அண்மையில் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளின் பிரகாரம் மணிப்பூர் சட்டப்பேரவையில் ஆட்சியமைக்கும் நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டன. மணிப்பூர் சட்டப்பேரவை சபாநாயகரான பாரதிய ஜனதாக் கட்சியியின் யும்நம் கேம்சந்த் குரல் வாக்கெடுப்பின் மூலம் தேர்வு செய்யப்பட்டார்.
அதன் பின்னர், அவையில் நம்பிக்கை தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ரகசிய வாக்கெடுப்பே நடத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய போதும் சபாநாயகர் அக்கோரிக்கையை நிராகரித்ததனைத் தொடர்ந்து நடைபெற்ற குரல் வாக்கெடுப்பில், 31 சட்டமன்ற உறுப்பிர்கள் பாரதிய ஜனதாக் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தனர். தற்போது மணிப்பூர் சட்டப்பேரவையில் காங்கிரஸின் பலம் 27 ஆக உள்ளது.
முன்னதாக, மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் காங்கிரஸ் 28, பா.ஜ.க 21 இடங்களைக் கைப்பற்றின. நாகாலாந்து மக்கள் முன்னணி 4, தேசிய மக்கள் கட்சி 4, லோக் ஜன சக்தி 1, திரிணமூல் காங்கிரஸ் 1, சுயேச்சை 1 தொகுதியில் வெற்றி பெற்றன.
மணிப்பூர் மாநில முதல்வராக பிரேன் சிங் கடந்த 15-ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் நஜ்மா ஹெப்துல்லா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் மேலும் 8 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.