Home இலக்கியம்‘அவிழா தேசம்’ எனும் கவிதை தொகுப்பு!

‘அவிழா தேசம்’ எனும் கவிதை தொகுப்பு!

by admin
குமா விழிநிலவன் என்னும் புனைப் பெயருடன் (குமாரவேல் சர்மிலன்) முதல் இலக்கிய படைப்பாக ‘அவிழா தேசம்’ எனும் கவிதை தொகுப்பை எழுதியுள்ளேன்.
இந்நூல் வெளியீட்டு நிகழ்வானது 06-03-2026 (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2.00 மணியளவில் கிளிநொச்சி, பிரமந்தனாறு மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் பாடசாலையின் அதிபர் திரு பெ.பாலகிருஸ்ணன் (கிளி பிரமந்தனாறு மகா வித்தியாலயம்) தலைமையில் நூல் வெளியீடு செய்யப்படவுள்ளது.
இந் நிகழ்வினை சிறப்பிக்கும் முகமாக பிரதம விருந்தினர்களாக, ஈழத்து கூத்து மீளுருவாக்கச் சிந்தனையின் பிதாமகரும், கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைத்துறை விரிவுரையாளருமான பேராசிரியர் சி.ஜெயசங்கர், மற்றும் அடிப்புற அரங்கச் செயற்பாட்டினை முன்னெடுத்து ஆற்றுகை வெளியிலும் இலக்கிய வெளியிலும் படைப்பாக்கம் செய்நுண்கலைத்துறை முதுநிலை விரிவுரையாளர் திரு சு.சந்திரகுமார் போன்றோர் பங்கு கொள்கின்றனர்.
ஈழத்து இலக்கிய கவிதைத்துறையில் முக்கிய படைப்பாளராகவும் சமூக செயற்பாட்டாளருமான கவிஞர் யோ.புரட்சி மற்றும் பிரமந்தனாறு கிராம சேவையாளர் திருமதி கே.விஜயநிர்மலா மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை உதவி விரிவுரையாளராகவும் கவிஞராகவும் விளங்குகின்ற திரு ச.வில்வரசன் போன்றோர் சிறப்பு விருந்தினர்களாக இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்கின்றனர்.
கௌரவ விருந்தினர்களாக சமாதான நீதவான், கண்டாவளை, கரைச்சிப் பிரதேசசபை உப தவிச்சாளரான திரு பு. சிவகுமார் மற்றும் சமாதான நீதவான், கண்டாவளை, கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர் திருமதி த.செல்வராணி போன்றோரும், நிகழ்ச்சித் தொகுப்பாளராக செல்வி ப. கீர்த்திகா (கொழும்பு பல்கலைக்கழக மாணவி) போன்றோர் பங்கு பற்றி இந்நூல் வெளியீட்டு நிகழ்வைச் சிறப்பிக்கவுள்ளனர்.
இந்நூல் வெளியீட்டு நிகழ்வில் கண்ணகிநகர் கிராம அண்ணாவியார் து. ஸ்ரீதரன் என்பவரால் நெறியாள்கை செய்யப்பட்ட சிந்துநடைக் கூத்தாற்றுகை நிகழ்வும் இடம்பெறவுள்ளது.
இந்நூல் பற்றிய புரிதலைத் தூண்டி வாசகர்களை தயார்படுத்தும் முகமாக,
வாசகர்களே! அனைவருக்கும் மனம் நிறைந்த வணக்கம். உங்களுக்காய் பல நிஜக்கண்ணாடிகள் இத்தொகுப்பின் பக்கம் எங்கும் ஒட்டப்பட்டிருக்கிறது. ஒரு தடவையாவது முகம் காட்டுங்கள், எங்களோடு சேர்த்து உங்களை மேலும் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.
தமிழ் இலக்கிய உலகில் அனைத்து மனித இரசனைக்கும் புத்துணர்வளிப்பவை கவிதை துறையாகும். எப்போதாவது தோன்றும் எண்ணங்களை அவ்வப்போதே சேமித்து எளிய நடையும் குறுகிய வரிகளையும் அலங்காரமாகக் கோர்த்து இரசித்தலின் பரிசாக வழங்குவதே கவிதைக்கும் கவிஞனுக்குமான உறவாகும். அதனால் தான் இந்த முதற்படைப்பு.
அவிழா தேசம் என்றதுமே ஆழமான சிந்தனைகள் தோன்றக்கூடும். ஆயினும் அவை உண்மைதான். தலைப்பிடுவதற்கு முதலாய் வாழ்வை புரிந்து கொள்ளும் அவாவில் உணர்வுகளின் கிறுக்கல்களை சுத்திகரித்து முடிச்சுகள் நிறைந்த தேசத்தின் வழிகளையும் அவைகளை அவிழ்த்திடத் துடிக்கும் கரங்களையும் கவிஞனாய் காணும் கனவோடு இப்படைப்பை ஈன்றெடுத்துள்ளேன்.
நவீனம், காலனியம் எனும் பாதைகளில் அடையாளமாக நின்று கொண்டிருக்கும் எம் பண்பாடுகள் மீதான ஏக்கங்களையும், ஒவ்வொருவருக்கும் இருக்கும் எண்ணப்பாடுகளையும், சூழலின் புரியாப் புதிர்களையும் ஒரு சாதாரண மனிதனின் தேடல் அனுபவமாக வடித்துள்ளேன்.
உரிமைகள், உணர்வுகள், கலாச்சாரப் பண்பாடுகள், பெண்ணியத்துவம், உழைப்பு, உறவுகள், சக ஒற்றுமை என்பவற்றின் வாழ்வோடு படர்ந்துள்ள கறைகள் தேசத்தின் முடிச்சுகளாக நிரம்பிக் காணப்படுகின்றன. சிறுபராயம் முதல் முதுமை முடியும் வரையான பயணங்களின் நினைவலைகளையும், தாய்மொழித் தமிழோடு நாம் கொண்ட நேசமும், அதற்கான கனவுகளும், அர்ப்பணிப்புகளும் எப்போதும் நிரந்தரமானவையாகும். அவற்றின் தடங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இன்றுவரை சுனைத்துக்கொண்டுதான் இருக்கின்றன. அவற்றை சொல்லோடு சொல்வதை சேர்த்தும் சொல்ல முடியாததை சொல்லுக்குள் கோர்த்தும் உங்களோடு சொல்லி இருக்கிறேன். நிச்சயம் உங்களுக்குப் பயனுள்ள படைப்பாக இக் கவிதைத் தொகுப்பு அமையும் என நம்புகிறேன். என்னோடு பயணிக்கும் அனைவருக்கும் நன்றிகள்.
நூலாசிரியர்
விழிநிலவனை காட்டும் அவிழா தேசம்
கவிதை என்பது மாயச்சுழலுக்குள் அல்லது மாயச் சூழலுக்குள் இழுத்து விடும் சுழலும் பம்பரம் போன்றது என்ற நம்பிக்கை பரவலாக உண்டு. கவிதைக்கு பொய்யழகு என்ற கருத்து உற்பத்தியும் நவீன வெகுசனப் பரப்பில் பரவவிடப்பட்டிருக்கிறது. கவிதை என்பது கொடை அது எல்லோருக்கும் வாய்க்காது, கவிதை என்பது வரம் அது இறையருள் பெற்றவருக்கே கிடைக்க வல்லது என்பதெல்லாம் எமது சமூகப் பண்பாட்டுப் பரப்பில் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிற, கட்டவிழ்த்து விடப்பட்டுவருகின்ற கருத்துக்கள் நம்பிக்கைகளாக புத்தியில் பதிய வைக்கப்பட்டிருக்கின்றன. கல்வி, வெகுசன ஊடகம், மதம் என்பவற்றின் மூலமாக வெகுசன மயப்படுத்தப்படும் விடயம் இது.
யதார்த்தத்தில் இருந்து அந்நியப்படுத்தி மாயச் சூழலுக்குள் அல்லது மதி மயக்க சூழலுக்குள் வாழ வைப்பது அதிகாரத்தின், ஆதிக்கத்தின் சுரண்டலுக்கான வலுவானதும், மென்மையானதும், விரும்பத்தக்கதுமான வழிமுறையாக கவிதை உட்பட்ட கலை, இலக்கியம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இதற்கு சமாந்தரமான மாயச் சூழலை அகற்றி யதார்த்தத்தை எதிர்கொள்ளும், எதிர்கொள்ள வைக்கும் கலை இலக்கியங்கள் மக்கள் கலை இலக்கியங்களாக, எதிர்ப்பு இலக்கியங்களாக, விடுதலைக்கான கலை இலக்கியங்களாக, ஒடுக்குமுறைக்கு எதிரான கலை இலக்கியங்களாக, விடுதலை கொண்டாட்டங்களுக்கான இலக்கியங்களாக சமூகங்களின் பல்வேறு மட்டங்களில் இருந்து சவால்களை எதிர்கொண்டு வந்துக் கொண்டிருப்பவையாக காணப்படுகின்றன.
இவ்வாறானதொரு பின்னணியில் விழிநிலவனின் அவிழா தேசம் கவிதைத் தொகுப்பானது கவிதைக்கு மெய்யழகு என்பதன் நிலைப்பாடு கொண்டதாக அமைந்திருப்பது பெரு மகிழ்ச்சிக்குரியது.
யதார்த்தத்தை எதிர்கொள்ளும் அதனை ஆக்கபூர்வமானதாக ஆக்கிக் கொள்ளும் சமூக பண்பாட்டு இலக்கியத்தில் அறிவியல் தத்துவத்திலும், படைப்பாக்க தளத்திலும் விழிநிலவன் போன்ற இளம் படைப்பாளுமைகளின் வருகையும் வளர்ச்சியும் மிகவும் அவசியமானது.
விழிநிலவனின் கவிதைகள் அவரது சிந்தனை, உணர்வு, உணர்ச்சி என்ற மெய்யான கலவையின் வெளிப்பாடுகளாக அமைந்திருப்பது கவிதைக்கு மெய்யழகு என்பதை வெளிப்படுத்தி நிற்கிறது.
வைரத் துகளொத்த சொற்கள் கோர்வையாக்கி கவிதைகளாகி இருக்கின்றன. வாய்மொழி மரபும் எழுத்து மரபும் இணைந்ததொரு வெளிப்பாட்டு முறை அவருடையதாக இருக்கிறது.
விழிநிலவனின் உணர்விலூறிய சிந்தனைகள் மெல்லியதாய் உணர்ச்சியில் தோய்ந்து வீரியம் கொண்ட கவிதைகளாய் பிறப்பெடுத்திருக்கின்றன.
மனிதப் பிறவியாக இந்த சூழலில் வாழ்வாங்கு வாழ்வதற்கான அகமும் புறமுமான தேடலும் வாழ்வுமான பயணத்தின் குரல்களாக விழிநிலவனின் கவிதைகள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
மௌனவாசிப்பிற்கும் உரத்த வாசிப்பிற்குமான இரு வழி ஊடகமாக இக்கவிதைகள் அமைந்திருப்பதும் சிறப்பம்சமாகும். ஈழத்து நவீன கவிதையின் சிறப்பம்சம் விழிநிலவனிலும் படிந்திருப்பது கவிதையின் மக்கள் மைய சமூகப் பரிமாணத்தையும் உணர்ந்து உள்வாங்கி இருப்பதன் வெளிப்பாடே ஆகும்.
விழிநிலவனின் கவிதைகள் அவருக்கேயான சிந்தனை, மொழிவாண்மை, படைப்பாக்கம் என்பவற்றை ஊடறுத்து உள்ளார்ந்த தத்துவ நோக்கின் கீற்றுக்களையும் காதலித்திருப்பதும் சமூக நோக்கிலான நெடும் பயணத்தின் நம்பிக்கையும் மகிழ்ச்சியுந்தரும் தொடக்கமாக அமைந்திருப்பதும் கருத்தில் கொள்ள வேண்டியது.
அவரது மெய்யான வாழ்விற்கான தேடலும் பயணமும் இதனை சாத்தியமாக்கும் என்பது எனது ஆழமான நம்பிக்கை.
நெஞ்சுரமும், கனிவும், கூர்மதியும், படைப்பாக்க வீரியமும் கொண்ட இளைஞன் விழிநிலவன். அவிழா தேசம் கவிதை தொகுப்பில் அவரைக் காணலாம்.
பேராசிரியர் சி ஜெயசங்கர்,
நுண்கலைத்துறை,
கிழக்குப் பல்கலைக்கழகம்,
வந்தாறுமூலை.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More