Home இலங்கைஉயிர்த்த ஞாயிறு விசாரணையில் அதிரடித் திருப்பம்: மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 3 பிரதான குற்றச்சாட்டுகள்!

உயிர்த்த ஞாயிறு விசாரணையில் அதிரடித் திருப்பம்: மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 3 பிரதான குற்றச்சாட்டுகள்!

by admin

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளைத் திட்டமிட்டு திசைதிருப்பியமை உள்ளிட்ட மூன்று பிரதான குற்றச்சாட்டுகள், அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளதாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) இன்று (மார்ச் 11) கோட்டை நீதவான் நீதிமன்றில் தெரிவித்தது.

2018ஆம் ஆண்டு வவுணதீவில் இரு காவற்துறை உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டமை மற்றும் 2019 ஏப்ரல் மாதம் சாய்ந்தமருது வீட்டில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகளைத் திட்டமிட்டு திசைதிருப்பியமை இதில் முதல் குற்றச்சாட்டாகும். அத்துடன், இராணுவப் புலனாய்வுப் பிரிவு உறுப்பினர் ஒருவரைப் பயன்படுத்தி, நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி தேவாலயத்தை அடிப்படைவாதிகளுக்கு அடையாளம் காட்டிக் கொடுத்தமை மற்றும் சாரா ஜஸ்மின் என்பவரின் DNA பரிசோதனை விவகாரத்தில் விசாரணை அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்தமை ஆகிய குற்றச்சாட்டுகளும் 25 பக்கங்கள் கொண்ட மேலதிக அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, சுரேஷ் சலே சார்பாக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, இந்தச் சாத்துதல்களை முற்றாக மறுத்துள்ளார். தாக்குதல் இடம்பெற்ற காலப்பகுதியில் சுரேஷ் சலே இலங்கையில் இருக்கவில்லை எனவும், அவர் 2018ஆம் ஆண்டு முதல் மலேசியாவிலேயே தங்கியிருந்தார் எனவும் அவர் நீதிமன்றில் சுட்டிக்காட்டினார்.

ஏற்கனவே பல கட்ட விசாரணைகள் முடிவடைந்த நிலையில், தற்போது சுரேஷ் சலேவுக்கு எதிராகப் புதிய குற்றச்சாட்டுகளை முன்வைப்பது ஒரு பக்கச்சார்பான நடவடிக்கை எனவும், சட்டத்தரணிகளுடன் அவர் பேசும் விபரங்கள் இரகசியமாகப் பதிவு செய்யப்படுவது அடிப்படை உரிமை மீறல் எனவும் அவர் வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதவான் இசுரு நெத்திகுமார, முன்வைக்கப்பட்டுள்ள விடயங்கள் நேரடியாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவை எனக் குறிப்பிட்டதுடன், மேலதிக அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்காக வழக்கை எதிர்வரும் மார்ச் 25ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

#SureshSalley  #EasterAttackInvestigation #CIDReport #SriLankaCourt #IntelligenceFailure

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More