22
யாழ்ப்பாணம், நெடுந்தீவு பிரதேசத்தில் இருந்து குறிகட்டுவான் இறங்குதுறைக்கு இறைச்சியுடன் வந்த காவல்துறை உத்தியோகஸ்தரை இளைஞர்கள் கடற்படையினரின் உதவியுடன் மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
நெடுந்தீவு பகுதியில் இளைஞன் ஒருவர் வளர்த்து வந்த ஆடொன்று காணாமல் போயுள்ளது. அந்நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை , விடுமுறையில் வீடு செல்வதற்காக நெடுந்தீவு காவல்நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவானுக்கு படகில் வந்து இறங்கிய வேளையில் , அவரது கையில் சந்தேகத்துக்கு இடமான முறையில் ரெஜிபோம் பெட்டி காணப்பட்டுள்ளது.
அது தொடர்பில் படகில் வந்த இளைஞர்கள் கடற்படையினருக்கு தகவல் வழங்கி குறித்த பெட்டியை சோதனை செய்த போது , அதற்கு ஒரு தொகை இறைச்சி காணப்பட்டுள்ளது. நெடுந்தீவில் காணாமல் போன ஆட்டினை இறைச்சியாக்கி காவல்துறை உத்தியோகஸ்தர் எடுத்து செல்வதாக இளைஞர்கள் குற்றம் சாட்டினார்கள்.
அதனால் , மீட்கப்பட்ட இறைச்சியையும் , காவல்துறை உத்தியோகஸ்தரையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக ஊர்காவற்துறை காவல்துறையினரிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.
மீட்கப்பட்ட இறைச்சி, ஆட்டிறைச்சியா என்பதனை கண்டறிந் த பின்னரே மேலதிக நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Spread the love