குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்:-
கடத்தப்பட்டவர்கள் மற்றும் காணாமல் போனோரை மீட்டு தருவதாக கூறி பண மோசடி செய்த நபர் பொட்டாசியம் திரவத்தை குடித்தே உயிரிழந்துள்ளார் என யாழ்.போதனா வைத்திய சாலை சட்ட வைத்திய அதிகாரி உ.மயூரன் தெரிவித்துள்ளார்.
யாழில். கடத்தப்பட்டவர்கள் மற்றும் காணாமல் போனோரை மீட்டு தருவதாக கூறி பண மோசடி செய்த கந்தசுவாமி கிருஷ்ணன் (வயது 57) எனும் நபரை பாதிக்கப்பட்டவர்கள் பிடித்து கடந்த திங்கட்கிழமை பொலிசாரிடம் ஒப்படைத்து இருந்தனர்.
குறித்த நபர் பொலிஸ் காவலில் இருந்த வேளை திரவம் ஒன்றினை குடித்த நிலையில் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டு இருந்தார்.
அந்நிலையில் சிகிச்சை பயனின்றி குறித்த நபர் உயிரிழந்து இருந்தார். உயிரிழந்த நபரினுடைய உடற்கூற்று பரிசோதனையின் போது பொட்டாசியம் கலந்த திரவத்தை குடித்தமையாலையே மரணம் சம்பவித்து உள்ளது என தெரிய வந்துள்ளது.