கடவத்தை பகுதியில் இடம்பெற்ற இரட்டைக்கொலைச் சம்பவம் தொடர்பில் சர்வதேச காவல்துறையினரால் (Interpol) தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேகநபர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி, கடவத்தை காவல்துறைப் பிரிவில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இருவர் மீது டி-56 (T-56) ரக துப்பாக்கியால் சுடப்பட்டு கொடூரமான முறையில் இரட்டைக்கொலை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 32 வயதுடைய சியம்பலாபே பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர், மஹர நீதவான் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் நிபந்தனை பிணையில் விடுதலையானாா். எனினும் அவா் நீதிமன்ற உத்தரவுகளைப் புறக்கணித்து சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றிருந்தார். இதனால் அவருக்கெதிராக சர்வதேச ரீதியாக ‘சிவப்பு பிடியாணை’ (Red Notice) பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அவர் மீண்டும் நாடு திரும்பியபோது கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்ட , காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளாா். கடவத்தை காவல்துறையினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், சந்தேகநபரை மீண்டும் மஹர நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
#கடவத்தை #இரட்டைக்கொலை #விமானநிலையம் #கைது #கட்டுநாயக்க #DoubleMurder
#Kadawatha_Shooting_2022 #International_Arrest_Warrant #BIA_Arrest #SriLanka_Crime_Update

