மாமியாரை படுகொலை செய்து, மாமனாருக்கு கடும் காயங்களை ஏற்படுத்திய தனது மகனுக்கு உதவியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் தந்தையும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கரவெட்டி பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் குடும்பத் தகராறு காரணமாக கடந்த புதன்கிழமை தனது மனைவியின் தாயாரை வாளால் வெட்டி படுகொலை செய்ததுடன், மனைவியின் தந்தையையும் படுகொலை செய்யும் நோக்கில் தாக்கி கடும் காயங்களை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாக பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகஸ்தராக பணியாற்றும் குறித்த நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட வாளை மறைத்து வைக்க உதவியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் அந்த நபரின் தந்தையாரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர், அவர்களை நேற்று (வியாழக்கிழமை) பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர். விசாரணையைத் தொடர்ந்து, இருவரையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
#கரவெட்டி #படுகொலைவழக்கு #காவல்துறைவிசாரணை #நீதிமன்றம் #விளக்கமறியல் #உள்ளூர்செய்தி

