162
வடமாகாண சபையில் உள்ள ” ஜிஞ்சர் குரூப் ” முதலமைச்சரை துரத்துவதற்காகவே என் மீது குற்றசாட்டுக்களை முன் வைத்தது என வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதன் போது வடமாகாண அமைச்சர்கள் தொடர்பிலான குற்ற சாட்டுக்களை விசாரணை செய்வதற்காக குழு ஒன்று நியமிக்க உள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சபையில் பிரேரணை ஒன்றினை முன் மொழிய இருந்தார்.
அதற்கு சில உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சபையில் நீண்ட நேரம் வாத பிரதிவாதங்கள் நடைபெற்றன.
அமைச்சர்களை விசாரணை செய்ய குழு நியமித்தால் அமைச்சர்களின் சிறப்புரிமை மீறப்படும். – சயந்தன்.
அதன் போது ஆளும் கட்சி உறுப்பினர் கேசவன் சயந்தன் கருத்து தெரிவிக்கையில் ,
அமைச்சர்கள் என்றால் பன்மை அது அமைச்சரவை , எனவே எல்லோருக்கும் கூட்டு பொறுப்பு இருக்கின்றது. அதனை மீற முடியாது. அதேவேளை வெளியில் இருந்து ஒரு குழு வந்து அமைச்சர்களை விசாரணை செய்ய முடியாது. அது அமைச்சர்களின் சிறப்பு உரிமைகளை மீறும் செயற்பாடு.
ஒரு அமைச்சர் மீது குற்ற சாட்டு சபையில் வைத்த போது , அதனை முதலமைச்சர் பெரிது படுத்தாமல் குற்ற சாட்டு வைத்து சில நாட்களில் குறித்த அமைச்சருக்கு ஆதரவாக பொதுக் கூட்டம் ஒன்றில் கருத்து தெரிவித்தார்.
அவ்வாறு இருந்த முதலமைச்சர் தற்போது எல்லா அமைச்சர்கள் குறித்தும் விசாரணை செய்ய போறதாக தெரிவித்து உள்ளமையை ஏற்க முடியாது என தெரிவித்தார்.
குற்றம் செய்தால் தண்டனை அனுபவிக்க வேண்டும். -சிவாஜிலிங்கம்.
அதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்,
குற்ற சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டால் அது விசாரிக்கப்பட வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷே மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணைகள் நீதிமன்றில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்த குற்ற சாட்டுக்காக சிறை சென்று பிணையில் வந்துள்ளார்.
குறித்த குற்றம் நிரூபணம் ஆனால் அவருடைய சொத்துக்கள் கையகப்படுத்த படும் அவருக்கு சிறை தண்டனையும் கிடைக்கும். எனவே குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும்.
முதலில் ஒரு அமைச்சர் மீது குற்ற சாட்டு முன்வைக்கப்பட்டது.அதன் போது முதலமைச்சர் ஆதாரங்களை தரும் படி கேட்டார் எதுவுமே கொடுக்கபப்டவில்லை.
தற்போது சில அமைச்சர்கள் தொடர்பிலான சில ஆதாரங்கள் , தரவுகள் முதலமைச்சரிடம் கிடைக்க பெற்று உள்ளன அவற்றை ஆராய்ந்து விசாரணை செய்ய ஒரு குழுவை அவர் நியமிக்கலாம்.
ஆனால் அந்த குழு தனியே விசாரணை மட்டும் செய்து அறிக்கை தருமா ? அந்த அறிக்கையை வைத்து நாம் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க போறோமா ? இல்லை அறிக்கையை வாங்கி வைத்து விட்டு சும்மா இருக்க போறாமா ? என்பது தொடர்பிலும் தற்போது தீர்மானிக்க வேண்டும். என தெரிவித்தார்..
ஜிஞ்சர் குரூப் முதலமைச்சரை துரத்த முயற்சிக்கின்றது. – ஐங்கரநேசன்.
அதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ,
என் மீதான குற்றசாட்டுக்களை முன் வைக்கும் உறுப்பினர்கள் தானாக முன் வைக்கின்றார்களா ? அல்லது வேறு நபர்களின் தூண்டுதலால் முன் வைக்கின்றார்கள் என்பது குற்ற சாட்டை முன் வைக்கும் உறுபினர்களுக்கு தெரியும்.
வடமாகாண சபையில் “ஜிஞ்சர் குரூப்” என ஒரு குழு உண்டு அது வடமாகாண முதலமைச்சரை வெளியேற்ற வேண்டும். முதலமைச்சருக்கு நாங்கள் யார் என காட்ட வேண்டும் அவருக்கு பாடம் புகட்ட வேண்டும். அதற்கு முதலில் முதலமைச்சருடன் நெருக்கமாக உள்ள ஐங்கரநேசனை துரத்த வேண்டும். அதற்கு ஐங்கரநேசனுக்கு எதிராக ஊழல் குற்ற சாட்டை முன் வைக்க வேண்டும் என வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் விந்தன் கனகரட்னத்தை ஜிஞ்சர் குரூப் அணுகியுள்ளது. அதற்கு விந்தன் கனகரட்ணம் உடன் படவில்லை.
அதனை தொடர்ந்து பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதனிடம் இந்த ஜிஞ்சர் குரூப் சென்று அவருடைய ஆதரவை கேட்டு உள்ளது. அதற்கு பிரதி அவைத்தலைவர் உடன்படாததால் வேறு உறுப்பினர் மூலம் அந்த ஜிஞ்சர் குரூப் தான் நினைத்தை செய்து முடித்துள்ளது.
தற்போது கூட்டு பொறுப்பு சிறப்புரிமை பற்றி கதைப்பவர்கள் அப்போது எங்கே போனார்கள் என சபையில் கேள்வி எழுப்பினார்கள்.
அமைச்சர்கள் மீதான குர்ரசாட்டுக்கான ஆதாரங்கள் கையில் சிக்கியுள்ளன. – முதலமைச்சர்.
அதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த முதலமைச்சர் ,
வடமாகாண சபை உறுப்பினர்கள் 16 பேர் கையொப்பம் இட்டு , அமைச்சர்கள் மீது பல்வேறு வகையான குற்றசாட்டுக்கள் உண்டு , அவர்களை மாற்ற வேண்டும் என கோரி கடிதம் ஒன்றினை கையளித்து உள்ளனர்.
அதேவேளை சில அமைச்சர்கள் தொடர்பிலான குற்றசாட்டுகளுக்கான ஆதாரங்கள் ஆவணங்கள் எனது கைக்கு கிட்டியுள்ளது அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவே குழு நியமித்தேன் என தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து அமைச்சர்கள் மீதான குற்றசாட்டுக்களை விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட குழு தொடர்பிலான வாத பிரதிவாதங்கள் சபையில் நீடித்ததால்,
சபை 16ம் திகதிக்கு ஒத்திவைப்பு.
மற்றுமொரு அமர்வில் இதன் தொடர்ச்சி விவாதத்தை தொடருவோம் என கூறி மாகாண சபை அமர்வை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் எதிர்வரும் 16ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
Spread the love