இந்திய பிரதமர் நரேந்திர மோடி – இலங்கையின் ஜனாதிபதி அனுரவின் சந்திப்பின்போது கடற்றொழிலாளர்கள் விடயத்தில் மனிதாபிமான அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் குறித்த மனிதாபிமான அணுகுமுறை என்றால் என்ன என்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் வினவவுள்ளேன் என முன்னாள் கடற்றொழில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதியின் அண்மைய இந்திய விஜயத்தின் போது இலங்கை – இந்தியா இடையே கடற்றொழிலாளர்கள் விடயம் தவிர இணக்கம் காணப்பட்ட அல்லது கைச்சாத்திடப்பட்ட ஏனைய விடயங்கள் அனைத்தும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலான அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களை வலுவூட்டியதாகவே அமைந்துள்ளது. அதனடிப்படையில் குறித்த செயற்பாட்டை நான் வரவேற்கின்றேன்.
இதேவேளை கடற்தொழிலாளர்கள் பிரச்சினைகளில் எதுவிதமான தீர்வுகளையும் குறித்த பயணத்தின்போது எட்டப்பட்டதாக தெரியவில்லை. இதேநேரம் மனிதாபிமான அடிப்படையில் குறித்த விடயத்தை அணுக வேண்டும் என்ற நிலைப்பாடு வலியுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறாயின் மனிதாபிமான நிலைப்பாடு என்பது என்ன என்பதே இன்றுள்ள கேள்வியாக இருக்கின்றது.
அதாவது இலங்கையின் கடற்பரப்பிற்குள் இந்திய மீன்பிடியாளர்கள் வந்து மீன்களை பிடித்து செல்வதற்கும் அவ்வாறான சந்தர்ப்பங்களில் இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்யாதிருக்க வேண்டும் என்பதே இந்த மனிதாபிமான நிலைப்பாடாக இருக்க வேண்டும்.
ஆனால் எனது நிலைப்பாடு அன்றும் சரி இன்றும் சரி எமது கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக இந்திய மீன்பிடியாளர்கள் உள்நுழைந்து மீன்களை பிடிக்கவோ எமது வளங்களை அபகரிக்கவோ ஒரு வினாடி கூட இடமளிக்க கூடாதென்பதாகவே இருக்கின்றது. இதை நான் பொது வெளியிலும் பல தடவைகள் கூறியிருக்கின்றேன்.
அதுமட்டுமல்லாது கடந்தகாலம் நான் ஆட்சியில் இருந்தபோது இலங்கை இந்திய வெளிவிவகார உயரதிகாரிகள் கலந்துகொண்ட கலந்துரையாடிலின்போது சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அப்போதும் இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு எந்தவகையிலும் இந்திய சட்டவிரோத மீன்பிடி செயற்பாடுகளுக்கு இடம் கொடுக்க முடியாதென நான் கூறியிருந்தேன்.
அந்தவகையில் தற்போது சிலர் ஊடகங்களில் கூறுவது போன்று எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எமது கடல் வளத்தையோ கடற்பரப்பையோ இந்திய மீன்பிடியாளர்களுக்கு இடங்கொடுப்பதற்கான சந்தர்ப்பத்தை கொடுப்பதற்கு இடமளிக்கவில்லை என மேலும் தெரிவித்தார்.