160
யாழில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற நிலையில் இந்தியாவில் கைதாகியுள்ள இரு கடற்தொழிலாளர்களையும் இலங்கை அழைத்து வர உரிய தரப்பினர் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வலி.வடக்கு ஊரணி பகுதியில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை படகொன்றில் கடற்தொழிலுக்கு சென்ற இரு கடற்தொழிலாளர்களும் காணாமல் போன நிலையில் 6 நாட்களின் பின்னர் இந்தியாவில் கரையொதுங்கிய நிலையில் இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு கடற்தொழிலாளர்களையும் , அவர்களின் படகு மற்றும் மீன்பிடி உபகரணங்களையும் மீள இலங்கைக்கு கொண்டு வருவதற்கு உரிய தரப்பினர்கள் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கடற்தொழிலாளர்களையும், அவர்களின் படகையும் இலங்கைக்குக் கொண்டு வருவதற்கு கடற்தொழில் அமைச்சு மற்றும் வெளியுறவு அமைச்சு உடனடியாக இந்தியத் தூதரகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அவா்கள் கோாிக்கை விடுத்துள்ளனா்.
மேலும் மனிதாபிமான அடிப்படையில் அவர்களை எவ்வித வழக்குகளும் இன்றி விடுதலை செய்ய இலங்கைத் தூதரகம் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தமது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை நம்பியுள்ள இவர்களை விரைவில் மீட்க உரிய தரப்பினர் முன்வர வேண்டும் எனவும் ஊரணிப் பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
#JaffnaFishermen #IndianCoastGuard #ValikamamNorth #FisheriesMinistry #BorderIssue
Spread the love

