Home இலங்கை ஆபிரிக்கப் பெரும் நத்தைகளால் பெரும் ஆபத்து – எச்சரிக்கும் ஐங்கரநேசன்!

ஆபிரிக்கப் பெரும் நத்தைகளால் பெரும் ஆபத்து – எச்சரிக்கும் ஐங்கரநேசன்!

by admin
ஆபிரிக்கப் பெரும் நத்தைகளைக் கட்டுப்படுத்தாவிடில்
விரைவிலேயே பேராபத்துகள் விளையும் என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார்.
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் அலுவலகத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஆபிரிக்க நத்தைகள் தொடர்பாக நிகழ்த்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
ஆபிரிக்கப் பெரும் நத்தைகள் (African Giant Snail- Lissachtina fulica)  பிரித்தானியர் ஒருவரால் பின்விபரீதங்கள் புரியாமல் இலங்கைக்குள் எடுத்துவரப்பட்ட ஓர் அந்நிய இனம்.
ஒரு நத்தையிலேயே ஆண், பெண் இனப்பெருக்க அமைப்புகள் இரண்டும் இருப்பதால் இரண்டு நத்தைகள் சோடி சேரும்போது இரண்டுமே முட்டைகளை உருவாக்குகின்றன.
சராசரியாக 5 தொடங்கி 6ஆண்டுகள் வரை வாழுகின்ற ஒரு நத்தை தன் ஆயுளில் 1000க்கும் அதிகமான முட்டைகளை இடுகின்றது.
அந்நிய இனமான இவற்றை இரையாக்க இலங்கையின் இயற்கைச் சூழலில் இரைகௌவிகள் எதுவும் இல்லை. இதனால் பல்கிப்பெருகி இப்போது ஓர் ஆக்கிரமிப்பு இனமாக உருவெடுத்துள்ளது.
உலகின் உயிர்ப்பல்வகைமையின் அழிவுக்கு அந்நிய ஊடுருவல் இனங்களும் ஒரு பெருங்காரணமாக உள்ளது. பகலில் மறைந்திருந்துவிட்டு இரவில் இரைதேடும் ஆபிரிக்க நத்தைகள் பயிர்கள், அலங்காரச் செடிகள், புல்பூண்டுகள் என்று எல்லாவற்றையும் தின்று தீர்த்து வருகின்றன.
 ஒரு தாவரத்தில் உள்ள நோய்க்கிருமிகளை இன்னொரு தாவரத்துக்குக் காவிச் செல்கின்றன. இவற்றோடு  மனிதர்களில் மூளைமென்சவ்வு அழற்சியை ஏற்படுத்தும் ஒட்டுண்ணிப் புழுக்களை இவை காவித்திரிவதும் அறியப்பட்டுள்ளது.
ஆபிரிக்க நத்தைகள் பயிர்ச்செய்கைக்கும், உயிர்ப்பல்வகைமைக்கும் அச்சுறுத்தலாக இருப்பதால் இலங்கை அரசாங்கம் இதனை அந்நிய ஊடுருவல் இனமாக அறிவித்துள்ளது.
ஆபிரிக்க நத்தைகளைக் கட்டுப்படுத்துவதற்குத் திணைக்களங்களுக்காகக் காத்திராமல்  பொதுஅமைப்புகளும், பொதுமக்களும்  முன்வரவேண்டும். உப்பு நீர்க்கரைசல் உள்ள பாத்திரம் ஒன்றில் இவற்றை  அமிழ்த்துவதன் மூலம்  சுலபமாக அழிக்க முடியும்.
 ஆபிரிக்க நத்தைகள் நோய்க்காவிகளாகவும் இருப்பதால் வெறும் கைகளால் நேரடியாகத் தொடாமல் இலைகள், கடதாசிகள் போன்றவற்றால் இவற்றைப் பிடிப்பதே பாதுகாப்பானது. இதனை ஒரு சமூகக்கடமையாகக்கருதி நாம் விரைந்து செயற்படவில்லையெனில் ஏற்கனவே பாரிய பொருளாதாரச் சீரழிவுக்கும், சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கும் ஆளாகியிருக்கும் இலங்கை இந்நத்தையாலும் பெரும் சீரழிவுகளைச் சந்திக்க நேரும் என மேலும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More