49
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம்கட்ட அகழ்வாய்வின் 16ஆம் நாள் பணிகள் நேற்று (வியாழக்கிழமை) நீதிமன்ற உத்தரவின் பேரில் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது, புதிதாக மேலும் 08 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்டவற்றில் இருந்து 07 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இந்தப் புதிய கண்டுபிடிப்புகளுடன், செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்று கட்ட அகழ்வாய்வுகளின் மூலமாக இதுவரையில் அடையாளம் காணப்பட்ட ஒட்டுமொத்த மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 283 ஆக உயர்ந்துள்ளது.
இப்பகுதிகளில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் தடயவியல் மற்றும் தொல்லியல் அகழ்வாய்வுகளின்படி, அடையாளம் காணப்பட்ட 283 என்புக்கூடுகளில் 279 எலும்புக்கூடுகள் இதுவரையில் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டு, நீதிமன்றக் கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, நேற்றைய தினம் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளில் இரு குழந்தைகளின் எலும்புக்கூடுகளும் அடங்குவதாகத் களத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஆரம்பமான இந்த அகழ்வுப் பணிகளில், முதற்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட ஆய்வுகளின்போது குழந்தைகள், கைக்குழந்தைகளின் எச்சங்கள் மற்றும் பல்வேறு சான்றுப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், பேராசிரியர் ராஜ் சோமதேவா உள்ளிட்ட நிபுணர்களின் வழிகாட்டலுடன் மூன்றாம் கட்டப் பணிகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love

