142
உக்ரைனின் டொனெட்ஸ்க் (Donetsk) பிராந்தியத்தில் அமைந்துள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த அணை ஒன்றை ரஷ்யப் படைகள் வெடிகுண்டுகள் மூலம் தகர்த்துள்ளன. உக்ரைனிய இராணுவத்தின் விநியோகப் பாதைகளை (Logistics routes) துண்டித்து, அவர்களது முன்னேற்றத்தைத் தடுக்கும் நோக்கோடனேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
குறிப்பாக, மார்ச் 23ஆம் திகதி ராய்ஹொரோடோக் (Raihorodok) கிராமத்திற்கு அருகிலுள்ள சீவர்ஸ்கி டொனெட்ஸ் (Siverskyi Donets) ஆற்றின் மீதான அணை மீது ரஷ்ய விமானப்படையினர் இரண்டு வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதன் விளைவாக, அப்பகுதியில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதோடு, கொஸ்டான்டினிவ்கா (Kostiantynivka) நகருக்கான முக்கிய போக்குவரத்துப் பாதைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த அணை தகர்ப்பினால் டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் குடிநீர் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் இன்னும் இரண்டு வாரங்களுக்கு மட்டுமே போதுமான நீர் இருப்பு உள்ளதாகவும், இதனால் அவசர கால நீர் விநியோகத் திட்டங்களை அறிமுகப்படுத்த பிராந்திய அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2022ஆம் ஆண்டிலும் இதே அணை ரஷ்யாவால் தகர்க்கப்பட்டு, பின்னர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் நிதியுதவியுடன் 2024இல் புனரமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Spread the love

