பாபர் மசூதி- ராமர் கோவில் பிரச்சனைக்கு நீதிமன்றத்துக்கு வெளியே பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என உச்சநீதிமன்றம் இன்று அறிவுறுத்தியுள்ளது. பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கேஹர் தலைமையிலான அமர்வின் முன்பாக விசாரணைக்கு வந்தது. அதன்போது,
“இந்த பிரச்சனை மிகவும் உணர்வுப்பூர்வமானது. இத்தகைய விவகாரங்களில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்பட வேண்டும். நீதிமன்றத்துக்கு வெளியே பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண உச்சநீதிமன்றமும் உதவ தயாராக இருக்கிறது. இவ்வழக்கின் அடுத்த கட்ட விசாரணை மார்ச் 31-ந் தேதி நடைபெற உள்ளது. அப்போது அனைத்து தரப்பும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாமா? இல்லையா? என்பது குறித்து தெரிவிக்க வேண்டும் என, தலைமை நீதிபதி கேஹர் தலைமையிலான அமர்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இன்றைய விசாரணையின் போது மூத்த பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குறுக்கிட்டு, இந்த பிரச்சனையில் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை அனைத்தும் தோல்வியில்தான் முடிவடைந்துள்ளது என சுட்டிக்காட்டினார். ஆனால் உச்சநீதிமன்றமோ, அனைத்து தரப்பும் அமர்ந்து பேசி தீர்வு காண வேண்டும். உச்சநீதிமன்றமே இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை தாங்கும் மத்தியஸ்தரையும் தெரிவிக்கும் எனக் குறிப்பிட்டது.