நடிகரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசனின் அடையாளம் மற்றும் அவரது திரைப்பட வசனங்களை வணிக ரீதியாகப் பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை, மறு உத்தரவு வரும் வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த ‘நீயே விடை’ (Neeiye Vidai) என்ற தனியார் நிறுவனம், கமல்ஹாசனின் உருவம் மற்றும் அவரது படங்களில் இடம்பெற்ற உலகப்புகழ் பெற்ற வசனங்களைப் பொறித்த டி-ஷர்ட்டுகள் மற்றும் சட்டைகளை விற்பனை செய்து வந்தது. தனது அனுமதி இன்றி, தனது அடையாளத்தை லாப நோக்கில் பயன்படுத்துவது தனது ‘ஆளுமை உரிமைக்கு’ (Personality Rights) எதிரானது எனக் கூறி கமல்ஹாசன் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, அந்த நிறுவனம் கமல்ஹாசனின் அடையாளங்களைப் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்திருந்தார். நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது எதிர்மனுதாரர் தரப்பில் (நிறுவனம் சார்பில்) யாரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. இதனைத் தொடர்ந்து, ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை மறு உத்தரவு வரும் வரை நீட்டித்து நீதிபதி ஆணையிட்டார்.
பிரபலமான நபர்களின் பெயர், குரல், புகைப்படம் அல்லது அவர்களை அடையாளப்படுத்தும் தனித்துவமான பாணிகளை அவர்களின் அனுமதியின்றி வணிக ரீதியாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் சட்டப்படியான உரிமையே இதுவாகும். ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் போன்ற பல திரையுலகப் பிரபலங்கள் ஏற்கனவே இத்தகைய பாதுகாப்பை நீதிமன்றம் மூலம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#KamalHaasan #PersonalityRights #HighCourt #CinemaUpdate #CopyrightLaw

