Home இலங்கைவட்டிக்காரர்களிடம் சிக்கிய முன்னாள் போராளி:-கடனை அடைக்க சிறுநீரகத்தை விற்ற பரிதாபம்!

வட்டிக்காரர்களிடம் சிக்கிய முன்னாள் போராளி:-கடனை அடைக்க சிறுநீரகத்தை விற்ற பரிதாபம்!

மன்னார் மூர் வீதியில் அரங்கேறும் கந்துவட்டி அராஜகம்: அதிகாரிகளின் நடவடிக்கை கோரி கதறும் குடும்பம்.

by admin

யுத்தக் களத்தில் காயப்பட்டு, ஒரு கால் முழுவதும் பாதிக்கப்பட்டு, இன்று வாழ்வாதாரத்திற்காக போராடிக்கொண்டிருக்கும் ஒரு முன்னாள் பெண் போராளி, கந்துவட்டி கொடுமையால் தனது சிறுநீரகத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சம்பவம் மன்னாரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மன்னார், மூர் வீதி பகுதியில் வசிக்கும் இப் பெண்மணி, தனது குடும்ப வறுமையைப் போக்கவும், சிறு தொழில் செய்யவும் ‘சீட்டு’ (Siddu) முறையில் பணம் கட்டியுள்ளார்.

ஆனால், சீட்டு ஆரம்பத்தின் கனிவாக நடந்து கொண்ட பெண் குழுக்கள் மற்றும் வட்டி கும்பல்கள்,காலம் செல்ல செல்ல தங்கள் நடவடிக்கையை தொடங்கியுள்ளனர். அவர் வாங்கிய பணத்திற்கு சட்டவிரோதமான முறையில் வட்டிக்கு மேல் வட்டி (Compound Interest) போட்டு, அவரை மீள முடியாத கடன் சுமைக்குள் தள்ளியுள்ளனர்.

மிரட்டலும் உடல் உறுப்பு விற்பனையும்

ஏழ்மை நிலையில் இருக்கும் இப் பெண், மற்றும் இவரது குடும்பம் வாடகை வீடு ஒன்றில் உணவகங்களுக்கு சிற்றுண்டிகளை தயாரித்து வழங்கி வரும் வருமானத்தில் வாழ்ந்து வருகிறார்.

மணலாற்றுப் போர்க்களத்தில் ஒரு கால் முற்றாக பாதிக்கப்பட்ட நிலையில், யாருடைய உதவியுமின்றி உழைக்க நினைத்த இவருக்கு கந்துவட்டி கும்பல் பெரிய முட்டுக்கட்டையாக மாறியுள்ளது.

தொடர் மிரட்டல்கள், அவமானங்கள் மற்றும் “பணத்தை தராவிட்டால் கொலை செய்து விடுவோம்” என்ற அச்சுறுத்தல்களுக்கு பயந்து, வேறு வழியின்றி கொழும்புக்குச் சென்று தனது ஒரு சிறுநீரகத்தை குறைந்த விலைக்கு விற்று அந்தப் பணத்தை வட்டி பணத்துக்காக வழங்கியுள்ளார்.

தீராத கடன் சுமை

சிறுநீரகத்தை விற்று பண தொகையைக் கொடுத்த பின்னரும், அந்த வட்டி கும்பல் “இன்னும் வட்டி மீதமுள்ளது” எனக் கூறி அவரைத் தொடர்ந்து துன்புறுத்தி வருகின்றது.

உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இப்பெண்மணி, தற்போது தற்கொலை எண்ணம் தோன்றும் அளவிற்கு விரக்தியில் உள்ளதாகக் கண்ணீர் மல்க தெரிவிக்கிறார்.

சமூகத்தின் குரல்

மன்னார் மூர் வீதியில் இத்தகைய சட்ட விரோத வட்டித் தொழில் பல குழுக்களால் தங்கு தடையின்றி நடத்தப்பட்டு வருகிறது. இப் பெண்ணைப் போல இன்னும் பல ஏழைப் பெண்கள் அவர்களிடம் சிக்கி, வெளியில் சொல்ல முடியாமல் சித்ரவதைகளை அனுபவித்து வருகின்றனர்.

“என்னைப் போல இன்னும் பல பெண்கள் இங்கே பாதிக்கப்பட்டுள்ளார்கள். எங்களைக் காப்பாற்ற யாரும் இல்லையா?” என அந்தப் பெண் எழுப்பும் கேள்வி அதிகாரிகளின் காதுகளுக்கு எட்டுமா?

பாதிக்கப்பட்ட இப் பெண்ணுக்கும், அவரைப் போன்ற மற்றவர்களுக்கும் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும், இந்த சட்டவிரோத வட்டி கும்பல்கள் மீது உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த பெண்ணுக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் அவரது தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு  கொண்டு உதவிகளை முன்னெடுக்க முடியும்.

தொலைபேசி இலக்கம்-+94 77 763 2388

#Mannar #HumanRights #IllegalMoneyLending #SriLanka #SocialJustice #Lka #JusticeForWomen #FinancialExploitation #TamilCommunity #Kanduvatti #மன்னார் #கந்துவட்டி #உதவி #முன்னாள்_போராளி

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More