அரசாங்கம் ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தனவிற்கு ஒரு வார காலம் பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் இது ஜனநாயக ஒடுக்குமுறை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தினேஸ் குணவர்தன பாராளுமன்றை விட்டு வெளியேற்றப்பட்டமை ஓர் அரசியல் சதித் திட்டமாகவே கருதப்பட வேண்டுமென தெரிவித்துள்ள அவர் பாராளுமன்றில் ஊடக சந்திப்பு ஒன்றை நடாத்தக்கூட அனுமதியளிக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியினர் மக்களின் சார்பில் குரல் கொடுத்து வருவதாகவும் இதனை நசுக்க அரசாங்கம் சபாநாயகரை பயன்படுத்தி வருவதாகவும், இது தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.