கட்டுரைகள்

விரைந்து தடுக்க வேண்டிய இரணைமடுமீதான சிங்கள இராணுவ பௌத்த மயப்படுத்தல்!

குளோபல் தமிழ் செய்திகளுக்காக பார்த்தீபன்:-

விரைந்து தடுக்க வேண்டிய இரணைமடுமீதான சிங்கள இராணுவ பௌத்த மயப்படுத்தல்!

கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடுவில் இலங்கை அரச படைகள் புத்த விகாரை ஒன்றை அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை பல்வேறு தரப்பினரிடையேயும் அதிர்ச்சியையும் விமர்சனத்தையும் தோற்றுவித்துள்ளது. 2009 முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் இலங்கை அரச படைகள் இரணைமடுவை பல்வேறு வகையிலும் ஆக்கிரமித்து வருகின்றது. அத்துடன் அதற்கு முன்னரான விடுதலைப் புலிகளின் காலத்தில் தன் போர் இலக்குககளில் ஒன்றாக இரணைமடுவை வைத்திருந்தது. இரணைமடுக்குளத்தையும் அதன் அருகில் அமைந்துள்ள கனகாம்பிகை அம்மன் ஆலயத்தையும் அண்டிய பிரதேசமே சிங்கள, இராணுவ, பௌத்த மயமாக்கப்படுகிறது. இது நன்கு திட்டமிடப்பட்ட, பல்வேறு நோக்கம் சார்ந்த நில அழிப்பு சார்ந்த நடவடிக்கையாகும்.

இரணைமடு உருவான வரலாறு

இரணைமடுக்குளம் கிளிநொச்சி மக்களின் உயிர்நாடி. கிளிநொச்சி என்ற விவசாய மாவட்டத்தின் நீருற்று. கிளிநொச்சி மக்களின் தாகம், பசி தீர்க்கும் தாய். இயற்கை ஆறான கனகராயன் ஆற்றில் உருவாகிய இரண்டு குளங்கள் ஒன்றாக்கப்பட்டு பெரும் நீர் தேக்கமாக உருவெடுத்தமை காரணமாக இரணைமடு என்ற பெயரை இக் குளம் பெற்றது. ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் அதாவது 1866இல் இந்தக் குளத்தை அமைப்பதற்கான திட்டம் வரையப்பட்டதுடன் 1920இல் இரணைமடுக்குளம் முழுமையாகக் கட்டப்பட்டது. இரணைமடுவை மையப்படுத்தியே கிளிநொச்சிக் குடியேற்றம் விரிவடைந்தது. முழுக்க முழுக்க ஒரு விவசாய மாவட்டமாக கிளிநொச்சி அமைவதற்கு இரணைமடுக்குளம் ஆதாரமாக அமைந்தது.

1950களில் யோகர் சுவாமியின் சிந்தனை மற்றும் வழிகாட்டலினால் அக்கால கட்டத்தில் வாழ்ந்த பெரியவர்கள் கனகாம்பிகை அம்மன் ஆலயத்தை உருவாக்கினார்கள். வன்னியில் சித்திரைத் தேர் ஓடிய ஆலயமாகவும் பெரிய தேருள்ள ஆலயமாகவும் மூன்று தேர்களைக் கொண்ட ஆலயமாகவும் நான்குமுறை குடமுழுக்கு கண்ட ஆலயமாகவும் சிறப்பு பெறுகின்றது. அண்மையில் இந்த ஆலயத்தில் 99 அடி கொண்ட மகா கோபுரத்தினை அமைப்பதற்கான அடிக்கல்லும் நாட்டப்பட்து.

வாழ்வியல் மற்றும் பண்பாட்டுப் புலம்

ஆலயங்கள் மக்களின் மத நம்பிக்கை சார் மையங்களாகவும் வாழ்வியல் பண்பாட்டு தடங்களாகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. தமிழ் மக்களிடம் காணப்பட்ட பண்டைய தாய்தெய்வ வழிபாட்டின் தொடர்ச்சியாக, மாபெரும் நீர்த் தேக்கம் என்ற இயற்கையையும் தாய்தெய்வ வழிபாட்டையும் இணைக்கும் கனகாம்பிகை அம்மன் கிளிநொச்சி மக்களின் வாழ்வியல் சார்ந்த நம்பிக்கையாகவும் பண்பாட்டின் அடையாளமாகவும் திகழ்ந்து வளரச்சி பெற்றது.

இந்த ஆலயத்தின் வருடாந்த திருவிழா கிளிநொச்சி மக்களின் பெரும் கொண்டாட்டத்திற்கும் பக்திக்கும் உரிய நிகழ்வாகும். அத்துடன் இரணைமடுக்குளம் கிளிநொச்சி உட்பட வட மாகாணத்தில் தமிழ் மக்களின் சுற்றுலாப் பிரதேசங்களில் ஒன்றாகும். 2009 போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கும் உரிய இடமாக மாறியது. அபூர்வமான இயற்கையை ரசிக்க எவருக்கும் உரிமையுண்டு. ஆனால் சுற்றுலா வரும் தென்னிலங்கைப் பிரயாணிகளுக்காக புத்தர் சிலைகளையும் புத்த விகாரைகளையும் அமைப்பது தவறாகும்.

தமிழ் மக்களின் வழிபாடு சார்ந்த, நம்பிக்கை சார்ந்த, இயற்றை முக்கியத்துவம் மிக்க இடத்தில் அந்தப் பிரதேசத்திற்கு எந்த வித்திலும் தொடர்பற்ற, அந்தப் பிரதேச மக்களின் வாழ்வியல் மற்றும் நம்பிக்கைகளுடன் தொடர்பற்ற மத அடையாளங்களை நிறுவுதல் முரண்பாடுகளை ஏற்படுத்தும் நடவடிக்கை என்பதுடன் அந்தப் பிரதேச மக்களின் வாழ்வியல் மற்றும் நம்பிக்கைகளை ஒடுக்கும் இன அழிப்புச் சார்ந்த செயற்பாடாகும்.

பல்முனை ஆக்கிரமிப்பு

இரணைமடுவை இலங்கை அரச படைகள் பல் வேறு வகையிலும் ஆக்கிரமித்துள்ளமை மக்களிடையே பல்வேறு சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது. போர் முடிவடைந்தபோது இரணைமடுக்குளமும் கனகாம்பிகை அம்மன் ஆலயமும் இராணுவ முகாங்களாலும் காவலரண்களாலும் முற்றுகையிடப்பட்டிருந்தது. தற்போதும் ஆலயத்தின் காணியில் சுமார் ஐந்து ஏக்கர் நிலப் பகுதி இராணுவத்தின் முகாமாக உள்ளது. அத்துடன் அப் பகுதியில் வசித்த மக்களின் காணிகள் பல ஏக்கரில் இராணுவத்தினர் பாரிய படைமுகாமை அமைத்துள்ளனர்.

தமிழ் மக்களின் வணக்கத்திற்குரிய இடமொன்றை, வாழ்வியல் நம்பிக்கையுடன் தொடர்புடைய இடமொன்றில் பாரிய இராணுவமுகாமை அமைத்திருப்பது ஏன்? இலங்கை அரச படைகள் தமிழ் மக்களின் வாழ்வியல் மற்றும் மத நம்பிக்கைகளை இன ரீதியாக ஒடுக்குகிறது. கடவுள்களின் நிலங்களை அபகரிப்பதும், கடவுகள்களின் ஆலயங்களை சுற்றி பாரிய இராணுவமுகாங்களை அமைப்பதும் மாபெரும் ஒடுக்குமுறையல்லவா? மாபெரும் ஆக்கிரமிப்பு அல்லவா? கடவுள்களையே ஒடுக்குபவர்கள் மனிதர்களை என்னசெய்வார்கள்?

கோயிலருகே பாரிய இராணுவமுகாம்

இலங்கையின் இன்றைய அரசு தமிழ் மக்களின் நிலங்களை விடுவிப்பதைப் பற்றியும் தமிழர்களுக்கு உரிமையை கொடுத்திருந்தால் ஆயுதம் ஏந்தியிரார்கள் என்றும் தமிழர்களைப் பற்றிப் பேசிக்கொண்டே வட்டுவாகலில் 617 ஏக்கர் நிலத்தை அபகரித்துள்ளது. இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தில் புத்த விகாரையை அமைக்கிறது. தமிழர்கள் பாவம்! அவர்களின் உரிமைகளை கொடுக்க வேண்டும்! நிலத்தைக் கொடுக்கவேண்டும் என்று சொல்லிக் கொண்டே அவர்களின் உரிமையை மறுப்பதும் அவர்களின் நிலத்தை பிடிப்பதும் வாழ்வியல் – பண்பாட்டு அடையாளங்களை சிதைப்பதும் இன ஒடுக்குமுறையின் – இன அழிப்பின் மிக கொடூரமான அணுகுமுறையாகும்.

இரணைமடுவை அண்டிய பகுதிகளையும் இலங்கை அரச படைகள் ஆக்கிரமிக்க முயற்சித்தன. சாந்தபுரம் பகுதியை ஆக்கிரமிக்க முயற்சித்ததும் அதற்கு எதிராக தமிழ் மக்கள் கடுமையாகப் போராடி அப் பகுதி விடுவிக்கப்பட்டதும் கடந்த காலத்தில் நிகழ்ந்தது. அத்துடன் இரணைமடுவில் அமைக்கப்பட்டுள்ள பாரிய இராணுவமுகாம் அங்கிருந்து உடனடியாக அகற்றப்படவேண்டியது. இது பல வகையிலும் மக்களைப் பாதிக்கிறது. ஆலய காணிகளுக்குள் மக்களின் மத நம்பிக்கைக்கு புறம்பான வகையில் மாமிச உணவுகளை சமைக்கின்றனர்.

ஆலயத்தின் அருகே நிறுத்திவைக்கப்பட்டுள்ள இராணுவ தளபாடங்கள் அப் பகுதி மக்களதும் கோயில் திருவிழாவுக்கு வரும் மக்களதும் மனங்களில் காயத்தை ஏற்படுத்தும் நோக்கில் நிற்கின்றன. கடவுளின் அருகில் போராயுதங்களை நிறுத்திக்கொண்டு கடவுளை இராணுவ முகாமிற்குள் வைத்துக் கொண்டு தமிழர்களுடன் நல்லிணக்கம் செய்கிறோம் என்று இந்த அரசாங்கம் உலகிற்கு காண்பிப்பதைப்போல அநீதி வேறு எங்கேனும் நடக்கிறதா?

பொருளாதாரப் பாதிப்பு

மக்களின் பொருளாதாரப் புலங்களை இராணுவம் ஆக்கிரமிக்கும்போது அவர்கள் பொருளாதார – வாழ்வாதார பின்னடைவை சந்திக்க நேரிடுகிறது. மக்களுக்குச் சொந்தமான காணிகளில் இரணைமடுக்குளத்தில் தண்ணீர் எடுத்து படையினர் விவசாயம் செய்கின்றனர். மக்களின் காணிகளை அபகரித்து இராணுவம் விவசாயம் செய்ய மக்கள் பொருளாதாரத்தில் பின்தங்கி வாழ்கின்றனர். இதனால் அப் பகுதியில் வசிக்கும் விவசாயத்தை நம்பி வாழும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். போரால் பாதிக்கப்பட்ட இந்த மக்கள் தமது வாழ்வாதார தொழிலான விவசாயத்தை மேற்கொண்டு முன்னேறுவதற்கு, இந்தப் பாரிய இராணுவமுகாம் தடையதாக காணப்படுகின்றது.

அத்துடன் இரணைமடுக்குளத்தில் மக்கள் மீன்பிடிப்பதில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அங்கு ஒரு மீன்பிடி சங்கம் ஒன்றுள்ளது. அந்த நிர்வாகத்திடம் குளம் இல்லை. இரணைமடுக்குளத்தை இராணுவே ஆள்கிறது. அங்கு இராணுவம் மீன்பிடியை மேற்கொள்கிறது. இதனால் அதிகம் மீன்கள் கிடைக்கும் பகுதிகளு்ககுச் சென்று மீனவர்கள் மீன்பிடிக்க இயலாது. இதனால் காலம் காலமாக இரணைமடுக்குளத்தை நம்பி வாழும் நன்னீர் பிடியாளர்கள் பெரும் இடையூறுகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

இரணைமடுவின் முக்கியத்துவம்

இரணைமடுவின் முக்கியத்துவம் கருதியே அந் நிலப்பகுதியை அரச படைகள் பலமுனை ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளனர். இரணைமடுவில் ஏற்கனவே குளத்தின் அருகே புத்தர்சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த கட்டமாக இராணுவத்தினர் அபகரித்துள்ள ஆலயக் காணியில் புத்த விகாரைக்கான மதிலை கட்டத் தொடங்கியுள்ளனர். அத்துடன் பாரிய புத்தர் சிலை ஒன்றையும் கட்டியுள்ளனர். தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்வியல் நம்பிக்கை கொண்ட பகுதியில் இவ்வாறு புதிய மத அடையாளங்களை திணிப்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய நடவடிக்கையல்ல. இது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இது மத மற்றும் இன முரண்பாடுகளை ஏற்படுத்தும் நடவடிக்கை. இது ஒரு இனத்தின் மத வாழ்வியல் பண்பாட்டு அடையாளங்களை அழிக்கும் செயல்.

இரணைமடு தொல்லியல் ரீதியாக முக்கியத்துவமான நிலம். 3000 ஆண்டுகளிற்கு முற்பட்ட கற்கால மக்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் உள்ளன. அத்துடன் முதல் மனித குடியிருப்பு பகுதியாகவும் விளங்குகிறது. வன்னி மன்னர்கள் ஆட்சியின்போதும் விடுதலைப் புலிகளின் காலத்தின்போதும் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இருந்துள்ளது. கிளிநொச்சியின் அடையாளமாகவும் அதன் தென்மையை எடுத்துரைக்கும் தொல்லியல் சான்றாகவும் இரணைமடுப் படுக்கை முக்கியத்துவம் பெறுகின்றது.

கனகாம்பிகைக் கோவிலுக்கு அருகில் அமைக்கப்படுகின்ற பௌத்த விகாரை அவ்  ஆலய  நிர்வாகத்தின் அனுமதி இன்றியோ அல்லது மக்களின் விருப்பமின்றியோ அமைக்கப்பட்டதாயின் அது பௌத்த ஆகமத்திற்கு முரணானது  என்று பாலியகொட  கங்காராம பௌத்த விகாரையின்    மதகுரு விமலகனா  தேரர், கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது கூறியிருப்பதை வடகிழக்கை சிங்கள பௌத்த மயப்படுத்தி அடையாள – பண்பாட்டு அழிப்பை மேற்கொள்பவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். மெய்யாகவே பௌதத்தை பின்பற்றும் ஒரு பௌத்த துறவியின் வேண்டுகோளை மெய்யான பௌத்தர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

தமிழ் மக்களின் மத நம்பிக்கை சார்ந்த வாழ்வியல் பண்பாட்டு அடையாளமாக திகழ்வதனாலும் தொல்லியல் முக்கியத்துவத்தை கொண்டிருப்பதனாலும் மீன்பிடி மற்றும் விவசாய வாழ்வாதார புலமாக காணப்படுவதனாலுமே இந்தப் பகுதியை இலங்கை அரச படைகள் சிங்கள, பௌத்த, இராணுவ மயப்படுத்தியுள்ளன. இரணைமடுவை மையப்படுத்தி ஒரு இனத்தை தொல்லியல் ரீதியாகவும், மத ரீதியாகவும் வாழ்வியல் ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ஒடுக்கும் இந்த அநீதிச் செயற்பாட்டை தடுப்பது மிக அவசியமானது. தமிழ் மக்களும், மக்கள் பிரதிநிதிகளும் உடனடியாக இதனை தடுக்கத் தவறும் பட்சத்தில் கிளிநொச்சி மக்களின் வாழ்வும் சரித்திரமும் கேள்விக்கு உள்ளாகுவதுடன் இரணைமடு நீரை நம்பியிருக்கும் யாழ்ப்பாண மக்களின் வாழ்வும் தாகமும் பாரிய ஆபத்தை சந்திக்கும்.

குளோபல் தமிழ் செய்திகளுக்காக பார்த்தீபன்

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.