நூறு கோடி மக்களின் எழுச்சி 2012 ஆம் ஆண்டு கருத்தியல் ரீதியாக முன்வைக்கப்பட்டு 2013 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகின்றது. 2012 ஆம் ஆண்டு உலக சனத்தொகைக் கணக்கெடுப்பின்படி உலகத்தில் 700 கோடி மக்கள் வாழ்கின்றதாகவும், அதில் முந்நூறு கோடிப் பேர் பெண்களாக உள்ளனர் என்பது அறியப்பட்டது. அப்பெண்களில் 100 கோடிப் பெண்கள் தங்களது வாழ்நாளில் குறைந்தபட்சம் ஒரு தடவையாவது வன்முறைக்குள்ளாக்கப்படுகின்றனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இதனைக் கருத்திற்கொண்ட பெண்நிலைவாதியும், எழுத்தாளருமான அமெரிக்காவைச் சேர்ந்த EVE ENSILER, 2012 ஆம் ஆண்டு பெண்களுக்கெதிரான வன்முறைகள் ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருப்பொருளில் நூறு கோடி மக்களின் எழுச்சியை முன்வைத்தார். அதன் பின்னர் ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி அன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கெதிராக எழுச்சி கொள்வோம், பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும் எனக்கூறி, மகிழ்வான வாழ்வை நோக்கி மனம் திறந்து ஆடிப்பாடி நூறுகோடி மக்களின் எழுச்சியை கொண்டாடுகின்றனர். அந்தவகையில் இலங்கையிலும் 2013 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை நூறுகோடி மக்களின் எழுச்சி கொண்டாடப்பட்டு வருகின்றது.
இதன் அடிப்படையிலேயே இலங்கையில் அநுராதபுரத்திலுள்ள கெக்கிராவ எனும் ஊரில் 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி 14 ஆம் திகதி பெண்களுக்கு எதிரான வன்முறைகளற்ற வாழ்தலை நோக்கியும், வன்முறைகளைக் களைந்து, சமத்துவமான வாழ்க்கையை விரும்பி, சக மனிதர்களையும் இயற்கையையும் அழிக்காது, மகிழ்ச்சியான அன்பினால் ஆன வாழ்வினை செய்வோமென்று அனைவரும் ஒன்று கூடினர். அந்தவகையில் மட்டக்களப்பு சமதை பெண்நிலைவாத நண்பிகளுடன் இணைந்து அவ்வெழுச்சியில் நானும் கலந்து கொண்டேன்.
யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, புத்தளம், அநுராதபுரம், திருகோணமலை, மட்டக்களப்பு, அக்கரைப்பற்று என பல பிரதேசங்களில் இருந்து, பெண்கள் அமைப்புகள், பெண்ணிலைவாத குழுக்கள் மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதில் அக்கறையுள்ள சமத்துவமான வாழ்தலை விரும்பும் ஆண்கள் எனப் பலர் இவ் எழுச்சிக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர்.
அங்கு வருகை தந்தவர்கள் அவர்களுடைய குழுக்களுடன் இணைக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர். அவர்களது வரவேற்பு மிகவும் சிறப்பானதாக அமைந்ததிருந்தது. எவ்வாறெனில் ஒவ்வொரு குழுக்களில் சார்பில் ஒருவருக்கு மண் முட்டியில் உலர் தானியங்கள் கொடுக்கப்பட்டு ஒவ்வொரு குழுக்களையும் வரவேற்றனர். பின்னர் எழுச்சியின் ஆரம்பமாக அனைவரும் கைகோர்த்து விசாலமான வட்டத்தில் இணைந்து நின்று பின்வரும் பாடலைப் பாடினர்.
உன் தோழமையில் நான் இருக்கையிலே
காலத்தின் அருமையை உணர்ந்தேனே…..
புதிதான ஒரு உறவு
புதிதான ஓர் இணைவு
புதிதான வண்ணங்கள்
புதிதான ஒரு வாழ்வு…
என்றவாறு கைகளை இணைத்து பாடல் பாடி மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்ச்சி ஆரம்பமாகியது.
இவ்வெழுச்சிக் கொண்டாட்டத்தில் செயற்பாடுகள் ஒவ்வொன்றும் தனித்தனியே நடைபெறுவதற்காக வெவ்வேறு கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
- பிரதான கூடாரம்
- கலைகளுக்கூடாக எழுச்சி கொள்வதற்கான கூடாரம்
- சிற்றுண்டிகள் உண்பதற்கான கூடாரம்
- உள்ளுர் உற்பத்திகளுக்கான விற்பனைக் கூடாரம்
- ஓய்வு எடுக்கும் கூடாரம்
- அறிக்கை கையொப்பமிடும் கூடாரம்
ஒவ்வொரு பிரதேச குழுவினரும் ஒருவரை ஒருவர் சந்தித்து அன்பினைப் பகிர்ந்து கொண்டனர். அன்றைய காலை உணவுக்கு ஒவ்வொரு குழுக்களும் தங்களது ஊரிலிருந்து வெவ்வேறு உணவு பண்டங்களை பகிர்ந்து கொள்வதற்காக கொண்டு வந்திருந்தனர். இன்றைய காலத்தில் வீட்டில் உணவு செய்து உண்பதென்பது அரிது. உடலுக்கு ஆரோக்கியமான சத்தான உணவு பண்டங்களை அங்கு காணக்கூடியதாக இருந்தது. அந்தவகையில் அவல், முட்டை பொரிமா, பனங்கிழங்கு, பருத்தித்துறை வடை, வெள்ளை கௌபி, சிவப்பு கௌபி, இலைக்கஞ்சி போன்ற உள்ளுர் உற்பத்தி உணவு பண்டங்கள் கொண்டுவரப்பட்டு அனைவரும் பகிர்ந்து கொண்டதனை காணக்கூடியதாக இருந்தது. தொன்மைக் காலங்களில் அனைவரும் ஓரிடத்தில் ஒன்றுகூடியிருந்து உணவை பகிர்ந்து உண்டமை நாம் கேள்விப்பட்ட கதைகளாகவே இருந்தன. ஆனால் இவ் ஒன்றுகூடலில் அனைவரும் ஒன்றுகூடி பகிர்ந்து உண்டதனை பார்க்கும்போது இந்த வாழ்க்கை அன்பினால் ஆன மகிழ்ச்சியான வாழ்க்கை என்பதை நிலை நிறுத்திக் காட்டியது.
பிரதான கூடாரத்தில் செயல்வாத பாடல்கள் பாடப்பட்டன. இன்றைய சமுதாயத்தினர் பாடல்கள் என்றாலே சினிமா உலகிற்கு சென்றுவிடுவார்கள். சினிமா பாடல்களில் 90 விகிதமான பாடல்களின் அர்த்தங்கள் கேலித்தனமாகவும், வன்முறைகளைத் தூண்டுவனவாகவும் காணப்படுகின்றன. ஆனால் அங்கு பாடப்பட்ட பாடல்கள் ஒவ்வொன்றும் வாழ்க்கையின் பிரதிபலிப்புக்களாக இருந்தன. அந்த வகையிலே
- பெண்களுக்கெதிரான வன்முறைகள் வேண்டாம்.
- வன்முறையற்ற வாழ்வை உருவாக்குவோம்
- இயற்கையை மதித்து இயற்கை வளங்களை பாதிக்காது வாழ்வோம்
போன்றன அப்பாடல்களின் பேசுபொருள்களாகக் காணப்பட்டன. அக்கூடாரத்தில் அனைவரும் ஒன்றுகூடி தமிழ் மொழியிலமைந்த பாடல்களுக்கு சிங்கள மொழி பெயர்ப்பு உருவாக்கி, அனைவரும் இணைந்து கரங்களைத் தட்டி தமிழ் மொழியிலும், சிங்கள மொழியிலும் பாடல்களைப் பாடி மகிழ்வாக இருந்ததனர்.
கலைகளுக்கூடாக எழுவோம் என்ற கூடாரத்தில், “தூய உள்ளுணர்வின் வெளிப்பாடே கலை” என்பதற்கிணங்க வன்முறைகளற்ற வாழ்வுக்கான காண்பிய கலைஞர்களால் ஓவியச் செயற்பாடுகள் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. அட்டை ஒன்றில் விசாலமான செம்பருத்தி பூ வரையப்பட்டிருந்தது. அங்கு செல்பவர்கள் அப் பூவினை பார்வையிட்டு, பூவின் பகுதிகளில் ஒவ்வொருவரும் தங்களுக்கு மனதில் தோன்றுகின்ற வன்முறையற்ற வாழ்தலுக்கான எண்ணங்களை வசனமாக எழுதிச்சென்றனர். தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் அவ்வசனங்கள் எழுதப்பட்டிருந்தன.
அதுமட்டுமல்லாது பல சிறியளவிலான செம்பருத்தி பூக்களை வரைவதற்காக உள்ளுர் உற்பத்தியான கைத்தறியிலான வெள்ளை நிறச் சீலை ஒன்று விரிக்கப்பட்டிருந்தது. அக்கூடாரத்திற்குச் சென்றவர்கள் அச் சீலையில் பூவினை வரைந்து வர்ணம் தீட்டி அழகுபடுத்தினர். இச்செயற்பாட்டிற்கு செம்பருத்தி பூ ஓவியமாக தெரிவு செய்யப்பட்டமைக்கான காரணம் இந்தப் பூ பல இடங்களில் காணக்கூடியதாகவும் பறிக்கக்கூடியதாகவும் இருக்கின்றது. இன்பம் – துன்பம், நல்லது – கெட்டது என்ற ஏற்றத்தாழ்வு இல்லாது அனைவராலும் பயன்படுத்தப்படுகின்றது. அதேபோல் எங்களது வாழ்க்கையும் ஏற்றத்தாழ்வற்ற இன மத பேதமில்லாத வாழ்க்கையைப் பகிர்வதாக அமைந்திருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதாக செம்பருத்தி பூ ஓவியமாக வரையப்பட்டிருந்தது. அங்கு சென்றவர்கள் அச்செயற்பாட்டை அழகுற செய்தனர். இறுதியில் வெறுமனே வெள்ளை துணியாக விரிக்கப்பட்ட சீலையினை அனைவரும் இணைந்து செம்பருத்தி பூக்களால் வடிவமைக்கப்பட்ட சேலையாக உருவாக்கியிருந்தார்கள். இச்சீலை பார்ப்பதற்கு அழகாகவும் இருந்தது.
அறிக்கைகளில் கையொப்பமிடும் கூடாரம் – விடுதலைக்காய் எழுவோம் என்ற தொனிப்பொருளில் அமைக்கப்பட்டிருந்தது. இக்கூடாரத்தில் இரண்டு விதமான அறிக்கைகள் கையொப்பமிடுவதற்காக வைக்கப்பட்டிருந்தன. அவையாவன
1.மக்கள் வாழும் பகுதிகளில் குரங்குத் தொல்லையை கட்டுப்படுத்தல்
2.வன்முறைகளற்ற வாழ்வை நோக்கி அன்பையும், அகிம்சையையும் எங்கள் பண்பாடாக்குவோம். அன்பினாலான வாழ்தல் காண்போம்.
குரங்குகளின் தொல்லையால் மக்கள் பாரிய பிரச்சனைகளுக்குள்ளாகின்றனர். நாளாந்தம் உள்ளுர் உற்பத்தியான விவசாயத்திற்கு தீங்கு விளைவிக்கிறது. பயிர்களை குரங்குகள் சேதப்படுத்துவதால் பயிர்கள் அழிவடைகின்றன. இதனால் உள்ளுர் உற்பத்தி உழைப்பும் குன்றிப் போகிறது. அதுமட்டுமல்லாது இன்றைய காலகட்டத்தில் தேங்காய்த் தட்டுப்பாடு ஏற்படுவதற்;கு குரங்குகளும் ஒரு வகையில் காரணமாக இருக்கின்றன. ஏனெனில் குரங்குகள் மக்கள் வாழும் குடியிருப்புகளுக்கு சென்று தென்னை மரங்களை சேதப்படுத்துவதால் மரங்கள் அழிவடைகின்றன. எனவே வனவிலங்குகளின் அனர்த்தங்களில் இருந்து பயிர்ச்செய்கைகளை பாதுகாப்பதற்காகவும், விலங்குகள் தங்கி வாழக்கூடிய இடங்களை ஏற்பாடு செய்வதுடன் அவற்றிற்கு இடையூறாக மனிதர்கள் செய்யும் செயற்பாடுகளை தடுத்து மக்கள் வாழும் பகுதிகளில் குரங்குகள் வருவதை தடுத்து தரும்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
இவ்வெழுச்சிக்கு வருகை தந்திருந்த அனைவரும் தங்கள் கிராமங்களில் இந்தப் பிரச்சினை நீடித்துக்கொண்டு போவதாகவும், இதற்கு ஒரு தீர்வு அவசியம் வேண்டும் என்பதனையும் கலந்துரையாடினர். ஏனெனில் இயற்கை அனர்த்தங்கள் மற்றும் மனிதர்களால் ஏற்படும் அனர்த்தங்களுக்கும் முகங்கொடுக்கும் தங்களை விலங்குகளின் அனர்த்தங்களில் இருந்து பாதுகாக்கும் நோக்கத்தில் இக் கோரிக்கையினை முன்வைத்து எழுச்சி கொண்டனர்.
பல் மனிதர், பல் மதங்களை பின்பற்றுவோர் வாழும் எங்களது நாட்டில் நாங்கள் அனைவரோடும் சமத்துவமாகவும், புரிதலுடனும் வாழ வேண்டும் எனவும், எமக்கு வருகின்ற அனைத்துவிதமான பிரச்சினைகளுக்கும் அதிகாரத்தையும், வன்முறைகளையும் முன்னிலைப்படுத்தாது அவற்றைக் களைந்து அன்பையும், அகிம்சையையும் பின்பற்ற வேண்டும் எனவும், எங்களது எதிர்கால சந்ததியினர் வன்முறைக்குட்படுவதையும், அவர்கள் வன்முறையாளர்களாக உருவாகுவதையும் ஏற்றுக்கொள்ளமாட்டோம் எனவும், அன்பினாலான வாழ்தலை கட்டியெழுப்பி அன்பையும் அகிம்சையையும் எங்களது பண்பாடாக்குவோம் – அன்பினாலான வாழ்தல் காண்போம் என்று கூறி அக்கோரிக்கையின் மூலம் எழுச்சி கொண்டனர். அக்கூடாரத்திற்கு வருகை தந்த அனைவரும் கோரிக்கைகள் இரண்டையும் வாசித்து கையொப்பமிட்டு சென்றனர்.
தொடர்ந்து இப் பிரச்சார ஒன்றுகூடலில் பல நிகழ்ச்சிகளைக் காணக்கூடியதாக இருந்தது. அந்தவகையிலே ஒவ்வொரு குழுக்களும் வெவ்வேறான கலை நிகழ்ச்சிகளை ஆற்றுகை செய்தனர். இதற்கமைய யாழ்பாணம் வல்லமை குழுவினரால் பாடல் மற்றும் மட்டக்களப்பு சமதை பெண்கள் நண்பிகளால் நீதிக்கான பறை இசை அளிக்கை செய்யப்;பட்டது.. முக்கியமாக இந்த நீதிக்கான பறை நிகழ்ச்சியைப் பார்த்ததில் பெருமிதம் கொள்கிறேன். பறை மற்றும் பெண்கள் பற்றிய கட்டுமானம் இங்கு கட்டுடைக்;கப்பட்டு பறை வாசிக்கப்பட்டமை இவ்வெழுச்சியில் முக்கியமான ஒரு நிகழ்ச்சியாக என்னால் பார்க்க முடிந்தது.
சமதை பெண்நிலைவாத நண்பிகளால் 14.02.2015 – நூறுகோடி மக்களின் எழுச்சி அன்று “பெண்களுக்கெதிரான “வன்முறைகளுக்கெதிராக பறையறைவோம்“ என்ற தொனிப்பொருளில் நீதிக்கான பறை ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக இன்றுவரை அவர்களால் முன்னெடுக்கப்பட்டு வருவதை அங்கு அறிந்துகொள்ளமுடிந்தது.
இவற்றுடன் அக்கரைப்பற்று “பாதிப்புற்ற பெண்கள் அரங்கு” றிறுவனத்தினரால் பாடல் பாடப்பட தொடர்ந்து “சாவிஸ்திரி” அமைப்பினைச் சேர்ந்த பெண்களால் பாடல்கள் மற்றும் வசந்தன் ஆட்டத்தை ஒத்த கோல் நடனமும் அளிக்கை செய்யப்பட்டன.
அத்தோடு மூன்றாவது கண் உள்ளுர் அறிவு திறன் செயற்பாட்டு குழுவினர் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை நீக்கி சமத்துவமான வாழ்தலுக்கான பாடலொன்றை பாடினர். அப்பாடல் வரிகள்,
சாதியின்றி மதங்களின்றி பிரிந்தோம் – நாம் பிரித்தோம்
சாந்தியின்றி வாழ்கின்றோமே நாமே……
ஆண் பெண் என்ற ஆணி வேரில் வேரில் – எம் வேரில்
ஆட்டம் காண விடலாமோ நாமே……..
பெண்கள் எல்லாம் மறைந்து போனால் தானே – இவ்வுலகில்
மனித குலமும் வாழுமோ தான் சொல்வீர்……
எனப் பாடினார்கள். இவ்வாறு பல நிகழ்ச்சிகளைப் பார்த்து அனைவரும் மகிழ்ந்தனர்.
குறிப்பாக அன்றைய நாளில் அனைவர் மனதிலும் பதியக்கூடிய நாடகம் ஒன்றை எங்களால் நிகழ்த்தி காட்ட முடிந்தது. அம்மா வீட்டில் சும்மா இருக்கிறா எனும் தொனிப்பொருளில் நாடகம் இடம்பெற்றது. அந்நாடகத்தில் எங்களது வீடுகளில் அம்மா என்பவர் காலையில் எழும்பி இரவு நித்திரைக்கு போகும் வரைக்கும் சும்மா இருப்பதில்லை. அம்மா எங்கள் மீதுள்ள அன்பு பாசத்தில் எங்களுக்காக எத்தனை வேலைகள் செய்கிறார்கள். இது எங்கள் அனைவருக்கும் தெரிந்த விடயம். ஆனால் நாங்கள் யாரும் அம்மா வீட்டில் வேலை செய்கிறவர் என்று சொல்வது இல்லை. சம்பளம் இல்லாமல் வேலை செய்வதை நாம் வார்த்தைகளால் அலட்சியப்படுத்துகின்றோம். அம்மா வீட்டில் செய்யும் வேலைகளுக்கு நாம் பெறுமதி கொடுப்பதில்லை என்பதனை இந்த நாடகம் அழகுற எடுத்துக்காட்டியதுடன் அப்படி அம்மா செய்கிற வேலைகளுக்கு சம்பளம் கொடுக்கிறதாக இருந்தால் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்ற கேள்விகள் அங்கு கூடி இருந்தவர்களிடம் எழுப்பப்பட்டது.
இந் நாடகத்தின் கருப்பொருள் ஒரு பாடல் வாயிலாக வெளிக்கிளம்பியது.
சின்ன பெண்ணா இருக்கும் போது உலகம் தெரியலை எனக்கு எதுவும் புரியல பெண்கள் படும் வேதனைகள் அறிய முடியல – அப்போது அறிய முடியல
அம்மா வீட்டில் இருக்கும்போது சும்மா இருக்கல – என் அம்மா வீட்டில் இருக்கும்போது சும்மா இருக்கல உணவும் செய்து கொடுப்பா படிப்பும் சொல்லிக் கொடுப்பா
அம்மா செய்யும் வேலைக்கோ பெறுமதி இல்ல – ஆனா அம்மா யாரும் வீட்டுல சும்மா இருக்கல
என்ற பாடலுடன் “அம்மா சும்மா இருக்கிறா” என்ற கருத்து மாற வேண்டும் என்று உறுதியாக கூறப்பட்டு நாடகம் நிறைவுற்றது.
தொடர்ந்து இவ் ஒன்றுகூடலில் இறுதிக்கட்டமாக கும்மிப்பாடலுக்கு அனைவரும் இணைந்து வட்டமாக நின்று கும்மி நடனம் ஆடியதோடு, நூறுகோடி மக்களின் சர்வதேச எழுச்சி பாடல் இசைக்கப்பட்டு ஆண்கள் பெண்கள் அனைவரும் ஒன்றுகூடி கரங்களைத் தட்டி மகிழ்ச்சியாக ஆடிப்பாடி ஆரவாரமாக தங்களது எழுச்சியைக் கொண்டாடினார்கள்.
அன்றைய மதிய உணவு தயார் செய்யப்பட்டு அனைவரும் உண்டு மகிழ்ந்தனர். இவற்றுக்கிடையில் இப்பிரச்சார ஒன்றுகூடலில் உள்ளுர் மரக்கறிகள் மற்றும் உள்ளுர் உற்பத்தி கைவினைப் பொருட்கள், தானிய வகைகள், ஆடைகள், பாதணிகள், உணவுப் பண்டங்கள், மூலிகைக் கன்றுகள் போன்றன குறைந்த விலையில் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டிருந்தது.
உணவே மருந்தான காலம் கடந்து மருந்தே உணவாகும் காலம் இது. இக்காலகட்டத்தில் எமது உடலுக்கு தீங்கு விளைவிக்காத, மருந்துகளற்ற உணவுப் பண்டங்களை குறைந்த விலையில் நுகர்வதற்கான வாய்ப்பு அங்கு வந்த அனைவருக்கும் கிடைத்தது.
2025 ம் ஆண்டிற்கான நூறுகோடி மக்களின் எழுச்சி ஒன்றுகூடல் ஆனது மேற்கூறப்பட்ட அனைத்து விடயங்களுடன் நிறைவுற்றது. அந்தவகையில் அவ் ஒன்றுகூடலில் நான் கலந்துகொண்டதை எண்ணி பெருமிதம் அடைகின்றேன்.
ஏனெனில் அங்கு நடைபெற்ற ஒவ்வொரு செயற்பாடுகளும் எங்கள் வாழ்தலின் அர்த்தங்களை புலப்படுத்தியதாகவும், நாம் எவ்வாறான வாழ்க்கையை வாழ விரும்புகின்றோம், அவ்வாழ்தலுக்காக எத்தனை போராட்டங்களை சந்திக்கின்றோம் என்பதனை அறியக்கூடியதாக அன்றைய நாள் அமைந்தது. இனிவரும் காலங்களிலும் இதுபோன்று நூறுகோடி மக்கள் எழுச்சி பிரச்சாரத்தில் கலந்துகொண்டு வன்முறைகளற்ற வாழ்தலை நோக்கி பயணிக்க வேண்டும் என்பது எனது அவா……
எழுவோம் எழுவோம்
எழுவோம் எழுவோம்
ஒன்றாக கூடி
எழுவோம் எழுவோம்