Home இலங்கை வடக்கு – கிழக்கு – தெற்கு – மேற்கு உள்ளிட்ட இலங்கையின் அனர்த்த நிலை – ஒரே பார்வையில்!

வடக்கு – கிழக்கு – தெற்கு – மேற்கு உள்ளிட்ட இலங்கையின் அனர்த்த நிலை – ஒரே பார்வையில்!

சீரற்ற வானிலையால் 207,582 பேர் பாதிப்பு.

by admin

நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக 59,629 குடும்பங்களைச் சேர்ந்த 207,582 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், குறித்த அனர்த்தத்தினால் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உதய ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதுவரை இருவர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காணாமல் போயுள்ளனர்.

இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக 06 வீடுகளுக்கு முழுமையான சேதங்களும், 335 பகுதி வீடுகளும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

 

களனி, கலா ஓயாவுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை.


களனி கங்கை மற்றும் கலா ஓயா தாழ்நிலப் பகுதிகளில் அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கலா ​​ஓயா படுகையின் மேல் மற்றும் மத்திய பகுதிகளில் சில பகுதிகளில் கணிசமான மழை பெய்துள்ளது.

ராஜாங்கனை நீர்த்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு கிட்டத்தட்ட 10,000 கனஅடி நீர் திறந்துவிடப்படுவதாகவும், தற்போதைய நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 90 எனவும் நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, அடுத்த 48 மணித்தியாலங்களில் நொச்சியாகம, ராஜாங்கனை, வனாத்தவில்லுவ மற்றும் கருவலகஸ்வெவ ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட கலா ஓயா பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று காலை 10.00 மணியளவில் களனி ஆற்றுப் படுகையின் நடுப்பகுதி மற்றும் கீழ்ப்பகுதிகளில் கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இதன்படி, அடுத்த 48 மணித்தியாலங்களில், களனி கங்கை பள்ளத்தாக்கின் சீதாவக்க, தொம்பே, ஹோமாகம, கடுவெல, பியகம, கொலன்னாவ, கொழும்பு மற்றும் வத்தளை பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட தாழ்நிலப் பகுதிகளில் சிறு வெள்ளம் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலையால் புகையிரத சேவைக்கும் பாதிப்பு.


சீரற்ற காலநிலை காரணமாக மலையக மற்றும் மட்டக்களப்பு புகையிரத மார்க்கத்தின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மார்க்கத்தில் பொலன்னறுவை வரையில் புகையிரத சேவையை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மலையக புகையிரத பாதையில் நானுஓயா வரையில் போக்குவரத்தை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்று (27) காலை ஹட்டன் புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள புகையிரத பாதையில் பாரிய குப்பை மேடு ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளது.

குப்பை மேடு இடிந்து விழும் போது, ​​புகையிரத உல்லாசப் பயணிகள் இதனைக் கண்டு புகையிரத நிலையத்திற்கு அறிவித்த காரணத்தினால், நானுஓயாவிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் பயணிகள் புகையிரதம் நிறுத்தப்பட்டது.

புகையிரத தண்டவாளத்தில் விழுந்த குப்பைக் குவியலை அகற்றிய பின்னரே கொழும்பு நோக்கு புகையிரதம் பயணித்ததாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒலுவில் பகுதியில் உடைந்து விழுந்த பாலம்.


அம்பாறை மாவட்டத்தின் ஓலுவில் கழியோடைக்கு அருகில் உள்ள பாலம் உடைந்து விழுந்ததன் காரணமாக அக்கரைப்பற்று-கல்முனை பிரதான பாதையின் போக்குவரத்து நடவடிக்கை தடைப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக பெரும் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் அக்கரைப்பற்று-கல்முனை பிரதான வீதியில் ஒலுவலில் கழியோடைக்கு அருகில் உள்ள பாலம் இன்று அதிகாலை இடிந்து வீழ்ந்துள்ளதன் காரணமாக அதன் ஊடான போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளன. வெள்ள நீரோட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பகுதியில் இராணுவத்தினரும் காவல்துறையினரும் அப்பகுதியினால் செல்லும் மக்களை விழிப்பூட்டிவருவதுடன் குறித்த பாலத்தினை கடக்கும் மக்களுக்கு உதவியும் வருகின்றனர். இந்த பாலம் உடைந்துள்ளதன் காரணமாக சாரதிகள் மாற்று வீதியை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

கொழும்பு-யாழ் வீதியின் போக்குவரத்து பாதிப்பு.


யாழ்ப்பாணம்-கொழும்பு பிரதான வீதியின் புத்தளம் பிரதேசத்தில் இன்று (27.11.24) காலை பாரிய மரம் ஒன்று வீழ்ந்துள்ளது. இதனால் குறித்த வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாக தடைப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், அக்குரஸ்ஸ, இம்புல்கொடவில் படகில் ஏறி வெள்ளத்தில் சிக்கி தத்தளித்த 16 வயது மாணவன் ஒருவரை 20 வயது இளைஞன் காப்பாற்றியுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது. களனி கங்கை நிரம்பி வழிவதால் க்ளென்கொஸ், கித்துல்கல, தெரணியகல மற்றும் நோர்வூட் ஆகிய பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நில்வலா ஆறு நிரம்பி வழிவதால் பாணடுகம பிரதேசத்திற்கும் மகாவலி ஆறு நிரம்பி வழிவதால் பேராதனை மற்றும் நாவலப்பிட்டி பகுதிகளுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மல்வத்து ஓயாவை அண்மித்த தந்திரமலை பிரதேசம், தெதுரு ஓயாவை அண்மித்த மொரகஸ்வெவ பிரதேசம் மற்றும் மஹா ஓயாவை அண்மித்த படல்கம பகுதிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஓமந்தை பகுதியில் வௌ்ளம்- சாரதிகளுக்கு அறிவித்தல்.
யாழ்ப்பாணம் செல்லும் A9 பிரதான வீதியின் ஓமந்தை பகுதியில் வௌ்ளம் ஏற்பட்டுள்ளதாக காவற்துறை  ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. எனவே, குறித்த வீதியைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மாற்று வீதிகளில் பயணிக்குமாறு காவல்துறையினா் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதற்கமைய கெப்பத்திக்கொல்லாவ, வெலிஓயா, முல்லைத்தீவு, பரந்தன், மன்னார் ஊடாக யாழ்ப்பாணம் செல்ல முடியும் என காவற்துறையினர் தெரிவித்தனர்.

நீர்த்தேக்கங்கள், ஆறுகள் பெருக்கெடுக்கும் அபாயம்.

நாட்டின் பல நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிவதாகவும் பெரும்பாலான ஆறுகள் பெருக்கெடுத்து வருவதாகவும் நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (27) காலை நிலவரப்படி தெதுரு ஓயா நீர்த்தேக்கத்திற்கு வினாடிக்கு 32,145 கனஅடி நீர் திறந்துவிடப்படுவதாக அதன் பொறியாளர் ஜி. டபிள்யூ. ஏ. சதுரா தில்தாரா தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக வாரியபொல, நிகவெரட்டிய, மஹவ, கொபேகனே, பிங்கிரிய, பல்லம, ஹலவத்தை, ஆராச்சிக்கட்டுவ, ரஸ்நாயக்கபுர ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட தாழ்நில பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு சதுரா தில்தாரா கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையில், ராஜாங்கனை நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 3,520 கன அடியும், கவுடுல்ல நீர்த்தேக்கத்திற்கு வினாடிக்கு 1,000 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மேலும், யான் ஓயா நீர்த்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 6,099 கன அடியும், பராக்கிரம கடலில் இருந்து வினாடிக்கு 5,046 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதேவேளை, மகாவலி ஆற்றின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களும் வெள்ளத்தில் பாதிக்கும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் மேலும் தெரிவிக்கிறது.

 

மல்வத்து ஓயாவின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அபாயம்.

மல்வத்து ஓயா குளத்தை சுற்றியுள்ள தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுக்கும் சாத்தியம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அநுராதபுரம், வவுனியா, மன்னார் மாவட்டங்களின் சில பகுதிகளில் நேற்று இரவு முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக மல்வத்து ஓயா குளத்தின் நீர் மட்டம் அதிகரிப்பால் அனுராதபுரம் மாவட்டத்தில் மஹாவிலச்சிய பிரதேச செயலகப் பிரிவு, வவுனியா மாவட்டத்தின் வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் மன்னார் மாவட்டத்தின் நானாட்டான், மூசாலை, மடு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட தாழ்நிலப் பகுதிகளில் அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்படக் கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்குமாறும், வெள்ளத்தில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அப்பகுதி மக்களிடம் நீர்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

150 மி.மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை.

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை நவம்பர் 26, 2024 அன்று இரவு 11.30 மணியளவில் திருகோணமலைக்கு தென்கிழக்கே சுமார் 190 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டது. இது இன்று (நவம்பர் 27) மேலும் தீவிரமடைந்து நாட்டின் கிழக்கு கடற்கரைக்கு அருகே வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து சூறாவளி புயலாக மாற வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக தாக்கத்தினால், நாட்டின் பல பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் கனமாக காணப்படுவதுடன், வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் மிக பலத்த மழையும் பலத்த காற்று வீசுமென எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் வடக்கு, வடமத்திய, மத்திய, மேற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் கேகாலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யும். சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழையும் பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, வடமத்திய, மத்திய, மேற்கு, வடமேற்கு, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மணிக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும்.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு பொதுமக்கள் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More