ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்னுடன் சந்திப்பு நடாத்துவதற்கு, கூட்டு எதிர்க்கட்சியின் பிரதிநிதி சரத் வீரசேகர எவ்வித கோரிக்கையையும் முன்வைக்கவில்லை என ஜெனீவா தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும் படையினர் எவ்வித குற்றமும் இழைக்கவில்லை எனவும் கூறும் வகையிலான அறிக்கை ஒன்றை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்க உள்ளதாக உள்நாட்டு ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.
ரியர் அட்மிரால் சரத் வீரசேகர இது குறித்த அறிக்கையை சமர்ப்பிப்பார் எனவும், அல் ஹூசெய்னை நேரில் சந்தித்து அறிக்கையை ஒப்படைத்து இது குறித்து விளக்கம் அளிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், இவ்வாறான எந்தவொரு ஏற்பாடும் செய்யப்படவில்லை என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளுக்கு சமாந்திரமாக நடைபெறும் துணை நிகழ்வு ஒன்றில் சரத் வீரசேகர உரையாற்றியுள்ள போதிலும் அவர் அமர்வுகளில் எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச பௌத்த புனர்வாழ்வு கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உண்மை நீதி என்ற தொனிப் பொருளிலான நிகழ்வில் சரத் வீரசேகர உரையாற்றியுள்ளார் எனினும் பிரதான நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை எனவும், சயிட் அல் ஹூசெய்னை சந்திக்கவில்;லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.