வங்கதேசத்தில் வெடித்த போராட்டத்தை தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இந்நிலையில் நேற்று (08.08.24) அங்கு இடைக்கால அரசு அமைந்தது. இதில் ஷேக் ஹசீனாவின் ஆட்சியை கவிழ்க்க முக்கிய காரணமாக இருந்த 26 வயது நிரம்பிய 2 மாணவர்கள் அரசின் ஆலோசகர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் இருந்து சுதந்திரம் பெற்று புதிய நாடாக கடந்த 1971ம் ஆண்டில் வங்கதேசம் உருவானது. இந்த போராட்டத்தில் பங்கேற்று உயிரிழந்த தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு வேலை, கல்வியில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்க அந்த நாட்டு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் முதல் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் காரணமாக கடந்த 5 ம் திகதி வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறினார்.
இதனையடுத்து இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனிஸ் தேர்வு செய்யப்பட்டார். முகமது யூனுஸ் தலைமையிலான இந்த இடைக்கால அரசில் 16 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். முகம்மது யூனுஸுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்த இடைக்கால அரசில் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கலைய காரணமாக போராட்டத்தை முன்னெடுத்த மாணவர்கள் நஹித் இஸ்லாம் மற்றும் ஆசிப் மஹ்மூத் ஆகியோர் அரசின் ஆலோசகர்களாகவும், அமைச்சர் பொறுப்பிலும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதில் நஹித் இஸ்லாம் சமூகவியல் (Sociology) பிரிவில் முதுகலை பட்டப்படிப்பை படித்து வருகிறார். இவர் நூருல் ஹக் நூர் தலைமையிலான சத்ர ஓதிகார் பரிஷத்தில் இருந்து பிரிந்து சென்றவர்களால் உருவாக்கப்பட்ட கனோதந்திரிக் சத்ர சக்தியின் உறுப்பினர் செயலாளராக உள்ளார். அதேபோல் ஆசீப் மஹ்மூத் linguistics பிரிவு மாணவர். இவர் நஹித் இஸ்லாமியின் நெருங்கிய நண்பர். கனோதந்திரிக் சத்ர சக்தியின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறார்.
முன்னதாக இவர்கள் 2 பேரும் ஷேக் ஹசீனாவின் அடக்குமுறைக்கு ஆளாகினர். அதாவது போராட்டத்தை முன்னெடுத்த மாணவ பிரதிநிதிகள் சித்ரவதை செய்யப்பட்டனர். போராட்டத்தை தொடர்ந்து முதல் முறையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட வேளை இவர்கள் 2 பேரையும் Detective Branchயை சேர்ந்தவர்கள் அழைத்து சென்றனர். அதன்பின் சித்ரவதை செய்யப்பட்டு சாலையோரத்தில் விடப்பட்டனர். இதுதொடர்பான விவகாரம் வெளியாகி பெரும் கொந்தளிப்பை மாணவர்கள் மத்தியில் உருவாக்கியது. அதன்பின் நஹித் இஸ்லாம் மற்றும் ஆசிப் மஹ்மூத் உள்பட 6 போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கோனோஷஸ்தயா நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை முடிந்த பின் அவர்கள் போராட்டத்தை கைவிடுவார்கள் என நினைத்த நிலையில் அவர்கள் விடவில்லை.
ஜூலை 30ல் மீண்டும் Detective Branch அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். மீண்டும் கைது செய்யப்பட்ட நிலையில் போராட்டத்தை கைவிடுவதாக பொலிசார் வற்புறுத்தலால் வீடியோ வெளியிட்டனர். அதன்பிறகு ரிலீசான பின் மீண்டும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஷேக் ஹசீனா தரப்புக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர்.
அத்துடன் அதுவரை இடஒதுக்கீட்டுக்கு எதிராக இருந்த போராட்டம் என்பது ஷேக் ஹசீனாவுக்கு எதிரான போராட்டமாக மாற இவர்கள் 2 பேரே முக்கிய காரணம் என்ற வகையில் பங்காளதேஸின் இடைக்கால அரசாங்கத்தில் முக்கிய இடம் பெற்றுள்ளனர்.