முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறை மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை விடுவித்து கொழும்பு விசேட மேல்நீதிமன்றம் வழங்கிய உத்தரவை உயர் நீதிமன்றம் நேற்று (05) வலுவற்றதாக்கி தீா்ப்பளித்துள்ளது
புலனாய்வுத் தகவல்கள் கிடைத்தும் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கத் தவறியமையின் ஊடாக குற்றவியல் குற்றச்சாட்டுகளின் கீழான குற்றங்களை இழைத்துள்ளதாக குற்றஞ்சுமத்தி சட்டமா அதிபர் தாக்கல் செய்திருந்த வழக்கில் கொழும்பு விசேட மூவரடங்கிய மேல்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவே இவ்வாறு வலுவற்றதாக்கப்பட்டுள்ளது.
சட்ட மாஅதிபரால் பிரதிவாதிகளுக்கு எதிராக தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டிருந்த 2 வழக்குகளை விசாரித்த மேல்நீதிமன்ற விசேட மூவரடங்கிய நீதிபதிகள் குழாம், 2022 பெப்ரவரி 18ஆம் திகதி , பிரதிவாதிகளை விடுவித்து வழங்கிய தீர்ப்பை சவாலுக்குட்படுத்தி சட்ட மாஅதிபரால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான இறுதி தீர்ப்பை வழங்கி உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
வழக்கு விசாரணையை மீள ஆரம்பித்து பிரதிவாதிகள் தரப்பு விளக்கத்தை கோருமாறு மேல்நீதிமன்றத்திற்கு உத்தரவிட்ட நீதியரசர்கள் குழாம் அவ்வாறு செய்யாமல் பிரதிவாதிகளை விடுவித்தமை சட்டத்திற்கு முரணான உத்தரவு என தீர்மானித்து இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.