இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 17 இந்திய மீனவர்களில் 13 மீனவர்கள் விடுதலை செய்யப் பட்டதோடு, ஏனைய நான்கு மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து சட்ட விரோத முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 17 இந்திய மீனவர்கள் கடந்த டிசம்பர் மாதம் (24) ஆம் திகதி 24.12.2024 செவ்வாய்க்கிழமை அதிகாலை தலை மன்னார் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
குறித்த மீனவர்களின் வழக்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (7) மீளவும் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போதே மன்னார் நீதவான் இவ்வாறு தீா்ப்பளித்துள்ளாா்.
விசாரணை முடிவில் குறித்த 17 இந்திய மீனவர்களில் இரு மீனவர்களின் கைவிரல் அடையாளங்கள் பெறப்படாத காரணங்களினால் இரண்டு மீனவர்களையும் எதிர்வரும் 13ம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறும்,மேலும் இரண்டு மீனவர்களுக்கு இரண்டாவது தடவையாகவும் எல்லை தாண்டி சட்டவிரோத இழுவை மடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்த குற்றத்திற்காக இரண்டு வருட கடூழிய சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது .
ஏனைய 13 பேருக்கும் தளா 50 ஆயிரம் ரூபாய் தண்ட பணத்துடன் கூடிய இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 வருட சிறை தண்டனையும் விதிக்கப்பட்டு 13 பேரையும் மன்னார் நீதிமன்றம் விடுதலை செய்தது.

