முந்தைய விதிகளின் நடைமுறையிலிருந்து விலகி, புதிய அரசாங்கம் இராஜாங்க அமைச்சர்கள் என்ற கருத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது, ஆனால் அதற்கு பதிலாக 26-28 துணை அமைச்சர்கள் ஓரிரு நாட்களில் நியமிக்கப்படுவர் என அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
புதிதாக பதவிப்பிரமாணம் செய்து கொண்ட சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சரான கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ, பிரதி அமைச்சர்கள் நியமனம் விரைவில் இடம்பெறும் எனவும் தேர்தலுக்கு முன்னதாக முன்வைக்கப்பட்ட கொள்கை விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறே இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள் எனவும் அவா் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அமைச்சின் செயலாளர்களும் மாற்றப்பட்டு மீண்டும் நியமிக்கப்படுவார்கள் அல்லது புதிதாக நியமிக்கப்படுவார்கள் எனவும் இது குறித்து இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் தொிவித்துள்ளாா். எவ்வாறாயினும், நிதிச் செயலாளராக மஹிந்த சிறிவர்தனவைத் தக்கவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நேற்று தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளாா் எனவும் . தானும் இன்று தனது அலுவலகத்தில் பணியை ஆரம்பிக்கவுள்ளதாகவும் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.