180
அரசவேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்தி வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் ஆகிய நாம் கடந்த 27.02.2017 திங்கட்கிழமை தொடக்கம் இன்றுவரை (10.03.2017) யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக காலவரையறையற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம்.
வேலைவாய்ப்பு வழங்கல் தொடர்பில் எவ்வித உறுதிமொழியும் கிடைக்கப்பெறாத நிலையில் வடமாகாண சபையின் கௌரவ உறுப்பினர் சிலரால், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் கவனத்திற்கு குறித்த விடயம் கொண்டு செல்லப்பட்டது.
அத்தகைய நிலையில் பிரதமருடனான சந்திப்பினை அவர் இன்றைய தினம் (10.03.2017) வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்திருந்தார். அதற்கமைய வடமாகாண பட்டதாரிகள் சமூகத்தின் பிரதிநிதிகள் ஆறு (6) பேர் கொண்ட குழுவும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களான கௌரவ சுகிர்தன், கௌரவ அஸ்வின் ஆகியோர் மேன்மை தங்கிய கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இன்று (காலை 9.30 மணியிலிருந்து காலை 10.30 மணி வரை) அலரி மாளிகையில் சந்திப்பு மேற்கொள்ளப்பட்டது.
இச் சந்திப்பில் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகளால் பின்வரும் விடயங்கள் பிரதமர் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. அதற்கமைய
# வடமாகாணத்தில் அண்ணளவாக 3500ற்கு மேற்பட்ட பட்டதாரிகள் எவ்வித அரச தொழில் வாய்ப்புக்கள் இன்றி கையறு நிலையில் உள்ளமை சுட்டிக்காட்டப்பட்டது .
# அடுத்து வடக்கு மாகாண சபையினால் உருவாக்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தருக்கான ஆளணி வெற்றிடம் (851) நிரப்பல் உட்பட ஏனைய வெற்றிடங்கள் தொடர்பிலும் எடுத்துக் கூறப்பட்டது.
அத்துடன் மத்திய அரசாங்கத்தின் கீழ் காணப்படுகின்ற வெற்றிட இடைவெளி தொடர்பில் எடுத்துக் கூறப்பட்டதுடன் வடமாகாணத்தில் உள்ள அனைத்து வேலையற்ற பட்டதாரிகளையும் அரச தொழில் வாய்ப்பிற்கு உள்ளீர்ப்பதற்கான பொறிமுறை ஒன்றை உடனடியாக உருவாக்குமாறு கோரப்பட்டது.
குறித்த விடயங்களை செவிமடுத்த பிரதமர்,
வடமாகாணத்தில் காணப்படும் தொழில் வெற்றிடங்களை உடனடியாக திரட்டி அதில் வேலையற்ற பட்டதாரிகளைநிரப்புவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததுடன் வடக்கில் மேலதிக வெற்றிடங்களை ஆராய்வதற்கு மூன்று வாரகால அவகாசம் தேவையாக உள்ளது எனவும் மேலதிக தொழில் வாய்ப்பு உருவாக்குவது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.
மேலும் வேலையற்ற பட்டதாரிகளின்பிரச்சனையானது நாடளாவிய ரீதியில் காணப்படும் நிலையில் அவர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்குவதற்கான திட்டமிடல் நடைமுறைகளை முன்னெடுப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு வாழ் பட்டதாரிகளுக்கு விசேட முன்னுரிமை அடிப்படையில் அரச தொழில் வெற்றிடங்களை உருவாக்கி வேலையற்ற பட்டதாரிகளை இணைத்துக்கொள்ள வேண்டும் என எமது பிரதிநிதிகளும் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதமரிடம் விசேட கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.
இதே வேளை மேன்மை தங்கிய கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவால் வழங்கப்பட்ட மேற்குறித்த வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றுவதற்கு ஏதுவாக அதன் தொடர்ச்சி தன்மை தொடர்பில் அக்கறை செலுத்துவதாக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வேலைவாய்ப்பு வழங்கல் தொடர்பில் ஆக்கபூர்வமான செயற்பாடுகள் முன்னெடுக்க்ப்படும் பட்சத்தில் எமது காலவரையறையற்ற போராட்டம் கைவிடுவது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் பரிசீலிக்கப்படும்.
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம்
Spread the love