Home இலங்கை தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம்! நிலாந்தன்.

தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம்! நிலாந்தன்.

"ஓம் ஊசி வென்றால்தானே காமெடி பார்க்கலாம்"

by admin

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது கிளிநொச்சி தொண்டமான் நகரில் உள்ள வாக்களிப்பு நிலையத்தில் வரிசையில் நின்ற ஒருவர் தனக்கு முன்னால் நின்ற இளைஞரிடம் கேட்டிருக்கிறார் “யாருக்கு வாக்களிக்கப் போகிறாய்?” “ஊசிக்குத்தான்” என்று இளைஞர் பதில் சொல்லியுள்ளார். “ஊசிக்கா?” இவர் திரும்பக் கேட்க, “ஓம் ஊசி வென்றால்தானே காமெடி பார்க்கலாம்” என்று அவர் சிரித்துக் கொண்டு பதில் சொல்லியுள்ளார்.

உண்மை. அர்ஜுனா சிரிக்க வைக்கிறார். கடந்த வாரம் யாழ். போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்து, வைத்தியசாலையின் பணிப்பாளரோடு அவர் வாக்குவாதப்பட்டார்.கடந்த வெள்ளிக்கிழமை நடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அவர் ஒரு சபை குழப்பி போல நடந்துகொண்டார்.இவற்றைப் பார்த்துச் சிரிக்கும் ஒவ்வொரு தமிழரும் அர்ஜுனாவை மட்டும் பார்த்துச் சிரிக்கவில்லை. தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கிறார்கள் என்பதுதான் உண்மை. ஏனென்றால் அவருக்கு வாக்களித்தது தமிழ் மக்கள்தான்.

தமிழரசியல்,குறிப்பாக ஆயுதப் போராட்ட அரசியல் அதிகம் சீரியஸானது. ஆயுதப் போராட்டத்திற்கு பின்னரான கடந்த 15 ஆண்டு கால அரசியலிலும் சீரியஸ் அதிகம். கலகலப்பு, பம்பல்,சிரிப்பு குறைவு. கடந்த 15 ஆண்டுகளாக அவ்வாறு அரசியலை சிரிக்கும் விடயமாக மாற்றும் கார்ட்டூனிஸ்டுகள் குறைந்த ஒரு தமிழ்த் தேசியப் பரப்பில் அர்ஜுனா ஒரு “கார்ட்டூன் கரெக்ராக”, “கரிக்கேச்சராக” -(caricature) அதாவது கேலிச்சித்திரமாக மேலெழுந்துள்ளார். அவர் எல்லாவறையுமே கரிக்கேச்சர் ஆக்கிவிடுகிறார்.தன்னையும் சேர்த்து.

அவர் மருத்துவ நிர்வாகத் துறைக்குள் வேலை செய்தவர். ஒரு போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் மீது குற்றச்சாட்டுகளை வைப்பதென்றால், அதை எப்படிச் செய்ய வேண்டும் என்ற ஒழுங்குமுறை தெரியாதவராக இருக்க முடியாது. அதை அவர் மாகாண நிர்வாகத்துக்கு ஊடாக அணுகியிருக்கலாம். அல்லது சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சுக்கூடாக அணுகியிருக்கலாம். இரண்டையும் அவர் செய்யவில்லை. நாடாளுமன்ற உறுப்பினராக தனக்கு மக்கள் அதிகாரம் கிடைத்திருப்பதாக அவர் கருதுகிறார். அது அதிகாரம் அல்ல. அது ஒரு பொறுப்பு. அந்தப் பொறுப்பை உணர்ந்து அவர் நடப்பதாகத் தெரியவில்லை. இதனால் அரச அதிகாரிகள் மீதும் திணைக்களங்களின் மீதும் அவர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் அவற்றின் கனதியை இழக்கின்றன.

அரச உயர் அதிகாரிகளும் திணைக்களங்களும் கேள்விக்கு அப்பாற்பட்டவை அல்ல. அர்ச்சுனா கேட்கும் கேள்விகளை ஒரு பகுதி மக்கள் ரசிக்கிறார்கள்; ஆர்வத்தோடு பார்க்கிறார்கள். ஆனால், அக்கேள்விகளை எனது முன்னைய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டதுபோல,அர்ச்சுனா “மிஸ்ரர்.பீனின்” பாணியில் கேட்கும்போது அக்கேள்விகள் அவற்றின் சீரியஸ்தனத்தை இழந்துவிடுகின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை அவர் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நடந்து கொண்ட விதம்,அவருக்கும் மருத்துவர் சத்தியமூர்த்திக்கும் இடையிலான முரண்பாடு, அவருக்கும் அரச உயர் அதிகாரிகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் போன்றவற்றைத் தொகுத்துப் பார்க்கும்போது, அவர்,யாருக்கும் பொறுப்புக்கூறத் தேவையில்லாத ஒருவராகத் தன்னை கருதுகிறாரா என்று கேள்வி எழுகிறது.

அர்ஜுனாவை மோசமான வார்த்தைகளால் விமர்சிக்கும் சிங்கள அரசியல்வாதிகளும் சிங்கள,ஆங்கில ஊடகங்களும் அவருக்கு வாக்களித்த தமிழ் மக்களைத்தான் மறைமுகமாக விமர்சிக்கின்றன. தென்னிலங்கையிலும் மேர்வின் டி சில்வாக்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சுயேச்சைகள் அல்ல.கட்சித் தலைமைக்குக் கீழ்ப்பட்டவர்கள். ஆனால் அர்ஜுனா யாருக்கும் கட்டுப்படாத, யாரையும் பொருட்படுத்தாத ஒருவரா?

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஒன்றில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எப்படிப் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்பதனை அவருக்கு யார் கற்றுக் கொடுப்பது? அல்லது அவர் யாரிடமிருந்தாவது கற்றுக்கொள்ளத் தயாரா? ஒன்றில் சபை நாகரீகம் தெரிய வேண்டும்.அல்லது வெட்கம்,அவையடக்கம் இருக்க வேண்டும். இவை எவையுமே இல்லாத ஒருவரை ஏன் தமிழ் மக்கள் தெரிந்தெடுத்தார்கள்? அல்லது அவரைப்போன்ற ஒருவரைத் தெரிந்தெடுக்கும் அளவுக்கு தமிழ்மக்களை நிர்பந்தித்த காரணிகள் எவை?

அர்ஜுனா தற்செயலாக மேலெழவில்லை.விபத்தாக மேலெழவில்லை.அவர் தெரிந்தெடுக்கப்படுவதற்கான அகப்புற நிலைமைகளை உருவாக்கிய காரணிகள் உண்டு. தமிழ் அரசியல் சமூகம் அவற்றை ஆராய வேண்டும். தலைமைத்துவ வெற்றிடம்;தங்களுடைய சின்னச்சின்ன அன்றாடப் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுக்க யாராவது வேண்டும் என்று தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் சிந்தித்தமை;தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஐக்கியமின்மை,அதனால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட சலிப்பும் வெறுப்பும் ; தமிழ்த் தேசியக் கட்சிகள் மக்களுடைய அன்றாடப் பிரச்சினைகளைக் கவனிக்கத் தவறியமை ; சமூக வலைத்தளங்களால்,யூரியூப்களால் ஊதிப் பெருப்பிக்கப்படும் பிம்பங்கள்….போன்ற பல காரணங்களின் விளைவு அவர்.

அவருக்கு விழுந்த வாக்குகள் சுமந்திரன்,கஜேந்திரகுமார் உட்பட முக்கிய தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளுக்கு விழுந்த வாக்குகளைவிட அதிகம். அவர் தன்னுடைய கலகத்தைத் தொடங்கியது சாவகச்சேரி ஆஸ்பத்திரியில். அந்த ஆஸ்பத்திரி வாசலில் இருந்து சிறிது தூரத்தில்தான் ரவிராஜின் சிலை உண்டு. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சாவகச்சேரி மக்கள் ரவிராஜின் நினைவுகளை விடவும் அர்ஜுனாவின் நேரலைகளுக்கு அதிகம் வாக்களித்திருக்கிறார்கள். ரவியின் சிலை கண்ணீர் விடுவதுபோல உங்களுக்கு தோன்றவில்லையா? என்று மனோகணேசன் என்னிடம் கேட்டார்.

அர்ஜுனாவின் சுயேச்சைக் குழுவுக்கு வாக்களித்தது மொத்தம் 27,855 பேர். யாழ்ப்பாணத்தில் விழுந்த செல்லுபடியாகும் வாக்குகளின் தொகை மொத்தம் 358,079. இதில் 8.56விகிதத்தினர் அவருக்கு வாக்களித்திருக்கிறார்கள். “அது ஒரு சிறிய தொகைதான். ஆனால் அந்தத் தொகை அடுத்தடுத்த தேர்தலில் பல மடங்காகப் பெருகும் ஆபத்தை எப்படித் தடுப்பது?” என்று மூத்த,ஊடகச் செயற்பாட்டாளரும் சமூக செயற்பாட்டாளருமாகிய நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார். தேசமாகத் திரட்டப்படாத மக்கள் எதிர்காலத்திலும் அர்ஜுனாக்களைத்தான் தெரிவுசெய்யப் போகிறார்கள் என்று நான் அவருக்குச் சொன்னேன்.

சமூக வலைத்தள ஊடகச் சூழலும், குறிப்பாக யுரியுப்பர்களும் அந்தச் சிறிய தொகையை பெரிய தொகையாக மாற்றுவதை எப்படித் தடுப்பது? யூரியூப்பர்களின் காலத்தில் தேசத்தைத் திரட்டுவதற்கான புதிய, படைப்புத்திறன் மிக்க உபாயங்களைத் தமிழ்த் தேசியவாதிகள் கண்டுபிடிக்க வேண்டும். ஜனாதிபதி தேர்தலில்,தமிழ்ப் பொது வேட்பாளரை முன்நிறுத்தி,தமிழ் மக்களைத் தேமாகத் திரட்ட முயன்ற தரப்புகளுக்கு எதிராக சில யூரியுப் வெறுப்பர்கள் (haters) தனிப்பட்ட தாக்குதல்களை நடாத்தினார்கள். தமிழக எழுத்தாளர் தொ.பரமசிவன் வெறுப்பர்களைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார்… ” இப்ப எழுதும் சிலரின் எழுத்தை வாசித்தால் வெறுப்புதான் முழுமையாய் வெளிப்படும்.எதிர்ப்பை வெளிப்படுத்துவது தவறல்ல. வெறுப்பு என்பது இரு காரணங்களால் வெளிப்படுவது. ஒன்று இயலாமை; மற்றொன்று பொறாமை. இதற்கு மருந்தே கிடையாது”.தமிழ்த் தேசியப் பரப்பில் அவ்வாறு மருந்து கொடுத்துக் குணப்படுத்த முடியாத வெறுப்பர்கள் தொகை அதிகரித்து வருகின்றது.கட்சிகளுக்குள்ளும் கட்சிகளுக்கு வெளியிலும் புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் வெறுப்பர்கள் பெருகி வருகிறார்கள்.

இவ்வாறு கட்சிகளாலும் ஊடகங்களாலும் வெறுப்பர்களாலும் சிதறடிக்கப்படும் ஒரு மக்கள் கூடத்தைத் திரட்டத் தவறிய தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளுக்கு கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் எப்படிப்பட்ட ஒரு தீர்ப்பை வழங்கினார்கள்? அது தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு தமிழ் மக்கள் வழங்கிய ஒரு தண்டனை. அதே சமயம் அர்ஜுனாவுக்கு தமிழ் மக்கள் வழங்கிய வெற்றியை எப்படிப் பார்ப்பது? அது தமிழ்மக்கள் தங்களுக்குத் தாங்களே வழங்கிய தண்டனையா?

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More