131
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களால் தயாரிக்கப்பட்ட ஆவணப்படங்கள் எதிர்வரும் 4ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் இரண்டு மணிக்கு பல்கலைக்கழக நூலகக் கேட்போர்கூடத்தில் திரையிடப்படவுள்ளன.
தென்னிலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான இனக்கலவரங்களில் பெரிதும் பாதிக்கப்பட்டு வன்னிப் பகுதியில் குடியேறிய மலையக மக்களின் வரலாற்றுப் பின்புலம் மற்றும் வாழ்வியல் பற்றிய பதிவான ‘பதியம்’, யாழ்ப்பாணத்தில் தெரு நாய்களின் அதிகரிப்புத் தொடர்பான பிரச்சினைகளை வெளிக்கொணரும் ‘ஆர்க் ஏஞ்சல்ஸ்’, மன்னார் மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் வாழும் மீனவர்களிடையே மருவிச் செல்லும் நாட்டார் பாடல்களை ஆவணப்படுத்தும் ‘அம்பா’, பருத்தித்துறைத் துறைமுகத்தின் மீள் கட்டுமானம் பற்றிய மக்களின் கருத்துக்களைப் பதிவு செய்யும் ‘பருத்திமுகம், தமிழரின் பாரம்பரியமான பறையின் எழுச்சி பற்றிச் சிலாகிக்கும் ‘பறையால் பறை’, மலையகத்தின் கிறேட்வெஸ்டன் பிரதேசத்தில் வசிக்கும் மக்களின் அத்தியாவசியத் தேவையான கழிவறைப் பிரச்சினையையும் அதனை அமைத்து கொடுப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தும் ‘கழிவறை’, மன்னார்ப் பிரதேசத்திற்கு வருகைதரும் வலசைப் பறவைகள் பற்றி ஆவணப்படுத்தும் ‘பிளமிங்கோ, அநுராதபுரம் அல்லவெவ கிராமத்தில் காடுகளோடு ஒன்றிவாழும் மக்களின் வாழ்வாதாரமான காட்டுத்தேன் சேகரித்தலை வெளிப்படுத்தும் ‘கோல்டன் ஜங்கிள், கிளிநொச்சி மாவட்டத்தின் சிவநகர் பாடசாலையில் கபடிப் போட்டியில் தேசியரீதியிலான சாதனைகளைப் படைக்கும் பெண் மாணவிகளைப் பற்றிப் பேசும் ‘கபடி’, காலத்தின் வடுக்களை கடந்து வாழ்ந்து வரும் முன்னாள் போராளி ஒருவரின் வாழ்வியலைப் பதிவுசெய்யும் ‘சமர்’ ஆகிய ஆவணப்படங்கள் திரையிடப்படவுள்ளன.
இந்த ஆவணப்படத் திரையிடலானது ஊடகக் கற்கைகள் மாணவர்களின் எண்மியக் கதைசொல்லல் கற்றலின் பெறுதிகளாக அமைவதும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொன்விழாக் கொண்டாட்டத்தின் ஓர் அங்கமாக மேற்கொள்ளப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
அதேவேளை அன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஊடகக் கற்கைகள் துறையின் ஏற்பாட்டில் கனலி மாணவர் சஞ்சிகையின் ஐந்தாவது இதழ் வெளியீட்டு நிகழ்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகக் கேட்போர்கூடத்தில் காலை ஒன்பது மணிக்கு இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத் தக்கது.
Spread the love