Home இலங்கைஉலகத்தின் தேநீர் பிரியர்கள் அனைவருக்கும், மலையகப் பெண்களின் நலவாழ்வுக்கான பிரபஞ்சப் பிரார்த்தனை!

உலகத்தின் தேநீர் பிரியர்கள் அனைவருக்கும், மலையகப் பெண்களின் நலவாழ்வுக்கான பிரபஞ்சப் பிரார்த்தனை!

by admin

 

நீங்கள் மிகவும் விரும்பும் தேயிலை வகைகளில் ஒன்றான சிலோன் தேயிலையை உற்பத்தி செய்யும் இலங்கையிலிருந்து, பெண்கள் உரிமைச்செயற்பாட்டாளர்களான நாங்கள் இந்தக் கோரிக்கையை முன்வைக்கின்றோம்.

எங்கள் நாட்களை இனிதாக்கும்; தேநீரை உருவாக்கித் தந்து கொண்டிருக்கும்  மலையகத் தொழிலாளர்களின் வாழ்வு, குறிப்பாகத் தேயிலை உற்பத்தியை உயிர்ப்பாக வைத்திருக்கும் எங்கள்  சகோதரிகளின் வாழ்வு அவ்வளவு இனிமையாக இல்லை. காலனித்துவ ஆட்சியாளர்களால் இலங்கை மலைகளின் ஆதிக்காடுகள் அழிக்கப்பட்டுத் தேயிலைத் தோட்டங்கள் உருவாக்கப்படுவதற்காக இந்தியாவிலிருந்து ஒப்பந்தக்கூலிகளாகக் கொண்டுவரப்பட்ட  தோட்டத் தொழிலாளர்கள், கிட்டத்தடட 200 வருடங்களுக்கு மேலாக, சந்ததி சந்ததியாக நிலமற்ற தொழிலாளர்களாகவே அந்தத் தோட்டங்களுக்குள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழும் மக்கள் அனுபவிக்கும் உரிமைகளை உறுதிப்படுத்த அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படும் சேவைகள் அதேவிதமாக மலையக மக்களுக்குக் கிடைப்பதில்லை. இதற்கு நிலவுரிமை அற்ற நிலைமையும், வாழிடம், கல்வி, உடல் – உளநலம் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கு,  தேயிலைத்தோட்ட உரிமையாளர்களின் அனுசரணையிலும் – தீர்மானங்களிலும் தங்கிவாழும் நிலைமை  காரணமாகும். இவற்றுள் பெண்களின் நிலைமை இன்னமும் மோசமாக உள்ளது. குறைந்த ஊதியத்துக்குச்  சிரமமான சூழலில் தினமும் தேயிலைக் கொழுந்து பறிக்கும் பெண்கள், பால்நிலை சமத்துவமின்மையின் காரணமாக குடும்பங்களிலும் ஏனையதளங்களிலும் ஒடுக்குமுறைகளுடனும் வாழவேண்டியுள்ளது.

இந்தப் பெண்களின் நிலைமை கடந்த 2025 டிசம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய டித்வா புயலிலும் அதன் காரணமான மண்சரிவுகளுக்கும் பின்னர் மிக மோசமாகி விட்டது. வீடுகள் கட்டுவதற்கு பாதுகாப்பற்ற- மலைச்சரிவுகளில்; அமைக்கப்பட்டிருந்த 200 வருடப் பழைய லயன் வீடுகள் பல தோட்டங்களில்  பிளந்தும் இடிந்தும் போய் விட்டன. சில இடங்களில் அவர்களது வாழிடங்களைச் சுற்றி புதிய நீரோடும் பாதைகள் உருவாகியுள்ளன. பாதைகள் இடிந்து விட்டன. பலரும் இன்னமும் தற்காலிகமாக மண்டபங்கனிலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

நாங்கள் எங்கள் மலையக சகோதரிகளின் வாழ்வும், அவர்களின் சமூகங்களின் வாழ்வும் மேம்பட வேண்டும் என்று விரும்புகின்றோம்.

  • மலையகப் பெண்கள் தாங்கள் காலங்காலமாகத் தொழில் செய்து வாழ்ந்த, தமது அடையாளமாகக் கருதும் மலையகத்திலேயே நிலஉரிமை பெற்றவர்களாக வாழ வேண்டும்.
  • பெண்களுக்குப் பாதுகாப்பான இடத்தில், பாதுகாப்பான வீடுகள் – கழிவறைகளுடனான வாழ்தல் வேண்டும்.
  • மலையகப் பெண்கள், அனைத்துத் தளங்களிலும் அவர்களது வாழ்தலை அவர்களே தீர்மானிப்பவர்களாக வாழ வேண்டும்.
  • எந்தத் தளத்திலும் உழைப்புச் சுரண்டலற்ற, வன்முறைகளற்ற வாழ்தல் வேண்டும்.
  • தேயிலைத் தோட்டம், வருமானம் என்பனவற்றை விட பெண்களாக மனிதர்களாக அனைத்து உரிமைகளையும் அனுபவிப்பவர்களாக இந்த நாட்டின் முழுமையான குடிமக்களாக இவர்கள் வாழ வேண்டும்.

நாங்கள் அருந்தும் தேநீருக்கான தேயிலையானது, உழைப்பு சுரண்டப்படாத, வாழ்வு மகிழ்வாக நிறைவாக இருக்கும்; மக்களால் – பெண்களால் எடுக்கப்பட வேண்டும்;.

ஓவ்வொரு சொட்டுத் தேநீர் அருந்தும் போதும் மலையகப் பெண்களின் நலவாழ்வுக்காக சிந்திக்குமாறும்பிரபஞ்சத்திடம் பிரார்த்திக்குமாறும் உங்கள் அனைவரையும் கோருகின்றோம்!

……………………………………………………………………………………………………………………………………………….…………………….

நூறு கோடி மக்களின் எழுச்சி 2026 (One Billion Rising-2026)  நிகழ்வில் சமதை பெண்நிலைவாத நண்பிகளுடன், இலங்கையின் பல்வோறு மாவட்டங்களிலுமிருந்து வருகை தந்த 100 பெண்கள் கையெழுத்திட்டு வெளியிட்ட கோரிக்கை (14.02.2026).

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More