அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானம் சட்டபூர்வமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் தமது கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானம் சட்டத்திற்கு முரணானது என தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
விஜித் மலல்கொட, அச்சல வெங்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
பதவிகளைத் துறப்பது பெரிய விடயமல்ல என்கிறார் முன்னாள் அமைச்சர் ஹரின்!
விட்டுக்கொடுப்பதில் தேர்ச்சி பெற்ற தமக்கு அமைச்சுப் பதவிகளைத் துறப்பது பெரிய விடயமல்ல என தெரிவித்த சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நான்கு அமைச்சுகளின் பணிகளை சிறப்பாக செய்திருந்தேன் என்றார்.
சுற்றுலா சபை ஊழியர்களிடம் வெள்ளிக்கிழமை (09) விடைபெறுவதற்கு முன்னர் உரையாற்றிய ஹரின் பெர்னாண்டோ, உயர் நீதிமன்றம் இன்று காலை வழங்கிய உத்தரவுக்கு தலை வணங்குவதாகவுமு், இவ்வாறு நடக்கலாம் என்று தெரிந்தே ஜனாதிபதியுடன் இணைந்து கொண்டதாக தெரிவித்தார்.
அமைச்சர் பதவியை நீக்கினாலும் இந்த நாட்டின் குடியுரிமையை நீக்க முடியாது என தெரிவித்த அவர், அமைச்சராக இருந்த இரண்டு வருடங்களில் நேர்மையாக செயற்பட்டதாக குறிப்பிட்டார்.
ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்ட பதவிகளை சுற்றுலா சபையின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் விட்டுச் செல்ல வேண்டிய அவசியமில்லை எனவும், மேற்கொள்ளப்பட்ட பணிகளை எதிர்காலத்தில் முன்னெடுக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.
மனுஷ நாணயக்காரவுக்கு பதில் பந்துலால் பண்டாரிகொட!
காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார எம்.பி பதவியில் இருந்துநீக்கப்பட்டதன் காரணமாக வெற்றிடமான பதவிக்கு பந்துலால் பண்டாரிகொடவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் முன்மொழிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
உயர்நீதிமன்றம், வௌ்ளிக்கிழமை (09) வழங்கிய தீர்ப்பின்படி, மனுஷ நாணயக்கார எம்.பி பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
காலி மாவட்ட பட்டியலில் மனுஷ நாணயகாரவுக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகளை பந்துலால் பண்டாரிகொட பெற்றிருந்தார்.