60
ஒருபோதும் வெளி மாவட்டங்களில் பணியாற்றாதவர்களை விரைவில் வெளிமாவட்டங்களுக்கு இடமாற்றவேண்டும் என வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
வெளிமாவட்டங்களில் கடமைபுரியும் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள், வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை சந்தித்துக் கலந்துரையாடினர்.
அதன் போது, வெளிமாவட்டங்களில் தாம் நீண்டகாலம் பணியாற்றுகின்றோம், செல்வாக்கு களின் அடிப்படையில் சிலர் சொந்த இடங்களுக்கு இடமாற்றம் பெற்றுள்ளனர். எமக்குப் பின்னர் நியமனம் பெற்றவர்கள் கூட சொந்த இடங்களுக்கு இடமாற்றம் பெற்றுள்ள நிலையில் எமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என ஆளுநரிடம் முறையிட்டனர்.
அதற்கு ஆளுநர், வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் பணியாற்றவேண்டும். அவ்வாறு இதுவரை பணியாற்றாத ஆசிரியர்கள் இருப்பின் உரிய நடைமுறைக்கு அமைவாக அவர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படும்.
வெளி மாவட்டங்களிலிருந்து யாழ். மாவட்டத்துக்கு ஆசிரியர் ஒருவர் இடமாற்றப்படும் போது அதே பாடத்துக்குரிய ஆசிரியர் வெளிமாவட்டத்துக்கு விடுவிக்கப்பட வேண்டும். எதிர்காலத்தில் இந்த நடைமுறைகள் உரிய வகையில் பின்பற்றப்படும் இது தொடர்பில் அதிகாரிகளுக்கும் அறிவுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
Spread the love