கடந்த காலங்களில் நாம் மக்களுக்காக பொறுப்பெடுத்து மேற்கொண்ட பொறுப்புகளை மக்கள் எம்மிடமிருந்து எடுத்து புதியவர்களின் கைகளுக்கு கொடுத்துள்ளனர். இம்முடிவை வழங்கிய மக்களிடம் நாம் எவ்வித வெறுப்புகளும் கொள்ளப்போவதில்லை. பல்வேறு தேவைகளோடு வாழும் மக்கள் அவற்றை தீர்ப்பதற்கான வழியை புதிதான முறையில் தேர்ந்தெடுத்த ஓர் தீர்மானமாகவே கருகிறோம்.
நாம் பதவிகளில் இருக்கும்போது எம்மக்களுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் மக்களுடைய தேவைகளை இனங்கண்டு அவற்றை நிவர்த்தி செய்தோம் என்ற மனத்திருப்தி முழுமையாக உள்ளது. ஏனையவர்களைப்போன்று எதையும் செய்யாது காலத்தைக் கடத்திய அரசியல்வாதியாக நான் இருக்கவில்லை என்பது நிதர்சனமானது. இந்த பொறுப்பை மக்கள் இப்போது புதிதாக கையளித்துள்ளவர்களும் இப்பணிகளை சிறப்பாக தொடர்வார்கள் என்ற நம்பிக்கையே மக்களிடத்தில் உள்ளது.
இத்தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ளும் அதே நேரத்தில், காலங்காலமாக பரம்பரை அரசியல் செய்யும் தேவையும் விருப்பமும் எனக்கில்லை என்பதோடு என்னால் எனது சொந்த விடயங்களை கவனிக்க கிடைத்த சந்தர்ப்பமாகவும் இதனை எடுத்துக் கொள்கிறேன். அதேநேரத்தில் மக்களுக்கு என்னால் ஆற்றக்கூடிய சேவைகளை அங்கஜன் இராமநாதன் என்ற தனிநபராக தொடர்ந்தும் மேற்கொள்வேன். தோல்விகளை சந்திக்காதவர்கள் ஒருபோதும் வெற்றியாளராவதில்லை. அதேநேரத்தில் தோற்றாலும் விட்டுச்செல்வதுமில்லை.
இத்தேர்தலில் எம்மீது நம்பிக்கையோடு வாக்களித்த 12,427 யாழ், கிளிநொச்சி மாவட்ட வாக்காளர்களுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.