198
என் குடும்பத்தில் ஏற்பட்டது சாதாரண பிரச்சனை. சாதரணமாக தீர்த்து இருக்கலாம்.அதை தீர்க்க தவறியதில், இன்று என் வாழ்க்கை என் மனைவி பிள்ளையின் வாழ்க்கை எல்லாம் வீணாகிவிட்டது என என அச்சுவேலி முக்கொலை வழக்கில் குற்றவாளியாக மன்றினால் தீர்ப்பளிக்கப்பட்ட பென்னம்பலம் தனஞ்செயன் தெரிவித்தார்.
குறித்த வழக்கின் தீர்ப்பு இன்றைய தினம் மேல் நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் வழங்கினார். அதன் போது எதிரியிடம் ஏதேனும் சொல்ல விரும்புகின்றீரா ? என வினாவிய போதே எதிரி அவ்வாறு தெரிவித்து இருந்தார்.
எனது மனைவிக்கும் எனக்கும் இடையில் ஏற்பட்டது சாதாரண குடும்ப பிரச்சனை. அதனை தீர்க்க விரும்பி இருந்தால் சாதரணமாக தீர்த்து இருக்கலாம். அதனை யாரும் செய்யாததால் தான் பாரிய குற்றம் நிகழ்ந்தது. இதனால் என் வாழ்க்கையும் என் மனைவி பிள்ளையின் வாழ்கையும் பாதிப்படைந்துள்ளது. இந்த சம்பவம் மற்றவர்களுக்கு ஒரு படிப்பினையாக அமைய வேண்டும் என மன்றில் தெரிவித்தார்.
தக்க தண்டனை வழங்குங்கள்.
அதனை தொடர்ந்து எதிரியின் மனைவியிடம் ஏதேனும் மன்றில் தெரிவிக்க விரும்புகின்றீரா ? என நீதிபதி வினாவிய போது மூன்று கொலைகளை செய்துள்ளார். அவருக்கு நீங்கள் தான் தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
அதிக இழப்புக்கள் மனைவிக்கே ..
அதனை தொடர்ந்து நீதிபதி தெரிவிக்கையில் , இந்த வழக்கில் அதிக இழப்புக்களை எதிரியின் மனைவியான இந்த பெண்ணே இழந்துள்ளார். எதிரி கூண்டில் நிற்பவர் இந்த நிமிடம் வரை இந்த பெண்ணுக்கு சட்டரீதியான கணவன். அவரால் தனது தாய் , அக்கா , மற்றும் தம்பியை இழந்துள்ளார். இன்று தீர்ப்பினால் தனது கணவனையும் இழக்கின்றார் என தெரிவித்தார்.
பாரிய தண்டனை.
அத்துடன் யாழ். குடாநாட்டையே பதட்டத்திற்கு உள்ளாக்கிய படுகொலை தொடர்பில் துரிதமாக விசாரணைகளை மேற்கொண்டு இரண்டரை வருட கால பகுதிக்குள் தீர்ப்பும் அளிக்கப்பட்டு உள்ளது.யாழ்.மேல் நீதிமன்ற வரலாற்றில் இவ்வாறு பாரிய தண்டனை வழங்கி இன்றைய தினமே தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.
குறித்த வழக்கில் முக்கொலைகளை புரிந்த குற்றசாட்டுக்கு மூன்று மரண தண்டனைகளும் , இருவரை கொலை செய்யும் நோக்குடன் தாக்கி காயமேற்படுத்திய குற்றத்திற்கு 14 வருட கடூழிய சிறைதண்டனையும் , 20 ஆயிரம் ரூபாய் தண்ட பணமும் , 2 இலட்ச நஷ்ட ஈடு விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தீர்பளித்தமை குறிப்பிடத்தக்கது.
வழக்கின் பின்னணி.
கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் 04 ஆம் திகதி அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியை சேர்ந்த மனைவியின் தாயான நி. அருள்நாயகி , மனைவியின் தம்பியான நி. சுபாங்கன் மற்றும் மனைவியின் அக்காவான யசோதரன் மதுஷா ஆகியோரை படுகொலை செய்து, மனைவியான தர்மிகா மற்றும் மனைவியின் அக்காவின் கணவனான யசோதரன் ஆகியோரை படுகொலை செய்யும் நோக்குடன் வெட்டி காயமேற்படுத்தப்பட்டது.
Spread the love