ஈரானின் புதிய உயோன்னதத் தலைவர் மோஜ்தபா காமேனி (Mojtaba Khamenei), கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி தெஹ்ரானில் அவரது தந்தையின் இல்லம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்துள்ளதாகச் சைப்ரஸுக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா சலாரியன் (Alireza Salarian) அதிரடித் தகவலை வெளியிட்டுள்ளார்.
ஈரானின் முன்னாள் தலைவர் அயதுல்லா அலி காமேனி உட்படக் குடும்ப உறுப்பினர்கள் அறுவர் கொல்லப்பட்ட அதே குண்டுவெடிப்புச் சம்பவத்தில், 56 வயதான மோஜ்தபா காமேனியும் சிக்கிப் படுகாயமடைந்துள்ளதாகத் தூதுவர் உறுதிப்படுத்தியுள்ளார். தெஹ்ரானில் உள்ள அயதுல்லா காமேனியின் உத்தியோகபூர்வ இல்லத்தைத் தரைமட்டமாக்கிய அந்தப் பாரிய தாக்குதலின் போது மோஜ்தபாவும் அங்கேயே இருந்துள்ளார். இத்தாக்குதலில் அவரது கைகள், கால்கள் மற்றும் தோள்பட்டைப் பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் சலாரியன் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகங்களில் இந்தத் தகவல் இதுவரை பெரிய அளவில் வெளியாகாத நிலையில், அவர் அதிர்ஷ்டவசமாகவே இந்தத் தாக்குதலில் இருந்து உயிர் தப்பியுள்ளதாகச் சைப்ரஸின் நிகோசியாவில் உள்ள தூதரக வளாகத்தில் வைத்து வழங்கிய நேர்காணலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது தந்தை கொல்லப்பட்ட சில தினங்களிலேயே ஈரானின் புதிய உயோன்னதத் தலைவராகப் பொறுப்பேற்ற மோஜ்தபா காமேனி, காயங்களுடன் பதவியேற்றிருப்பது ஈரானின் அதிகார மையத்திற்குள் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரானியத் தலைமைத்துவம் இந்தத் தகவலை இதுவரை உத்தியோகபூர்வமாகப் பகிரங்கப்படுத்தாத நிலையில், தூதுவரின் இந்த வெளிப்பாடு சர்வதேச அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இத்தாக்குதலால் ஈரானின் உயர்மட்டப் பாதுகாப்புக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பலவீனம் மற்றும் மோஜ்தபாவின் தற்போதைய உடல்நிலை குறித்து உலக நாடுகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.

