கால மாறு நீதிப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் பங்கேற்றாலும் விசாரணை செய்ய மாட்டார்கள் என பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஸ டி சில்வா தெரிவித்துள்ளார். வெளிநாட்டு நீதிபதிகள் தொடர்பான விடயத்தை தெளிவுபடுத்த வேண்டியது அவசியமானது என குறிப்பிட்டுள்ள அவர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் 2015ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தில் வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய நாடுகள் நீதிபதிகள் தொடர்பில் குறிப்பிட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் நீதிமன்றக் கட்டமைப்பிற்கு அமையவே வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய நாடுகள் நீதிபதிகள் விசாரணைகளில் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ள அவர் பங்கேற்பார்கள் என்ற பதத்தின் ஊடாக நிபுணத்துவ ஆலோசனை அல்லது கண்காணிப்பாளர்களாகவும் இருக்க முடியும் என்பதனை புரிந்து கொள்ள வேண்டும் எனவும், வெளிநாட்டு நீதிபதிகள் விசாரணை செய்ய மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ காலத்திலும் வெளிநாட்டு நீதிபதிகள் இவ்வாறான பங்களிப்புக்களை வழங்கியுள்ளதாகவும் கண்காணிப்பு மற்றும் நிபுணத்துவ ஆலோசனை என்ற அடிப்படையில் இந்திய முன்னாள் பிரதம நீதியரசர் பகவதி மஹிந்த ஆட்சிக் காலத்தில் பங்களிப்பினை வழங்கியிருந்தார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தாருஸ்மான் அறிக்கையை மற்றுமொரு உதாரணமாக குறிப்பிட முடியும் எனவும், இந்தோனேசியாவின் சட்ட மா அதிபர் ஒருவரே அந்த அறிக்கைக்கு பங்களிப்பு வழங்கியிருந்தார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சில தரப்பினர் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பு என்பதனை வெளிநாட்டு நீதிபதிகள் உள்நாட்டில் வழக்கு விசாரணை செய்வார்கள் என்ற அர்த்தததில் பிரச்சாரம் செய்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
கலப்பு நீதிமன்றம் என்ற பதத்தை சில தரப்பினர் குறுகிய அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தி வருவதாகவும் இது குறித்து மக்கள் தெளிவுடன் இருக்க வேண்டுமேனவும் அவர் கோரியுள்ளார்.