வௌ்ளை வான் சம்பவம் தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட இரு பிரதிவாதிகளை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (29) விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
2019 ஜனாதிபதித் தேர்தலின் போது வெள்ளை வான்களில் ஆட்கள் கடத்தப்பட்டமை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் ஊடாக அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு அவமதிப்பு ஏற்படுத்தப்பட்டதாக குற்றம் சுமத்தி தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு விசாரணைக்கு அமைய இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு அவமதிப்பை ஏற்படுத்தும் நோக்கில் பொய்யான சாட்சியங்களை உருவாக்குதல், ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளைப் பாதிக்கக்கூடிய செயலைச் செய்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மொஹமட் ரூமி ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது