Home இலங்கைகல்கிசை – காங்கேசன்துறை கடுகதி புகையிரத சேவை 07ஆம் திகதி முதல் ஆரம்பம்!

கல்கிசை – காங்கேசன்துறை கடுகதி புகையிரத சேவை 07ஆம் திகதி முதல் ஆரம்பம்!

by admin

யாழ்ப்பாணம் – கொழும்பு குளிரூட்டப்பட்ட நகர் சேர் கடுகதி புகையிரத சேவையை எதிர்வரும் 7 ஆம் திகதிமுதல் தினசரி சேவையாக கல்கிசையிலிருந்து காங்கேசன்துறை வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாணம் பிரதான புகையிரத நிலைய அத்தியட்சகர் ரீ.பிரதீபன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை (26.06.25) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

பொதுமக்களால் புகையிரத திணைக்களம் மற்றும் துறைசார் தரப்பினரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக குறித்த சேவை முன்னெடுக்கப்படவுள்ளது. இதுவரைகாலமும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் குறித்த புகையிரதம் தனது சேவையை முன்னெடுத்துவந்தது.

இந்நிலையில் எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் கல்கிசை புகையிரத நிலையத்தில் இருந்து காலை 5.15 மணிக்கு தனது சேவையை ஆரம்பித்து,  கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் சென்று அங்கிருந்து 5.45 யாழ்ப்பாணத்தை நோக்கி புறப்படும்  புகையிரதம், யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தை மதியம்  11.49 வந்தடையவுள்ளது. அதன்பின்னர் காங்கேசன்துறையை 12.13 சென்றடையும்.

மீண்டும் மாலை 1.30 க்கு காங்கேசன்துறையிலிருந்து தனது பயணத்தை ஆரம்பிக்கும் குறித்த புகையிரதம் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தை வந்தடைந்து,  அங்கிருந்து 2.12 புறப்பட்டு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை இரவு 8.33 சென்றடையும். அங்கிருந்து கல்கிசையை இரவு 8.55 சென்றடையும்

இதேநேரம் குறித்த கடுகதி புகையிரத சேவைக்கான ஆசன முற்பதிவுகள் அடுத்த ஒரு சில தினங்களில், புகையிரத திணைக்களத்தின் அதிகாரபூர்வ இணையத்தில் முன்னெடுக்க முடியும் என தெரிவித்தார்.

இதேவேளை இது வரைகாலமும் 5.45 க்கு கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி புறப்பட்ட யாழ் தேவி புகையிரதமானது எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் காலை 6.35 மணிக்கு தனது சேவையை ஆரம்பிக்கும் என தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More