சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து இலங்கையில் ஒன்றிணைக்கப்பட்ட சொகுசு காரை பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி ஆகியோரின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. முன்னாள் லொஹான் ரத்வத்த டிசம்பர் 2ஆம் திகதி வரையும் அவரது மனைவி நவம்பர் 22 வரையும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஒக்டோபர் 30 ஆம் திகதி லொஹான் ரத்வத்த, குறித்த காரை பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கட்டுகஸ்தோட்டையில் வைத்து மிரிஹான காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் நவம்பர் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இவ்வாறானதொரு பின்னணியில் ரத்வத்தவின் மனைவியான ஷஷி பிரபா ரத்வத்தயும் நவம்பர் 4ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு நவம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
பின்னர் நவம்பர் 7ஆம் திகதி சந்தேகநபர்களை நுகேகொட நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்திய போது சந்தேகநபர்களின் பிணை கோரிக்கையை நிராகரித்த நீதவான் சந்தேக நபர்களை இன்று வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இந்தநிலையில் சந்தேகநபர்கள் இன்று காலை நுகேகொட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது சந்தேகநபர்கள் சார்பில் நீதவான் முன்னிலையில் முன்னிலையான சட்டத்தரணிகள், தமது தரப்பினருக்கு எதிராக மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் குற்றங்கள் மாத்திரமே தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அந்தக் குற்றச்சாட்டுக்கள் பிணையில் வைக்கப்படக்கூடியவை என்பதனால் எந்தவொரு நிபந்தனையின் கீழும் அவர்களை விடுவிக்குமாறும் தெரிவித்தனர்.
எனினும், சந்தேகநபர்களுக்கான பிணை கோரிக்கையை நிராகரித்த நுகேகொட நீதவான், சந்தேகநபரான முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவை டிசம்பர் 2ஆம் திகதி வரையிலும், சந்தேகநபரான ஷஷி பிரபா ரத்வத்தவை நவம்பர் 22ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.