குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் தொடர்பில் இலங்கைக்கு மேலதிக கால அவகாசம் வழங்குவது பிழையானது என வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்திலான குற்றச் செயல்கள் தொடர்பில் பொறுப்பு கூறுவதற்கு கூடுதல் கால அவகாசம் வழங்குவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல என இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதலுக்காக இரண்டாண்டு கால அவகாசம் வழங்குமாறு இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது எனவும் நல்லாட்சி அரசாங்கம் இதுவரையில் என்ன செய்திருக்கின்றது என்பதனை முதலில் ஐக்கிய நாடுகள் அமைப்பு ஆராய்ந்து பார்க்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு இதுவரையில் நியாயம் கிடைக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர் உரிய தீர்வுத் திட்டங்களை வழங்காத நிலையில் அரசியல் காரணங்களுக்காக இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்குவது எந்த வகையிலும் பொருத்தமுடையதல்ல என்பதே தமது நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார்.