175
அணுவாயுதப் பரவல் தடை ஒப்பந்தத்திலிருந்து (NPT) ஈரான் விலகுவது குறித்து அந்நாட்டு நாடாளு மன்றத்தில் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த பெப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய பாரிய வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து, பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் தாக்குதலில் அப்போதைய ஈரானிய உயர்மட்டத் தலைவர் அலி காமேனி உட்பட 1,340-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஈரானின் அணுசக்தி உரிமைகளைப் பாதுகாப்பதற்கான “அவசரகாலத் திட்டம்” குறித்து தெஹ்ரான் பிரதிநிதி மாலெக் ஷாரியாதி விவரித்துள்ளார். இந்தத் திட்டம் மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது:
அணுவாயுதப் பரவல் தடை ஒப்பந்தத்திலிருந்து (NPT) அதிகாரப்பூர்வமாக விலகுதல்.
2014-ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்த நடைமுறை தொடர்பான சட்டங்களை ரத்து செய்தல்.
ஷாங்காய் கூட்டமைப்பு மற்றும் பிரிக்ஸ் (BRICS) போன்ற நட்பு நாடுகளுடன் இணைந்து அமைதி வழி அணுசக்தி தொழில்நுட்ப வளர்ச்சிக்கான புதிய சர்வதேச உடன்படிக்கையை உருவாக்குதல் என்ற விடயங்கள் முக்கியம் பெற்றுள்ளன.
இந்த நிலையில் அமெரிக்காவின் இலக்குகள் தெளிவற்றதாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறினாலும், ஈரான் அணு ஆயுதத் தரத்திற்கு யுரேனியத்தைச் செறிவூட்டுவதை வொஷிங்டன் நீண்டகாலமாக எதிர்த்து வருகிறது. இதற்குப் பதிலடியாக, ஈரான் தனது ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல், ஜோர்தான், ஈராக் மற்றும் அமெரிக்கத் தளங்களைக் கொண்டுள்ள வளைகுடா நாடுகள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதனால் உலகளாவிய எரிசக்தி சந்தை மற்றும் விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஈரானின் இந்த புதிய நகர்வு சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Spread the love

