மண்டபம் மரைக்காயர்பட்டினம் கடற்கரையில் கியூ பிரிவு காவல்துறையினா் நடத்திய அதிரடி சோதனையில், 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான முந்திரி பருப்பு மூடைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய படகு, 4 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒ மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய படகு, இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுடன் மரைக்காயர் பட்டினம் பகுதியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் தனுஷ்கோடி கடல் வழியாக மண்டபம், வேதாளை, மரைக்காயர் பட்டினம், குந்துகால், களிமண்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக நாட்டுப்படகில் கஞ்சா பீடி இலை பண்டல்கள், முந்திரி பருப்பு, கடல் அட்டை, சமையல் மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மண்டபம் அடுத்த மரைக்காயர் பட்டினம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு பைபர் படகில் பொருட்கள் கடத்த இருப்பதாக கியூ பிரிவு ஆய்வாளர் ஜீவ மணிக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் இன்று அதிகாலை கியூ பிரிவு காவல்துறையினா் மரைக்காயர் பட்டினம் கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மரைக்காயர் பட்டினம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்துவதற்காக வாகனங்களில் கொண்டுவரப்பட்டு உயர் ரக முந்திரி பருப்புகளை ஏற்றி கொண்டிருந்த போது கியூ பிரிவு போலீசார் மடக்கிப் பிடிக்க முயன்ற போது இருவர் கடலில் குதித்து தப்பிய நிலையில் மரைக்காயர் பட்டினம் பகுதியைச் சேர்ந்த ஒருவரை கைது செய்து அவரிடம் இருந்த பொருட்கள் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட 20 க்கும் மேற்பட்ட முட்டைகளை பார்த்த போது அதில் ரூ.15 லட்சம் மதிப்பிலான 620 கிலோ எடை கொண்ட உயர் ரக முந்திரி பருப்புகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து முந்திரி பருப்பு அடங்கிய சாக்கு மூட்டைகள், கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு இரு சக்கர வாகனம், இரண்டு நான்கு சக்கர வாகனம் மற்றும் படகு உள்ளிட்டவற்றை மண்டபம் சுங்கத்துறை அலுவலகத்தில் கியூ பிரிவு காவல்துறையினா் ஒப்படைத்தனர்.

#Mandapam #Ramanathapuram #SmugglingAlert #PoliceAction #Customs #TamilNaduNews

