இடம்பெயர்ந்து சென்று முகாம்களில் வாழ்ந்த வாழ்க்கையை விட தற்போது சொந்த ஊரில் மிகவும் மோசமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றோம் என கிளிநொச்சி பன்னங்கண்டியில் ஆறாவது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இன்று வியாழக்கிழமை ஆறாவது நாளாக காணி அனுமதி பத்திரம், வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோரி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் மக்களே இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளனர். அவர்கள் மேலும் குறிப்பிடுகையில்
தென்னிலங்கையில் ஏற்பட்ட இன வன்செயல்களால் பாதிக்கப்பட்டு இங்கு வந்த நாங்கள் பல்வேறு பிரதேசங்களில் குடியமர்த்தப்பட்டோம். அந்த வகையில் பன்னங்கண்டியிலும் 1990 தொடக்கம் வாழ்ந்து வருகின்றோம், நாங்கள் இடம்பெயர்ந்து சென்று முகாம்களில் வாழ்ந்த போது கூட நீர் வசதி ,மலசல கூட வசதிகள் எல்லாம் ஏற்படுத்தி தரப்பட்டது ஆனால் இங்கு எதுவும் இல்லைஎன அவர்கள் தெரிவித்துள்ளனர்.
1990 ஆம் ஆண்டு தொடக்கம் இவ்வாறான அவல வாழ்க்கையையே வாழ்ந்த வருகின்றோம். எனவும் எனவே தயவு செய்து எங்களையும் மக்களாக கருதி அரசியல்வாதிகள் அதிகாரிகள் ஆகியோர் உரிய பொருத்தமான நடவடிக்கையை மேற்கொண்டு எங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துங்கள் என வினயமாக கோருகின்றோம் எனவும் பன்னங்கண்டி மக்கள் தெரிவித்தனர்.
மீள்குடியேற்றத்திற்கு பின்னர் பல தேர்தல்களை சந்தித்துவிட்டோம் இந்தக் காலங்களில் எல்லாம் எங்களின் ஓழுங்கை ஒழுங்கையாக வருகின்ற அரசியல்வாதிகள் தேர்தலில் வெற்றிப்பெற்ற பின்னர் ஒரு மாதத்தில் மூன்று மாதத்தில் உங்களுக்கான வீட்டுத்திட்டத்தை வழங்குவோம் என வாக்குறுதிகளை வழங்கி விட்டு செல்கின்றனர் ஆனால் பின்னர் எதுவும் நடப்பது இல்லை. அதிகாரிகளும் தங்களால் சட்டத்திற்கு புறம்பாக எதுவும் செய்ய முடியாது என்று கைவிரித்துவிட்டனர் எனவே எங்கள் வாழ்க்கை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எங்களை எல்லோரும் தங்களின் தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகின்ற ஒரு சமூகமாகவே வைத்திருப்பதனை எண்ணி மிகவும் மனவேதனை அடைகின்றோம். இவர்கள் நினைத்திருந்தால் எங்களுக்கு மாற்று காணிகளும் வீட்டுத்திட்டகளும் வழங்கியிருக்க முடியும் ஆனால் அதனை எவரும் செய்யவில்லை இது எங்களை மிகவும் வேதனையடையச் செய்துள்ளது.
எங்கள் பெற்றோர்கள் இவ்வாறு அவல வாழ்க்கை வாழ்ந்துவிட்டார்கள் நாங்களும் அவ்வாறே வாழ்ந்து வருகின்றோம் ஆனால் இனி எங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையிலாவது மாற்றம் வரவேண்டும் அதற்காக பொறுமையிழந்து போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம் எனவும் தெரிவித்தனர்