187
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் (JIA) 2026-ஆம் புத்தாண்டின் முதல் நாளான இன்று (ஜனவரி 1, வியாழக்கிழமை) உத்தியோகபூர்வமாக கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது.
விமான நிலைய வளாகத்தில் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டு, கௌரவம் அளிக்கப்பட்டதுடன் நாட்டின் ஒருமைப்பாட்டைப் பறைசாற்றும் வகையில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதனையடுத்து விமான நிலையத்தின் உயர் அதிகாரிகள் முதல் அனைத்து ஊழியர்களும் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, பொதுமக்களுக்கு நேர்மையாகவும் அர்ப்பணிப்புடனும் சேவையாற்றுவதாக உறுதிமொழி (சத்தியப்பிரமாணம்) எடுத்துக்கொண்டனர்.
பிராந்திய ரீதியாக வளர்ந்து வரும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை, இந்தப் புதிய ஆண்டில் மேலும் பல நாடுகளுடனான விமான சேவைகளுடன் இணைப்பதற்கான இலக்குகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் (பலாலி) ஊடாக தென்னிந்தியாவுக்கான விமான சேவைகள் தற்போது சீராக நடைபெற்று வருகின்றன. இந்தப் புதிய ஆண்டில் மேலதிக விமான நிறுவனங்கள் தமது சேவைகளை ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love

