167
ஈரானுடனான மோதல் மற்றும் பிராந்திய பதற்றங்களுக்கு மத்தியில், தனது நட்பு நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம் (UAE), குவைத் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கு 16.5 பில்லியன் டொலருக்கும் அதிக மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா அனுமதியளித்துள்ளது.
அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் (Secretary of State) மார்கோ ரூபியோ, பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பற்ற சூழலைக் கருத்திற்கொண்டு, காங்கிரஸின் வழக்கமான ஆய்வு காலத்தைத் தவிர்த்து இந்த விற்பனைக்கு அவசர அனுமதியை வழங்கியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகம் (UAE): சுமார் 8.4 பில்லியன் டொலர் மதிப்பிலான ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள் (Drones), ரேடார் அமைப்புகள் மற்றும் F-16 போர் விமானங்களுக்கான மேம்படுத்தல்களை அமீரகம் பெறவுள்ளது. இதில் குறிப்பாக பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கண்டறியும் THAAD ரேடார் அமைப்புகளும் அடங்கும்.
குவைத்: வான்வழி அச்சுறுத்தல்களை முறியடிக்க உதவும் அதிநவீன ‘Lower Tier Air and Missile Defense Sensor’ ரேடார் அமைப்புகளை சுமார் 8 பில்லியன் டொலர் செலவில் குவைத் கொள்வனவு செய்யவுள்ளது.
ஜோர்டான்: தனது பாதுகாப்புத் திறனை வலுப்படுத்துவதற்காக 70.5 மில்லியன் டொலர் மதிப்பிலான விமானப் பராமரிப்பு மற்றும் தளவாட உதவிகளை ஜோர்டான் பெறவுள்ளது.
ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் பிராந்தியத்தின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மற்றும் உலகளாவிய சந்தைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை எதிர்கொள்ளவும், வளைகுடா நாடுகளின் பாதுகாப்பு கவசத்தை பலப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love

