யாழ்ப்பாணத்தில் கடந்த இரு வார கால பகுதியாக எலிக் காய்ச்சலால் உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வருவதால் , மக்கள் மத்தியில் ஒரு வித பய உணர்வு ஏற்பட்டுள்ளதுடன், சுகாதார பிரிவினர்கள் அவற்றினை தடுப்பதிலும் சவால்களை எதிர்கொண்டுள்ளனர்.
நோயில் இருந்து எம்மை பாதுகாத்து கொள்ள
அசுத்தமான தண்ணீருடன் தொடர்பு ஏற்படுவதை தடுக்க வேண்டும். சுகாதார முறைகளை பேணுதல் மூலம் நோய்த் தொற்றில் இருந்து எம்மை பாதுகாத்து கொள்ள முடியும்.
குறிப்பாக தொற்றுக்குள்ளான தண்ணீருடன் நேரடியாக தொடர்பு ஏற்படுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், வெள்ள நீர், சேறு மற்றும் தேங்கி நிற்கும் நீர் என்பன விலங்குகளின் சிறுநீற்றால் தொற்றாக்கப்பட்டிருக்கலாம். அதனால் அந்நீரினை பயன்படுத்துவதை தவிர்த்து கொள்ள வேண்டும்.
அதாவது, சுத்தமான கொதித்து ஆறிய நீரை பருகுதல், குளம் குட்டைகள், வெள்ளத்தால் மூழ்கிய கிணறுகள் என்பவற்றில் குளிப்பதையோ , நீந்துவதையோ தவிர்த்துக்கொள்ளல். அந்த நீரை அருந்தவோ, வாய் கொப்பளிக்கவோ கூட பயன்படுத்த வேண்டாம்.
கால்களில் செருப்பு அல்லது சப்பாத்து இல்லாமல் வெள்ள நீர் தேங்கி நிற்கும் இடங்கள் , சேற்று நிலங்களில் இறங்க வேண்டாம். விவசாயிகள் கூட வயல் நிலங்களில் இறங்கும் போது , சுகாதார முறைமைகளை பின்பற்ற வேண்டும்.
சரியான சுகாதார நடைமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும். வெளியே சென்று வந்த பின்னரும், விலங்குகளை கையாண்ட பின்னரும் சவர்க்காரம் மற்றும் நல்ல நீர் கொண்டு கை கால்களை நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். எலிக்காய்ச்சல் தொடர்பில் விழிப்புடன் இருந்தால் மாத்திரமே எம்மையும் எம்மை சூழவுள்ளவர்களையும் பாதுகாத்து கொள்ள முடியும்.