Home இலங்கை📰 யாழ் பல்கலைக்கழக கறுப்புக்கொடி விவகாரம்: மூன்று மாணவர்களுக்கு அழைப்பு

📰 யாழ் பல்கலைக்கழக கறுப்புக்கொடி விவகாரம்: மூன்று மாணவர்களுக்கு அழைப்பு

by admin

யாழ்ப்பாண  பல்கலைக்கழக வளாகத்தில் சுதந்திர தினத்தன்று தேசிய கொடி இறக்கப்பட்டு கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக, யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு மூன்று மாணவர்களுக்கு விசாரணை அழைப்பு விடுத்துள்ளது. பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர், கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் உள்ளிட்ட மூவரை விசாரணைக்கு வருமாறு, பல்கலைக்கழக பதிவாளர் ஊடாக எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதம் மார்ச் 13ஆம் திகதியிடப்பட்டு, மார்ச் 16ஆம் திகதி காலை 9.30 மணிக்கு விசாரணைக்கு  முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், அந்தக் கடிதம் மாணவர்களுக்கு மார்ச் 17ஆம் திகதியே வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால், விசாரணைக்கு செல்ல வேண்டுமா என்பது குறித்து மாணவர்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தன்று பல்கலைக்கழக வளாகத்தில் தேசியக் கொடி இறக்கப்பட்டு கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு University Grants Commission பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியிருந்தது. அதன்படி, இன நல்லிணக்கப் பிரிவுப் பொறுப்பாசிரியர், மாணவர் ஒழுக்காற்று அதிகாரி மற்றும் தலைமை பாதுகாப்பு அதிகாரி ஆகியோரைக் கொண்ட குழு விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இந்த விசாரணைகளின் அடிப்படையில், சம்பவத்துடன் தொடர்புடையதாக 2 மாணவிகள் உள்ளிட்ட சுமார் 30 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழக மட்ட விசாரணைகளின் போது,  “சிறுபான்மைத் தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு உரிய மதிப்பு வழங்கப்படாத நிலையில், இலங்கையின் சுதந்திர தினம் தமிழர்களுக்கு பொருத்தமான நாளல்ல என்பதை வெளிப்படுத்தவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது” என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினர் இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். டந்த மார்ச் 11ஆம் திகதி   காவல்துறையினா்  பல்கலைக்கழக வளாகத்திற்குள் சென்று  துணைவேந்தர் மற்றும் பதிவாளர் உள்ளிட்டோரிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர் 

இந்த நடவடிக்கைக்கு மாணவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், சம்பவம் இடம்பெற்ற போது பாதுகாப்பு பணியில் இருந்த உத்தியோகஸ்தர்கள் மற்றும் சில மாணவர்களிடமும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

இந்தநிலையில் மாணவர் ஒன்றிய தலைவர்கள் உள்ளிட்ட மூவரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய, அவர்களை விசாரணைக்கு அழைத்துள்ளனா்.  விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

#BlackFlagProtest  #SriLanka #StudentProtest #FreedomDay #UniversityNews  #PoliceInvestigation #HumanRights

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More