யாழ்ப்பாணத்தில் சுமார் 1,134 ஏக்கர் பரப்பளவில் 533 கடலட்டைப் பண்ணைகள் இயங்கி வருகிறது என கரையோர நீர்வாழ் உயிரினச் செய்கை விரிவாக்கல் மற்றும் கண்காணிப்புப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். நீர்வாழ் உயிரினச் செய்கை தொடர்பான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் இணைத்தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள பண்ணைகளின் சனநெரிசலைக் குறைத்தல், பூநகரி போன்ற பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோதச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் உள்ளூர் கடற்றொழிலாளர்களின் பாரம்பரியத் தொழில்களுடன் ஏற்படும் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான சுமுகமான பொறிமுறைகளை உருவாக்க வேண்டியதன் அவசியம் உள்ளது.

