கை அரசாங்கம் தனது அதிகாரத்தின் கீழ் திட்டமிட்டுள்ள தமிழகத்திற்கும் -இலங்கைக்குமான நிலத்தொடர்ச்சிக்கான பாலம் அமைப்பதானது தமிழ் நாட்டுடனான அலகாக இலங்கை அமைவதற்கான நடவடிக்கையாகவே உள்ளது. இது முற்றாகவே இலங்கையின் இறையாண்மையையும் சுதந்திரத்தையும் இல்லாமல் செய்துவிடும் எனக்குறிப்பிட்டுள்ளார்.

தென் இலங்கை எப்போதும் இந்திய ஆதிக்கத்தின் ஊற்றாகவும், வாய்க்காலாகவும் பாக்கு நீரிணையை கோபத்துடன் அணுகுகின்றனர்.

ஒரு டசினுக்கும் மேற்பட்ட தமிழீழ போராட்ட அமைப்புக்களை அடைகாத்த கூடாக பாக்கு நீரிணைக்கு ஊடாக தமிழகத்தையும், இந்திய அரசையும் பார்க்கின்றனர். உண்மையில் போராளிகளை எல்லாம் ‘பயங்கரவாதிகள்’ என்று தென் இலங்கை அரசு முத்திரை குத்திய போதிலும், அவர்கள் கூறும் அப்படிப்பட்ட ‘பயங்கரவாதிகள்’, ‘பயங்கரவாத தலைவர்கள்’ என்போர் இந்திய அரசால் பாதுகாக்கப்பட்டார்கள்; என்று கருதும் இலங்கை அரசு அப்படிப்பட்ட எந்தவொரு ‘பயங்கரவாதியையோ’, ‘பயங்கரவாத தலைவரையோ’ இலங்கை அரசால் இந்தியாவில் கொல்லவோ அல்லது கைதுசெய்யவோ முடியவில்லை.

இத்தகைய யதார்த்தத்தின் பின்னணியில் வைத்து பாக்கு நீரிணை வழியாக இந்திய அரசையும் தமிழகத்தையும் போராட்டத்திற்கான வழி வாய்க்கால் ஆகவும், அடைகாக்கும் கூடாகவும், அரணாகவும் தென் இலங்கை தரப்பினர் பார்க்கின்றனர்.

தமிழகத்திலிருந்து தமிழ் மக்களின் போராட்டம் பெரிதும் அன்னியப்பட்டிருந்த காலத்தில், தமிழகம் போராட்டத்திற்கு பின்புலமாக இல்லாத ஒரு காலத்தில் தான் தங்களால் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை முற்றாக அழிக்க முடிந்ததாக தென் இலங்கை ஆட்சியாளர்கள் கருதுகின்றனர்.

தீவு என்கின்ற ஒரு புற நிலை யதார்த்தம் (Objective reality) பெரும் பேரரசுகளையோ அல்லது வல்லரசுகளையோ கூட அவை நினைத்தபடி கையாள முடியாத அளவுக்கு அவற்றை தள்ளி வைக்கக்கூடிய ஆற்றல் கொண்டதாய் விளங்குகிறது.

இந்த வகையில் இந்துமாகடலில் அமைந்துள்ள தீவான இலங்கைக்கு இருக்கக்கூடிய ஒரு கட்டமைப்பு ரீதியான இருப்பு நிலையும், அத்துடன் புவியியல் அண்மைத்தன்மையான அமைவிடத்தை உடைய இலங்கைக்கும் இந்தியாவுக்கும் நடுவே பெரிதும் உணர்ச்சிபூர்வமாக காணப்படும் பாக்கு நீரிணையும் இணைந்து இந்தியா – இலங்கை – ஈழத்தமிழர் மற்றும் இந்துமாகடல் நலன் சார்ந்த பெருவல்லரசுகள் என்பனவற்றோடு பின்னிப்பிணைந்த அரசியல் வியூகத்துக்கு உள்ளால் இந்திய – இலங்கை – ஈழத்தமிழர் பிரச்சினை காணப்படுகிறது.

டொனமூர் முதல் இன்று வரையானை அனைத்து அரசியல் யாப்புகளிலும் கூடவே 13வது திருத்தச் சட்டம் உட்பட அனைத்து அரசியல் ஏற்பாடுகளிலும் ஈழத்தமிழரிடம் இருந்து பாக்கு நீர்ணையை முற்றாகப் பறிக்கும் ஓர் அரசியலையே தென் இலங்கை அரசும் தென் இலங்கை அரசியலும் மேற்கொண்டு வருகின்றன.

கைப்பற்றவும், ஆளவும், கட்டுப்படுத்தவும் இந்துமாகடலில் தமது ஆதிக்கத்தை விரிவாக்கவும் வேண்டியதற்கான ஓர் இராணுவ முகாமாகவே இலங்கைத் தீவை வல்லரசுகள் பார்க்கின்றன.

16ஆம் நூற்றாண்டில் இருந்து அனைத்து ஐரோப்பிய அரசுகளினதும் கூடவே அமெரிக்க அரசினதும் நோக்குநிலை அப்படியேதான் உள்ளது. அத்துடன் கூடவே இரண்டாம் உலக மகாயுத்த காலத்தில் 1942 ஏப்ரல் 5ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறன்று ஜப்பானிய விமானங்களின் தாக்குதலுக்கு கொழும்பு உள்ளாகியது.

அதைத் தொடர்ந்து ஏப்ரல் 9ஆம் திகதி திருகோணமலை துறைமுகம் ஜப்பானிய விமான தாக்குதலுக்கு உள்ளானது.

இலங்கை மீது மொத்தம் 91 குண்டு வீச்சு விமானங்களும் 38 சண்டை விமானங்களும் இணைந்து மேற்படி தாக்குதல்களை மேற்கொண்டன.

இந்தியா மீதும் இந்துமாகடல் மீதும் ஆதிக்கம் புரிவதற்கான நோக்கு நிலையில் இருந்ததுதான் ஜப்பான் மேற்படி இலங்கை மீதான தாக்குதலை மேற்கொண்டது.

15ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் (1412) கொழும்பு கோட்டை இராச்சியத்தை சீன கடற்படை தளபதி Zen ueகைப்பற்றினார். இதற்கு முன்பு 10ஆம் நூற்றாண்டின் இறுதியில்(993) சோழப் பேரரசு அனுராதபுரம் இராச்சியத்தை கைப்பற்றி முக்கால் நூற்றாண்டு காலம் ஆட்சி புரிந்தது.

எப்படியோ கி.பி 10ஆம் நூற்றாண்டில் இருந்து இன்று வரை தெளிவாக ஆயிரம் வருடங்களுக்கு மேலாய் இந்தியாவுக்கு அருகேயான இலங்கைத்தீவை மையமாகக் கொண்டு இந்தியா – சீனா – மேற்குலகம் ஆகியவற்றிற்கு இடையேயான ஆடுகளமாய் இந்துமகாகடல் காணப்படுகிறது. இந்த ஆடுகளத்தில் ஜப்பானும் வரலாற்று அர்த்தத்தில் இன்று வரை ஓர் அங்கமாய் காணப்படுகிறது.

இத்தகைய வரலாற்று பின்னணியில் பிரித்தானிய காலனிய ஆதிக்க காலத்தில் காலனிய ஆட்சியாளர்கள் 19ஆம் நூற்றாண்டில் பாக்கு நீரிணையை கடந்து தமிழகத்தில் இருந்து தமது பெருந்தோட்டத் தொழிலுக்காக தோட்டத்தொழிலாளர்களை இலங்கையின் மத்திய மலையகத்தில் குடியமர்த்தினர்.

ஆனால் தென் இலங்கை அரசியல் தலைவர்களும் பௌத்த மதத் தலைவர்களும் இந்த மலையகத் தோட்டத்தொழிலாளர்களை ஆயிரக்கணக்கான ஆண்டுகால இந்திய படையெடுப்புக்களின் இன்னொரு நீட்சியாக பார்த்தனர்.

இந்த ஒற்றை ஆட்சிமுறை என்பது ஈழத்தமிழருக்கும் கூடவே இந்தியாவுக்கும் எதிராக பாக்கு நீரிணை அரசியலின் வெளிப்பாடாய் அமைந்ததை இந்தியத் தலைவர்களும் ஈழத்தமிழ் தலைவர்களும் சிறிதும் புரிந்திருக்கவில்லை. ஆனால் தென் இலங்கைத் தலைவர்களும் பிரித்தானிய ஆட்சியாளர்களும் இதில் தெளிவான புரிதலையும், நிலைப்பாட்டையும், செயற்பாட்டையும் கொண்டிருந்தனர்.

1957ஆம் ஆண்டு பண்டா – செல்வா ஒப்பந்தத்தின் போதும், 1965ஆம் ஆண்டு டட்லி – செல்வா ஒப்பந்தத்தின் போதும் பாக்கு நீரிணை மீதான தமது பிடியை பேணுவதில் பெரிதும் கவனமாய் இருந்தனர்.

ஆனால் தமிழ் தலைவர்கள் இவ்வாறான ஒரு பக்கத்தை பற்றிய பார்வை சிறிதும் இன்றி அதனை வேறுவிதத்தில் போராட்டகளமாக மாற்றினர்.

2002ஆம் ஆண்டு ரணில் – பிரபா புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் போது கடலில் தமது பங்குக்கு விடுதலைப் புலிகள் யுத்தநிறுத்தத்தை கோரிய போது அதை தென் இலங்கைத் தரப்பு மறுத்து தரையில் மட்டுமே யுத்த நிறுத்தம் என்றும் தரையில் புலிகள், அரசாங்க கட்டுப்பாட்டு பிரதேசங்கள் அமைவது போல் கடலில் அவ்வாறான கட்டுப்பாட்டு பிரிவு இருக்காது என்றும் கடல் மீதான தமது முழுமையான ஆதிக்கத்தை தென் இலங்கை தரப்பு பேணிக் கொண்டது.

இலங்கை – இந்தியா ஒப்பந்தத்தின் கீழான 13வது திருட்டுச் சட்டத்திலும் தமிழ் மக்கள் பக்கம் பாக்கு நீரிணை சார் கடல் ஆதிக்கத்திற்கு இடமற்றவாறு தென் இலங்கை ஆதிக்கம் உறுதியாக இருக்கக்கூடிய வகையிலேயே அதனை அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன வடிவமைத்தார்.

13வது திருத்தச் சட்டத்தை வடிவமைக்கும் போது அதனை முப்பரிமானம் கொண்டு ஒரு கூரிய வாளாகவே ஜெயவர்தன வடிவமைத்தார். முதலாவதாக, மீள முடியாதவாறு இலங்கைக்குள் இந்தியாவை சிக்கவைக்கவல்லை ஒரு பொறிவலையாக வடிவமைத்தார்.

இரண்டாவதாக, ஈழத்தமிழரை இலங்கைக்குள் தாயகப் பரிமாணம் இன்றி துண்டாட கூடியதாயும் திணறடிக்கக் கூடியதாயும் வடிவமைத்தார்.

மூன்றாவதாக, இந்தியாவினது நிரந்தர நண்பரான ஈழத்தமிழரையும், ஈழத்தமிழரின் நிரந்தர நண்பரான இந்தியாவையும் ஒருவருக்கு ஒருவர் பகைமை கொண்ட சக்திகளாக மாற்றக்கூடிய வகையில் மிகச்சிறப்பாக திட்டமிட்டு வடிவமைத்தார்.

மொத்தத்தில் மேற்படி முப்பரிமாணம் கொண்ட பொறிவலையாக (Entanglement) வடிவமைத்து அதில் வெற்றி கண்ட ஒரு நவீன இராஜதந்திரியாக தன்னை நிரூபித்தார்.

வெறுமனே 1987ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதான ஒரு சிறிய வட்டத்துக்குள் வைத்து 13வது திருத்தச் சட்டத்தினை பார்க்கக் கூடாது. மாறாக இலங்கை அரசின் இந்திய எதிர்ப்புவாத வரலாற்றுக்கு உள்ளாலும், அது சார்ந்த வெளியுறவு கொள்கைக்கு உள்ளாலும், ஈழத்தமிழர் மீது சிங்கள அரசு புரியும் ஒடுக்குமுறை போக்கின் ஒரு முக்கிய வெளிப்பாடாகவும் இதனை பார்க்க வேண்டும்.

அடுத்து வடக்கு கிழக்கு நிரந்தர இணைப்பு, தற்காலிக இணைப்பு, வடக்கு கிழக்கு இடைக்கால அரசு, என்று அரசியல்ரீதியாக ராஜரீகப் பந்தாட்டம் ஆடி இறுதியில் வெறும் சட்டநுணுக்க காரணங்களினால் ஓர் அரசியல் தீர்வை வெறும் சட்ட நாடகத்தால் இரண்டாகப் பிளப்பதில் தென் இலங்கைத் தலைவர்கள் வெற்றி பெற்றனர்.

ஒரு தமிழர் தாயகமானது வடக்கு – கிழக்கு என இரண்டாக பிளவுண்டு வடக்கு – கிழக்கு மோதல், தமிழ் – முஸ்லிம் மோதல் என தமிழருக்கும் தமிழருக்கும் இடையேயான மோதல் தமிழருக்கும் – முஸ்லிம்களுக்கும் இடையான மோதல் எனப் பாரிய தீய வடிவம் பெற்றிருக்கின்றது.

இந்தியப் பெருநிலப் பரப்பிலிருந்து இலங்கையைப் பிரித்து, அதனை ஒரு தீவாக வடிவமைத்திருக்கும் புவியியல் நிர்ணயமாக பாக்கு நீரிணை உள்ளது. இலங்கையை ஒரு தீவாக்கி, அதனை ஒரு நாடாகவும் ஓர் அரசாகவும் விளங்கச் செய்த ஒரு பிரதான இயற்கை காரணியாய் பாக்கு நீரிணை அமைந்துள்ளது.

இந்தப் புவியியல் கட்டமைப்பு இலங்கை – இந்திய அரசியல் வரலாற்று போக்கை நிர்ணயிக்கும் ஒரு சக்தியாகவும் கூடவே வெளிநாட்டு அரசியற் போக்குக்களோடு தொடர்புறும் ஒரு சக்தியாகவும் விளங்குகிறது. இந்த இயற்கை அமைப்பானது தரப்பட்டிருக்கும் ஒரு புறநில எதார்த்தம் ஆகும் (Given objective conditions). இதுவே தமிழ் மக்களின் அகிம்சைப் போராட்டததிற்கும் ஆயுதப் போராட்டத்திற்கும் அடிப்படையாக விளங்குகிறது.

இந்திய-இலங்கை உறவும், தமிழ் மக்களின் இருப்பும், தென் இலங்கை அரசியலும் ஈழத்தமிழரது அமைவிடம் சார்ந்து எழுந்துள்ள புவிசார் அரசியலில் மையங்கொண்டுள்ளது.

முடிவுரை

இலங்கையையும் இந்தியாவையும் பிரிக்கும் பாக்கநீரிணையே இலங்கையை தீவாகவும் ஓரரசாகவும் பேணுவதற்கு வழிவகுத்துள்ளது.

பாக்குநீரிணையில்லையேல் இலங்கையின் அரசியல் இருப்பு கேள்விக்குரியதே.

அதன் அடிப்படையில் உருவானதே இலங்கை-இந்திய அரசியல் உறவு. அது தனித்து தென் இலங்கையின் அரசியலை மட்டுமல்ல வடக்கு கிழக்கின் அரசியல் இருப்பையும் சார்ந்தது. வெளிப்படையாக நோக்குவோமாயின் பாக்கு நீரிணையே ஈழத்தமிழரது அகிழ்சைப் போராட்டங்களுக்கும் ஆயுதப் போராட்டத்திற்கும் தனித்துவமான அரசியல் இருப்புக்கும் மூலாதாரமானது.

அதுவே ஈழத்தமிழரது இந்திய –தமிழ் நாட்டுடனான உறவுக்கும் வலுவான காரணியாகும். இத்தகைய கேந்திர முக்கியத்துவம் பொருந்திய கடற்பகுதியையே வல்லரசு நாடுகளும் தென் இலங்கையும் தமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முனைவதற்கான அடிப்படையாகும்.

இந்தியாவுக்கு எதிரான சக்திகளின் முனைப்பான அரசியல் பாக்கு நீரிணைசார்ந்ததாகவே காணப்படுகிறது. இதனை முறியடிக்கும் விதத்திலேயே இராமர் பாலம் அரசியல் முக்கியத்துவத்தை கொடுக்கின்றது.

தரைவழி நீட்சி தனித்து இலங்கைத் தீவுடனான உறவை மட்டுமல்லாது பக்குநீரிணை மீதான ஈடுபாட்டு சார்ந்தும் சர்வதேச வல்லரசுகளுக்கும் எதிரானதாகவே உள்ளது.

அதாவது தென் இலங்கையின் அரசியல் மட்டுமல்லாது இந்துசமுத்திரத்தின் மீது செல்வாக்குச் செலுத்தும் சர்வதேச சக்திகளது நலனையும் பாதிப்பதாக தெரிகிறது. இவை யாவற்றையும் மையப்படுத்தியே இந்திய எதிர்ப்புவாதம் மேல் எழுகிறது.

ஒரு காலப்பகுதியில் பிரித்தானிய ஆட்சியாளர்களது நலன்சார்ந்து இந்திய-இலங்கை புரிதல் எப்படி முரண்பாட்டுக்குள் நகர்த்தப்பட்டதோ அவ்வாறே தற்போதும் எழுச்சியடைந்துள்ள அந்நிய சக்திகளது நலனுக்கான நகர்வுகள் மேற்கொள்ளப்படுகிறது என மேலும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More